தலைநகரைத் தேடிவந்த ஒலிம்பியாட் திருவிழா!

தலைநகரைத் தேடிவந்த ஒலிம்பியாட் திருவிழா!
Updated on
3 min read

காணும் இடமெல்லாம் கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக சென்னையே களைகட்டியுள்ளது. தமிழ் மண்ணுக்கே உரிய மரியாதையுடன் வேட்டி கட்டிய கம்பீரத் ‘தம்பி’கள் கைகூப்பி வருவோரை வரவேற்றுக்கொண்டிருக்கின்றனர்.

விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மண்ணுக்கு ஏற்ப ‘வருக... வருக...தமிழ்நாட்டிற்கு வருக’ என ஏ.ஆர்.ரஹ்மானின் வருடும் இசை, உலகெங்கிலும் உள்ள செஸ் வீரர், வீராங்கனைகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

ஜூன் 28 (இன்று) முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தடபுடலான ஏற்பாடுகளில் ஒரு சிலதான் இவை. உலகின் 187 நாடுகளிலிருந்து 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக இந்தியாவில், ‘நாட்டின் செஸ் தலைநகர்’ எனப்படுகிற சென்னையில் நடைபெறுகிறது.

எத்தனையோ சர்வதேச செஸ் போட்டிகள் இருந்தாலும், ஒலிம்பிக்ஸ் போன்ற உன்னத விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று ஒலிம்பியாட். இவ்வளவுக்கும் கடைசி நேரத்தில், அசாத்தியமான துரித செயல்பாடுகள் மூலமாகவே இந்த செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்திருக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவாக, 2022 பிப்ரவரி கடைசி வாரத்தில்தான் இந்தப் போட்டியை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து வேறிடத்துக்கு மாற்ற உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) முடிவு செய்தது. அதன்பிறகுதான், இந்தியாவும் சென்னையும் இந்தக் காட்சிக்குள் வந்தன.

முதல் வெற்றி: 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற இருக்கும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஹங்கேரி நடத்தவிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் உலக செஸ் கூட்டமைப்பும் அந்த நாடும் கையெழுத்திட்ட தேதி ஜூன் 23, 2021. ஆக, இந்த மாபெரும் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஹங்கேரியின் கையில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இருக்கின்றன.

ஆனால், ரஷ்யாவிலிருந்து ஒலிம்பியாட் மாற்றப்பட்ட வேளையில், அந்தப் போட்டிக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, எங்களால் இந்தத் தொடரை நடத்த முடியும் என நிரூபித்து FIDE-யிடமிருந்து அனுமதியைப் பெற வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே சென்னையின் கையில் இருந்தது. கற்பனைக்கு எட்டாத வகையில், வேகவேகமாக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டுதான் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் சாத்தியமாக்கப்பட்டது. இதுவே சென்னைக்கு முதல் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

அரசின் முழு ஆதரவு: அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளரான பரத் சௌஹான், செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக தமிழக அரசை அணுகியபோது, தாமதமேயின்றி தமிழ்நாடு அரசும் களத்தில் இறங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.92 கோடியை இதற்கென ஒதுக்கி, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டார். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பெருங்கனவும் தொலைநோக்குப் பார்வையுமே இதைச் சாத்தியப்படுத்தியது எனலாம்.

விளையாட்டுத் துறை சார்ந்து பெரும் எத்தனிப்புகளைச் செய்யத் துணியும் முதல்வர்கள் இந்தியாவில் ரொம்பக் குறைவு. 2017 ஆசியத் தடகள சாம்பியன்ஷிப்பை நடத்த இயலாதெனக் கடைசி நிமிடத்தில் ஜார்கண்டின் ராஞ்சி நகரம் பின்வாங்கியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெறும் 90 நாட்களில் ஆசிய சாம்பியன் போட்டித் தொடரை ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் நடத்திக்காட்டினார்.

இந்திய ஹாக்கியின் வளர்ச்சியில் நவீன் பட்நாயக்கின் பங்கைப் பற்றிப் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விளையாட்டை ஒதுக்கித் தள்ளாமல், அதற்காக அசகாய பிரயத்தனங்களை முன்னெடுக்கும் வெகு சில மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பைப் பெற்றதில் ஆச்சரியமில்லை.

