

அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (The God of Small Things), கேரளத்தில் அய்மனம் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது. மீனச்சல் என்ற காட்டாறு நாவலின் கதாபாத்திரமாகவே வருகிறது. துயரார்ந்த சம்பவங்களுக்கு இந்த ஆறு சாட்சியாக இருக்கிறது. சிலவற்றில் பங்கெடுத்துக்கொள்ளவும் செய்கிறது. துர்நிகழ்வுகளுக்குப் பிறகு நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எஸ்தா என்கிற எஸ்தப்பன், கல்கத்தாவில் உள்ள அவனுடைய அப்பாவிடம் போய்ச்சேர்வதற்கு மெட்ராஸ் மெயிலில் தனியாக அனுப்பிவைக்கப்படுகிறான். 23 வருடங்கள் கழித்து அய்மனத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறான். அவனைப் பல வருடங்கள் கழித்துச் சந்திக்கும் அவனுடைய இரட்டைச் சகோதரி ராஹேலுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறான். உருவத்தில் அல்ல, இயல்பில்.
ஆனால், 25 வருடங்கள் கழித்து இக்கதையைத் திரும்பப் படிக்கும்போது, முதல் வாசிப்பு பயணித்த அதே அலைவரிசை சற்றும் பிறழாமல் இருக்கிறது எனக்கு. இந்நாவலை உலகத்திலேயே அதிக முறை படித்தவன் என்றும், எஸ்தாவின் இணைப்பிரதி நான்தான் என்றும் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, இது வியப்பை உண்டாக்கவில்லை.
நிரூபிக்க முடியாப் பிணைப்பு
நாவல் வெளிவந்து ஒரு வருடம் கழித்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். ‘வானத்திலிருந்து தலைமேல் விழுந்த சம்மட்டி’யைப் போல என்னைத் தாக்கிய நாவல் இது. எந்த நாவலும் இந்தளவுக்குத் ‘தனிப்பட்ட’ முறையில் என்னை பாதித்ததில்லை. ஒரு நாவலோடு வாசகன் அத்தனை நெருக்கமாக ஒன்றிப்போவதைக் கிறுக்குத்தனம் என்று புறந்தள்ளிவிடவும் முடியாதல்லவா? அந்நாவலுக்கும் எனக்கும் தர்க்கபூர்வமாக நிரூபிக்க முடியாத பிணைப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. முதலிலிருந்து கடைசி வரை நான்கைந்து முறை, அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஏதோவொரு பக்கத்தை விரித்து வைத்து இரவு உணவுக்கு மனைவி அழைக்கும் வரை என 1998 முழுக்க இதை மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். இந்த விநோத வழக்கம் 1999 பாதிவரை தொடர்ந்தது. திரும்பத்திரும்பப் படித்தேன். கடைசியில் பொறுக்க முடியாமல் மனைவி கேட்டுவிட்டார். “ஏன், புரியலையா?” என்று. அதன் பிறகுதான் நிறுத்தினேன்.
அதில் அப்படி என்ன இருக்கிறது எனக் கேட்கலாம். சங்கீதத்தைப் போலவே இலக்கியத்திலும் காரணகாரியங்களை மீறி ஒரு பாடலோ ஒரு படைப்போ நமக்கே நமக்கானதென்று சொந்தமாகிவிடுகிறது. இந்த நாவல், நேர்க்கோட்டில் செல்வது அல்ல. முதல் அத்தியாயத்திலேயே இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார். பிறகு வரும் அத்தியாயங்களில் முதலில் சொல்லப்பட்ட விஷயங்களே விரிவாகச் சொல்லப்படுகின்றன. ஆரம்பத்திலேயே மொத்த கதையும் தெரிந்துவிடுவதால் வாசகருக்கு அடுத்து நடக்கப்போவது தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் சுவாரசியம் குறைவதில்லை. எஸ்தா, ராஹேல் ஆகிய சிறார்களின் உலகம் அவர்களுடைய பார்வையில், அவர்களுக்கே உரித்தான மொழியில் சொல்லப்படும்போது அவர்களின் துயரமும் சந்தோஷங்களும் நம்முடையவை ஆகிவிடுன்றன.
ராயின் இலக்கணப் பிழைகள்
பெரியவர்களை எரிச்சல்படுத்தும் அளவுக்குப் புத்திசாலிக் குழந்தைகள் அவர்கள். அவர்களுக்கும் அவர்களின் தாய் அம்முவுக்கும் வாய்த்த அன்பற்ற, கரிசனமற்ற சூழல், அவர்களுடைய கற்பனைகளுக்கும் குறும்புகளுக்கும் தடையாக இருப்பதில்லை. அவர்களுக்கு அசாதாரண ஆங்கிலப் புலமை இருக்கிறது. சொற்களை வைத்துக் குறும்பு விளையாட்டு விளையாடுகிறார்கள். எல்லாச் சொற்களையும் வலம், இடமாகப் படிக்கிறார்கள். இந்தத் ‘தலைகீழ்’ விளையாட்டு நகைச்சுவைபோலச் சொல்லப்பட்டாலும், அதில் அவர்களின் நிராதரவான நிலையும் நிச்சயமற்ற எதிர்காலமும் தோய்ந்திருக்கிறது. விளையாட்டுகளைப் போல வெகு சீக்கிரத்திலேயே அவர்களுடைய வாழ்க்கையும் தலைகீழாய்ப் புரட்டிப் போடப்படுகிறது. அறியா வயதில் இருக்கும் அப்பாவிச் சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் நடக்கிறது. சமூகத்தை மீறிய அவர்களுடைய அம்மாவின் காதல் பல துர்ச்சம்பவங்களுக்குக் காரணமாகி, ஒரு அப்பாவி கொல்லப்படுகிறார். அவரது குடும்பமும் சிதைகிறது.
