Last Updated : 26 Jul, 2022 07:30 AM

3  

Published : 26 Jul 2022 07:30 AM
Last Updated : 26 Jul 2022 07:30 AM

பட்டினியின் பிடியிலிருந்து எப்படித் தப்பிக்கிறது இந்தியா?

உலகளவில், உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் அல்லது பணவீக்கம், வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்காச்சோளத்தின் விலை 42%, கோதுமையின் விலை 60% அதிகரித்துள்ளது.

ரஷ்ய-உக்ரைன் யுத்தம், இந்த விலைவாசி ஏற்றத்தை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியைக் காட்டிலும், இந்த ஆண்டு ஜனவரியில் வேளாண் விளைபொருட்களின் விலைக் குறியீடு 40% அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கருவூலச் செயலாளர், ‘இது ஏற்கத்தக்கது அல்ல’ என அறிவித்துள்ளார். இங்கிலாந்தில், ‘கடந்த 40ஆண்டுகளில் இல்லாத விலைவாசி ஏற்றம்’ என மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ‘90% வளரும் நாடுகளில், கடந்த ஓராண்டில் மட்டும் வேளாண் விளைபொருட்களின் விலைவாசி 5% அதிகரித்துள்ளது.

இந்த விலைவாசி உயர்வால், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் பல கோடி மக்கள், பசியாலும் பட்டினியாலும் சிக்கித் தவிக்க வாய்ப்பிருக்கிறது’ என ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஏமன், எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், தெற்கு சூடான், காங்கோ, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பல கோடி மக்களுக்கு உணவின்றி, பெரும் சீரழிவைச் சந்திக்கும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

உயரும் விலைவாசி

கரோனா பெருந்தொற்றின் கொடிய தாக்கம், உள்நாட்டு யுத்தங்கள், உள் முரண்பாடுகள் எனப் பல பிரச்சினைகளால், உணவுப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து அதிகரித்தாலும், கோதுமை ஏற்றுமதியில் 30%, சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் 57% பங்களிப்பைச் செய்துவரும் ரஷ்யாவும் உக்ரைனும், கடந்த பிப்ரவரி முதல் சண்டையிட்டுவருவதால், உலக அளவிலான பணவீக்கம் சுமார் 20% அதிகரித்துள்ளது.

உலகின் ஒரு முனையில் உள்ள இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், உலகின் மறு கோடியில் உள்ள பல நாடுகளைப் பாதிக்கின்றன. குறிப்பாக, உணவின்றி அல்லல்படும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, தெற்காசிய - ஆப்பிரிக்க நாடுகளைக் கூடுதலாகப் பாதிக்கிறது.

இந்நிலை ஏன் என்ற கேள்வியை எழுப்பினால், ‘அந்த நாடுகளில் உள்ள மக்கள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்’, ‘தீவிரவாதம் அந்த நாடுகளில் தீர்வதேயில்லை’ என்பது போன்ற பதில்களையே பலரும் கூறுகின்றனர். இது உண்மையா என்று ஆராய்ந்தால் ‘இல்லை’ என்ற தெளிவு கிடைக்கும்.

வறுமை, வேலையின்மை, தீவிரவாதம் போன்றவை பல மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான நிலவரமே. அப்படியிருக்க, அவற்றில் ஒரு சில நாடுகளின் மக்கள் மாத்திரம் உலகின் எங்கோ ஓரிடத்தில் நிகழும் போர்களாலும், விலைவாசி உயர்வாலும் உணவு கிடைக்காமல் பட்டினியால் ஏன் மடிய வேண்டும்? இந்த நாடுகள், தங்கள் உணவு தானிய‌ உற்பத்தியில் தற்சார்பை இழந்ததே இதற்குப் பிரதான காரணம்.

காலனியப் பொருளாதாரம்

உலகெங்கும் காலனி ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில், மேற்குலக நாடுகள் பன்னாட்டு வர்த்தகக் கோட்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்தின. அந்தக் கோட்பாடே சரியான பன்னாட்டுச் சந்தைக் கோட்பாடு என, காலனி நாடுகளில் பட்டப் படிப்புகளிலும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

1817-ல் டேவிட் ரிக்கார்டோ, ‘இரண்டு பொருட்கள், இரண்டு நாடுகளில் உற்பத்திசெய்யப்பட்டால், இரண்டின் உற்பத்திச் செலவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த நாட்டில் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கிறதோ அந்த நாட்டில் அந்த ஒரு பொருளை மட்டுமே உற்பத்திசெய்து, ஏற்றுமதி செய்ய வேண்டும்.