சென்னையின் செஸ் பாரம்பரியம்: உலக செஸ் அரங்கில் சென்னையும் தமிழ்நாடும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே இத்தனை பிரயத்தனங்களுக்கும் இந்த மண் உகந்தது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவின் முதல் இன்டர்நேஷனல் மாஸ்டர் மனுவேல் ஆரோன், முதல் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் விஜயலட்சுமி சுப்பராமன் என எல்லாருமே இந்த மண்ணின் மைந்தர்கள்.

இன்றைக்கு இந்தியாவில் 74 கிராண்ட்மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இதில், மூன்றில் ஒரு பங்கு கிராண்ட்மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பள்ளி மாணவனான பிரக்ஞானந்தா இளம் வயதிலேயே இண்டர்நேஷனல் மாஸ்டர், கிராண்ட்மாஸ்டர், உலக சாம்பியன் மேக்னஸ் கார்சனுக்கு எதிரான வெற்றி என சர்வதேச அளவில் புருவங்களை உயரவைத்துக்கொண்டிருக்கிறார்.

வரலாறு அடிப்படையில் இந்த மண்ணுக்கும் சதுரங்கத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டாலும், நம் கண்ணுக்கெட்டிய வகையில் செஸ் விளையாட்டில் தமிழகத்தை இந்திய அளவில் முன்னோடியாக மாற்றிய முன்னத்தி ஏர், மனுவேல் ஆரோன். விஸ்வநாதன் ஆனந்தே இவருடைய மாணவர்தான்.

சதுரங்க மன்னர்களான சோவியத் யூனியனின் உதவியுடன் ‘Tal Chess Club’ சென்னையில் நிறுவப்பட்டதிலும் அதன் மூலம் திறமைகளை ஒருங்கிணைத்து முறைப்படி வீரர்களை வளர்த்தெடுத்ததிலும் மனுவேல் ஆரோனின் பங்கு அளப்பரியது. இப்படிப்பட்ட மனிதர்களும் வாய்ப்புகளும் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு அதிகப்படியாக இருந்ததற்கான பரிசுதான், தற்போது ஒலிம்பியாட்டை நடத்தக் கிடைத்துள்ள வாய்ப்பு.

சாதிக்குமா இந்தியா?: இவ்வளவு உயரங்களை எட்டியுள்ளபோதும் செஸ் ஒலிம்பியாட்டை இந்தியா ஒரு முறைகூட வென்றதில்லை. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா வென்றிருந்தாலும், அது இணையவழியில் குறுகிய கால அளவைக் கொண்டு நடத்தப்பட்ட தொடர் மட்டுமே.

‘கிளாஸிக்’ வகையில் வீரர்கள் நேருக்கு நேராக அமர்ந்து நீண்ட நேரம் ஆடும் வழக்கமான ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதில்லை. 2014 செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி மூன்றாம் இடம்பிடித்திருக்கிறது. ஒலிம்பியாட்டில் இந்தியா பிடித்த உச்சம் இது. ஆனால், இந்த முறை இந்தத் தொடரை இந்தியா வெல்வதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், மற்ற நாடுகளைவிடக் கூடுதலாக அணிகளைக் (3 3) களமிறக்கும் சலுகை இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த அணிகளுக்கு விஸ்வநாதன் ஆனந்துடன் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல வீரர் போரிஸ் கெல்பாண்டும் ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறார்கள். மேலும், வலுவான அணிகளான ரஷ்யா, சீனா போன்றவை இந்த ஒலிம்பியாட்டில் பங்கேற்கவில்லை. இவையெல்லாம் இந்தியாவுக்குச் சாதகமான அம்சங்கள்.

இவ்வளவு பெரிய போட்டியை இவ்வளவு குறுகிய காலத்தில் நடத்துவதைச் சாத்தியப்படுத்தியதே இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையைத் தேடிக்கொடுத்திருக்கிறது. இந்திய அணியும் சிறப்பாக விளையாடி சாதிக்கும்பட்சத்தில், அது ஒரு வரலாற்றுத் தருணமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

- உ.ஸ்ரீராம், சுயாதீனப் பத்திரிகையாளர்

தொடர்புக்கு: sriramanarayanan3199@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in