

கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கையின்படி புத்தகம் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டக் குழு, ‘குழந்தைகள் கொழுப்பு உள்ள உணவுகளான முட்டை, இறைச்சி போன்றவற்றைத் தினமும் சாப்பிடுவது உடற்பருமன், ஹார்மோன் பிரச்சினைகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அவற்றை மதிய உணவுத்திட்டத்தில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்’ என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, மாநில அரசிடமும் தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனத்திடமும் (NCERT) சமர்ப்பித்துள்ளது. இந்தக் கருத்து பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; மருத்துவர்களிடமிருந்தும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ அறிவியல் என்ன சொல்கிறது?
எச்சரிக்கும் ‘யுனிசெஃப்’ அறிக்கை
கடந்த ஆண்டில் மத்திய அரசு கொடுத்துள்ள புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சவலைநோயால் (Severe Malnutrition) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாரும் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருக்கின்றனர்.
புரதச்சத்துக் குறைவால் ஏற்படுகிற இந்த நிலைமையால் குழந்தைகளுக்கு நிமோனியா, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் 11 மடங்கு அதிகமாகப் பாதிக்கின்றன. குழந்தை இறப்புகளில் ஐந்தில் ஒன்று இந்த வழியில்தான் நிகழ்கிறது. குழந்தைகளின் இறப்புக்கு முக்கியக் காரணமாகப் புரதச்சத்துக் குறைவு (Protein Energy Malnutrition) காணப்படுகிறது என்று ‘யுனிசெஃப்’ (UNICEF) அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது.
அதேநேரத்தில் சரியான அளவில் புரதச்சத்துள்ள உணவைக் கொடுத்தால் இந்த இறப்புகளை நிச்சயம் தவிர்க்கலாம் எனவும் அது ஆலோசனை கூறியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, உலகில் பல நாடுகளில் ‘யுனிசெஃப்’ யோசனைப்படி வேர்க்கடலை, வெல்லம், பால்பவுடர் கலந்த உடனடிச் சத்துமாவைக் கொடுத்து (Ready-to-use therapeutic food - RUTF) 2020-ல் மட்டும் 50 லட்சம் குழந்தைகள் சவலை நோயிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறது.
முட்டை வழங்கப்படுவது ஏன்?
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கப்படுகின்றன.
தானியங்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் எனப் பல உணவு வகைகள் இருந்தாலும் அவற்றில் எதுவும் முழுமையான உணவு இல்லை. ஆனால், முட்டை முழுமையான உணவு. எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கிற, விலை மலிவான, ஆரோக்கியமான உணவு. இதனால்தான் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை கொடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
‘குழந்தைகள் தினமும் முட்டை சாப்பிட்டால் உடற்பருமன் ஏற்படும்’ என்று கர்நாடக அரசிடம் தரப்பட்ட அறிக்கை தவறானது. முட்டை ஒரு கொழுப்பு ஆயுதமல்ல; அது ஒரு புரதப் பொட்டலம். புரதம் என்பது குழந்தைகளின் தசை வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற ஒரு பேரூட்டச்சத்து (Macronutrient).
முக்கியமாக, சவலைநோய்க்கு முடிவு கட்டுகிற சத்து. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் உடற்பருமனைக் கொண்டுவருவது வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை உள்ளிட்ட மாவுச்சத்துதான். ஆனால், முட்டையில் மாவுச்சத்து மிகவும் குறைவு. 100 கிராம் கோழிமுட்டையில் புரதச்சத்து 12.6 கிராம் இருக்கிறது. ஆனால், மாவுச்சத்து 1.12 கிராம்தான்.
அடுத்து, ‘முட்டையில் இருக்கிற வெள்ளைக்கரு மொத்தமும் புரதம், மஞ்சள்கரு மொத்தமும் கொழுப்பு என்று ஒரு தவறான புரிதலும் இருக்கிறது’. அப்படியில்லை. வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டிலும் சம அளவில் புரதம்தான் இருக்கிறது. வெள்ளைக்கருவோடு மஞ்சள்கருவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால்தான் அதிலிருக்கிற மொத்தப் புரதமும் முழுவதுமாகக் கிடைக்கும்.