அதுவே லாபகரமானதாக இருக்கும். ஒப்பீட்டுச் செலவு வேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணியாக இருப்பது உழைப்புச் செலவு. அதில் நிபுணத்துவத்தைக் கூட்டி, மேலும் செலவைக் குறைத்து லாபத்தைப் பெருக்க முடியும்’ என்பதே அக்கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டின்படி, காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் ஏற்றுமதி லாபம் தரும் பொருட்களையே உற்பத்தி செய்ய வேண்டும் எனப் பயிற்றுவிக்கப்பட்டன. அதைச் செய்ய கட்டாயப்படுத்தவும்பட்டன. இதன் காரணமாக, மூன்றாம் உலக நாடுகள் பல பொருட்களை உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் இருந்தும், அவை உற்பத்தியைக் கைவிட்டன அல்லது அந்நாடுகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மேற்குலக நாடுகளில் அதிகம் தேவைப்படுபவையாகவும் இருந்தன. ஏற்றுமதிக்கான பண்டங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டு, தங்கள் சுய தேவைக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதைக் கைவிட்டு, அதன் விளைவாக உணவுத் தற்சார்பை இந்நாடுகள் இழந்தன.

பணக்கார நாடுகள் தங்களுக்குத் தேவைப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கையிருப்பையும் கூட்டிக்கொண்டன. காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துப் பொருட்கள், சர்க்கரை, வாசனைப் பொருட்கள் போன்றவை பெரிதும் காலனி நாடுகளான வெப்ப மண்டல, மித வெப்பமண்டல நாடுகளில் உற்பத்தியானவை.

தற்சார்பு இந்தியா

காலனியாதிக்கக் கால நன்மைகளைத் தருவதற்காகக் கட்டமைக்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யூடிஓ), இதே கோட்பாட்டை வேறு மொழியில் மூன்றாம் உலக நாடுகளிடம் எடுத்துக் கூறியது. ‘நிலத்தின் பயன்பாடு, சந்தைத் தேவைகளைச் சார்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்பதே அவ்வமைப்பு விதிகளின் அடிநாதம். இதன்படி செயல்பட்ட மூன்றாம் உலக நாடுகள் பலவும் உணவுத் தற்சார்பை இழந்து, பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

உதாரணமாக, 20 கோடி மக்கள் வாழும் நைஜீரியாவிலும், ஐந்தரை கோடி மக்கள்தொகை கொண்ட கென்யாவிலும், கடந்த 40 ஆண்டுகளில் உணவு உற்பத்தி சுமார் 30% வீழ்ச்சியடைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு மேல் காலனி ஆட்சியின் கீழிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் இந்நிலை இல்லை.

விடுதலைக்குப் பிறகு, இந்தியா உணவு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையப் பல சீரிய முயற்சியை மேற்கொண்டது. ஏகாதிபத்திய நாடுகள் போதித்த பன்னாட்டு வாணிபக் கோட்பாட்டை அப்படியே ஏற்காமல், நம் நாட்டின் தற்சார்புக்கென்று தனி உணவு தானிய உற்பத்திக் கொள்கைகளை வகுக்கத் தொடங்கியது.

இதற்குக் காரணம், இந்தியத் தலைவர்கள் விடுதலை என்றால் சுயசார்பு என்று புரிந்துவைத்திருந்ததே. நாடு சுதந்திரம் அடைந்தவுடனே, ‘உற்பத்தியைப் பெருக்குவோம்’ என்பதே தேசம் தழுவிய முழக்கமாக இருந்தது.

‘பிஎல்480’ என்ற உணவுத் திட்டத்தின் கீழ் உணவுக்காக ஏங்கிக் கிடந்த காலங்கள் மாறிவிட்டன. பசுமைப் புரட்சியால் மண்வளத்தில் ஒரு சில தீங்குகளும் விளைந்தன என்றாலும், அது உணவு உற்பத்தியைப் பெருக்கவும் தன்னிறைவு அடையவும் அது பயன்பட்டது.

2022 ஜூன் நிலவரப்படி, 331.23 மில்லியன் டன் அரிசியும், 311.42 மில்லியன் டன் கோதுமையும் இந்தியாவின் கையிருப்பில் உள்ளன. தனிநபர் ஒருவருக்கு 507.8 கிராம் உணவு தானியத்தை வழங்கும் அளவுக்கு நமது நிலை உயர்ந்துள்ளது. இந்தியா வகுத்துக்கொண்ட தற்சார்புக் கொள்கையும் அதற்கான முயற்சியுமே, இன்று தொற்றுநோய்களும் நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களும் இந்தியாவைப் பெருமளவில் பாதிக்காமல் தடுத்துவருகின்றன.

- நா.மணி, பேராசிரியர் - பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x