

5ஜி என்பது என்ன? தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4ஜி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சி 5ஜி. இதன் இணைய வேகம் 4ஜியின் வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும்.
அபரிமித இணைய வேகம், குறைந்த தாமதம், பெரிய வலைப்பின்னல் வசதி, கூடுதலான நம்பகத்தன்மை ஆகிய திறன்களின் மூலம் 5ஜி நெட்வொர்க் பயனர்களுக்குச் சீரான, மேம்பட்ட இணைய அனுபவத்தை வழங்கும். 5ஜி தொழில்நுட்பத்தில் கீழ் அலைவரிசை, நடுத்தர அலைவரிசை, உயர் அலைவரிசை ஆகிய மூன்று அலைக்கற்றைகள் உள்ளன.
இந்த மூன்று அலைவரிசைகளும் தமக்கு என்று தனித்துவச் சிறப்புகளையும் வரம்புகளையும் கொண்டுள்ளன. இந்தியாவில் 5ஜியின் நடுத்தர அலைவரிசையும், உயர் அலைவரிசையும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு ஏலம் ஏன் தள்ளிப்போடப்பட்டது? 5ஜி சேவைகளை இந்தியா 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கத் திட்டமிட்டிருந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி வெளியீடு குறித்த தெளிவான வரைபடத்தை வழங்குமாறு அரசிடம் வலியுறுத்தின.
இருப்பினும் அப்போது பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய இரண்டும் பணப்புழக்கம், நிதி முதலீடு ஆகியவற்றில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தன. ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மட்டுமே 5ஜி நெட்வொர்க் நடைமுறைக்கு வந்தவுடன் சேவைகளை வழங்குவதற்குத் தயார்நிலையில் இருந்தது. இந்நிறுவனங்களோடு அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனமும் தற்போதைய ஏலத்தில் பங்கெடுக்கிறது.
உலகளவிலான பயன்பாடு எப்படி உள்ளது? அமெரிக்காவின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி&டி, டி-மொபைல், வெரைசன் ஆகியவை 5ஜி சேவைகளை வணிகரீதியாக வழங்குவதில் முன்னணியில் உள்ளன. சீனாவின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா யூனிகாம் 2018 இல் 5ஜி வணிகச் சேவையை அறிமுகப்படுத்தியது.
5ஜி சேவை குறித்து சீனா, கொரியா, தாய்லாந்து, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் யுபிஎஸ் குளோபல் நிறுவனம் ஒரு பகுப்பாய்வு மேற்கொண்டது. அதன்படி, 5ஜி சேவையை மக்கள் ஏற்றுக்கொள்வது 4ஜி சேவையைவிட மெதுவாகவே உள்ளது. கொரியா, சீனா ஆகிய நாடுகளில் 5ஜியின் பயன்பாடு சீரான வேகத்தில் உள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இரண்டு நாடுகளிலும் 5ஜியின் ஊடுருவல் 40-42 சதவீதமாக இருக்கிறது. இருப்பினும் தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 5ஜியின் ஊடுருவல் ஒப்பீட்டளவில் மெதுவாகவே உள்ளது. 5ஜியின் ஊடுருவல் வேகம் மெதுவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், அதைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற உடனடித் தேவை மக்களுக்கு இல்லை. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்கு 4ஜி சேவையே போதுமானது.
சிஎன்பிஎன் உரிமம் வழங்குதலும், அதற்கான எதிர்ப்பும் ஏன்? தற்போது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சிஎன்பிஎன் எனும் ‘கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க்’ உரிமத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும். இந்த சிஎன்பிஎன் மூலம் தங்களுக்கு என்று தனியார் நெட்வொர்க்குகளை அவர்கள் உருவாக்கிக்கொள்ள முடியும்.
இதற்கான அலைக்கற்றைகள் 10 ஆண்டுகளுக்கு அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு ஒதுக்கப்படும். சிஎன்பிஎன் சேவைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் மதிப்பு 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். சிஎன்பிஎன் சேவைக்கு விண்ணப்பிக்கும்போது, திரும்பப் பெற முடியாத விண்ணப்பக் கட்டணமாக ரூ.50,000 செலுத்தினால் போதும். அவர்கள் நுழைவுக் கட்டணமோ உரிமக் கட்டணமோ செலுத்த வேண்டியதில்லை.
சிஎன்பிஎன் உரிமம் பெற்றவர் வணிகச் சேவையை வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், ஏலத்தின் மூலம் பெறப்படும் அலைக்கற்றை வணிகச் சேவைகளுக்குத் தகுதியுடையது என்பதால், அதன் விலையோ அதிகம். இருப்பினும், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) இதை எதிர்த்துள்ளது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 5ஜி வணிகத்தில் மறைமுகமாக நுழைவதற்கு இது வழிவகுக்கும் என்று அது கருதுகிறது. 5ஜி அலைக்கற்றையைப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்குவது, அலைக்கற்றையை ஏலத்தில் வாங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வணிக வாய்ப்பைப் பறிக்கும் செயல்; முக்கியமாக, சிஎன்பிஎன் காரணமாகத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்குக் கணிசமான வருவாய் இழப்பு நேரிடும் என்று COAI தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கு 5ஜி எப்படி உதவும்? 5ஜி சேவை நாட்டின் இணையத் தொடர்பை மட்டும் மேம்படுத்துவதில்லை. இது கோடிக்கணக்கான கருவிகளை இணைக்கவும்; அவற்றிலிருந்து தகவல்களை அபரிமிதமான வேகத்தில் சேகரிக்கவும்; சேகரித்த தகவல்களை நிகழ்நேரத்தில் பரிமாறிக்கொள்ளவும் தேவைப்படும் திறன்களை நமக்கு அளிக்கும். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளுக்கு இந்தத் திறன்கள் பெருமளவில் உதவும்.
எண்ணிலடங்கா தரவுகளைக் கணினிகளில் அதிவிரைவில் நிரல்படுத்தும் திறனை இது அறிவியலாளர்களுக்கு வழங்கும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம், உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை வலுப்படுத்தும். இது இந்திய மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதோடு, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3.59 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- முகமது ஹுசைன்