உச்சம் தொடும் ‘உயிரிய மதிப்பு’
பல உணவு வகைகளில் புரதம் இருக்கிறது. ஆனால், முட்டையில் இருக்கிற புரதத்துக்குத் தனிமதிப்பு உண்டு. புரதத்தின் தரத்தைக் குறிப்பிட ‘உயிரிய மதிப்பு’ (Biological value) என்றொரு அளவீடு இருக்கிறது. எந்தவொரு சத்தான உணவானாலும், அது செரிமானமாகி, அதில் உள்ள புரதங்கள் அமினோ அமிலங்களாக மாறி, உடலில் சேர வேண்டும். இதைக் குறிப்பதுதான் ‘உயிரிய மதிப்பு’. முட்டையின் ‘உயிரிய மதிப்பு’ 95 சதவீதம்.
மற்ற புரத உணவுகளுக்கெல்லாம் இந்த மதிப்பு 60 முதல் 70 சதவீதம்தான். இப்படி மதிப்புக் குறைந்த புரத உணவுகளால் உடனடியாகச் சவலைநோயைத் தீர்க்க முடியாது. அடுத்து, முட்டையில் உள்ள வைட்டமின்–ஏ, கண் பார்வைக்கு உதவும். பயாட்டின் முடி வளர்ச்சியைக் கூட்டும். லூட்டின், சியாசாந்தைன் எனும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
சூரிய ஒளிக்கு அடுத்ததாக நமக்கு வைட்டமின்-டியை அதிகம் கொடுப்பது முட்டைதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்பு - பல் ஆரோக்கியத்தைக் காக்கும். வைட்டமின்-பி2, பி12 ரத்த உற்பத்திக்குப் பயன்படும். வைட்டமின்-இ பாலினச் சுரப்புகளை மேம்படுத்தும். இரும்பு ரத்தவிருத்திக்கு உதவும்; ரத்தசோகையைத் தடுக்கும். அயோடின் தைராய்டு குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ளும். பென்டோதெனிக் அமிலம் இளநரை ஏற்படுவதைத் தடுக்கும்; நினைவாற்றலை வளர்க்கும்.
முட்டையில் எந்தப் பிரச்சினையும் இல்லையா?
முட்டையில் இருக்கிற கொழுப்பு உடலை வலுப்படுத்துமே தவிரப் பாதிக்காது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது இதயத்துக்கு நல்லது. 100 கிராம் முட்டையில் கொலஸ்டிரால் 373 மி.கிராம் இருக்கிறது. ஆனால், நமக்குத் தினமும் 2,000 மி.கிராம் கொலஸ்டிரால் தேவைப்படுகிறது. ஆகவே 9 மாதம் முதலே குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டை கொடுப்பது நல்லது. சவலைநோயுள்ளவர்களுக்குத் தினமும் 2 முட்டை கொடுக்கலாம்.
முட்டையில் இருக்கிற பிரச்சினை என்று சொல்ல வேண்டுமானால், பண்ணைகளில் கோழிகள் வளர்க்கப்படும் விதத்தைச் சொல்லலாம். இயற்கையாக மண்ணில் வாழும் புழுபூச்சிகளைத் தின்று வளரும் கோழிகளால் பிரச்சினை இல்லை. பல பண்ணைகளில் கோழி வளர்க்க அளவில்லாமல் செயற்கைத் தீவனம், நுண்ணுயிர்க்கொல்லி(Antibiotic) மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இதனால், பயனாளிகளுக்கு நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பாற்றல்(Antibiotic resistance) எனும் ஆபத்து நேர்கிறது. இதைக் கண்காணித்துச் சரிப்படுத்த வேண்டிய கடமை கால்நடை மருத்துவர்களுக்கும், பண்ணை உரிமையாளர் களுக்கும், அரசு இயந்திரத்துக்கும்தான் இருக்கிறது.
இன்றைய நடைமுறையில் குழந்தைகளுக்கு உடற்பருமன் ஏற்படுவதற்கு அவர்கள் அளவுக்கு மீறி இனிப்பு உணவுகளையும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் சக்கை உணவுகளையும் (Junk Foods) சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம். அடுத்து, அவர்களுக்கு உடலுழைப்பு, உடற்பயிற்சிகள் குறைந்துவிட்டதையும் சொல்லலாம்.
இவை குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டுமே தவிர, உடற்பருமனுக்கு முட்டையின் மேல் பழியைப் போடுவது அறிவியலுக்குப் புறம்பானது. எனவே, மதிய உணவில் முட்டை கொடுப்பது தொடர்பில் கர்நாடக அரசுக்குத் தரப்பட்டுள்ள அறிக்கையை மறுபரிசீலனை செய்வது நல்லது.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com