இந்நாவல் உலக அளவில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்ததற்கு முதல் காரணம், அருந்ததி ராயின் அலாதியான மொழிநடை. இதனால் கனமும் துயரமும் செறிந்த நாவலை, வேடிக்கையும் குறும்பும் கலந்த வண்ணமயமான ஆங்கிலத்தில் எழுத முடியுமா என்கிற வியப்பை ஆங்கில எழுத்தாளர்கள், விமர்சகர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்தியது. எளிதில் வகைப்படுத்த முடியாத நாவலாசிரியராகவே ராய் பலருக்கும் தெரிந்தார். வேண்டுமென்றே இலக்கணப் பிழையான வாக்கியங்களை எழுதுவது, தவறான இடங்களில் தலைநீட்டும் தலைப்பெழுத்துக்கள், வினைச்சொற்களாக உருமாறும் பெயர்ச்சொற்கள் என ராய் நடத்தும் வார்த்தை விளையாட்டு சிலருக்குக் கவனஈர்ப்பு உத்திகளாகத் தெரிந்தன. கணக்கற்ற முறை வாசித்து, நாவலின் அத்தனை வரிகளும் ராயின் குரலிலேயே தமிழில் அடிமனத்தில் பதிந்திருந்த எனக்குச் சற்றும் எதிர்பாராத விதமாக மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது, நாவலே என்னோடு பிணைத்துக்கொள்ள வந்திருப்பதாகத் தோன்றியது. மிகவும் சிக்கலான மொழிநடையைக் கொண்ட இந்த நாவலை ஆறே மாதங்களில் சொந்த நாவல் எழுதுவதைப் போல மொழிபெயர்த்து முடித்தேன்.
முகம் மாற்றும் மொழி
அருந்ததி ராயின் ஆங்கிலம், வரிக்கு வரி முகத்தை மாற்றிக்கொள்ளும். ஒரு வரிக்கு அடுத்து, மிகக் கூர்மையான பகடியோ சிலேடையோ பளிச்சிடும். எஸ்தாவைப் பின்தொடரும் வரிகளில் அவனது குறும்புத்தனம் ராயின் மொழியிலும் பிரதிபலிக்கும். நாவல் முழுக்க இந்த விநோதப் பிரயோகங்கள் வந்துகொண்டே இருக்கும். இத்தகைய இலக்கணப் பிழையான ஆங்கிலத்தை எந்த மொழியிலும் மூலப்பிரதியின் தொனியிலேயே மொழிபெயர்ப்பது சவாலான ஒன்றுதான். இந்தச் சவால் எனக்குச் சுவாரசியமாக இருந்தது.
முதல் முறையாக ராயைச் சந்தித்தபோது நாவல் எனக்குள் இறங்கியிருக்கும் மாயத்தை மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தேன். எஸ்தாவைப் பற்றிச் சொல்லியபோது அவரின் அகலமான கண்களில் நீர் திரையிடுவதைக் கண்டு திடுக்கிட்டுப் பேச்சை மாற்றினேன். அனுமதிக்கப்படாத எல்லைக்குள் பிரவேசித்துவிட்டேனோ என்று சங்கடமாக இருந்தது. அவர் அவ்வாறு நினைக்கவில்லை என்பது அடுத்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. அவரது புதிய கட்டுரைத் தொகுப்பில் ‘To Kuppuswamy, Who is inside my head’ (என் தலைக்குள்ளிருக்கும் குப்புசாமிக்கு) என்று எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தார். ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் எனது பிரதியில் For Kuppuswamy Esthappen, With Love, Arundhati Rahel (குப்புசாமி எஸ்தப்பனுக்கு, அன்புடன் அருந்ததி ராஹேல்) என்று அவர் எழுதியதை வாசித்தபோது என் கண்களில் நீர் திரையிட்டது.
‘சின்ன விஷயங்களின் கடவு’ளுக்குப் பிறகு, ராயின் அடுத்த நாவல் உள்பட வெவ்வேறு ஆசிரியர்களின் பத்து நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், எனது ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாக ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை மட்டுமே சொல்வேன். எழுத்தாளரின் தலைக்குள்ளிருக்கும் எஸ்தப்பனால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை வேறொன்று எப்படிக் கடந்து செல்ல முடியும்?
- ஜி.குப்புசாமி, ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com