

ஊறுபாடில்லாத தன் வெள்ளந்தித்தனத்தால் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் ஜீவனாகத் தொடர்பவர் எழுத்தாளர் கோணங்கி. உணவு, தங்கும் இடம், முறையான பயணப் போக்குவரத்து எனச் செளகர்ய வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளைக்கூட எதிர்பார்க்காத இலக்கிய நாடோடி அவர்.
ஆயிரத்துச் சொச்சம் பேர் புழங்கும் தமிழ்த் தீவிர இலக்கியத்தைச் சிறுதெய்வ வழிபாட்டுடன் ஒப்பிட்டால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் இதன் வழிபாட்டுச் சடங்குகளில் இவருக்குத்தான் பரிவட்டம். சமயங்களில் பூசாரியாகவும் இருப்பார். துடியான இலக்கியப் பிரசங்கங்கள் நிகழ்த்துவார். இம்மாதிரி தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்குத் தன் ஜோல்னா பையுடன் புறப்பட்டுவிடுவார். புதிதாக எழுத வருபவர்களை ‘நீதான் அடுத்த தலைமுறைப் படைப்பாளி’ என மனதாரப் பாராட்டும் - தமிழ் இலக்கியவாதிகளிடம் இல்லாத - அபூர்வமான குணம் கோணங்கிக்கு உண்டு. தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ் நவீனக் கவிதை உலகுக்குத் தான் நடத்தும் ‘கல்குதிரை’ இதழைத் தளமாக ஆக்கிக் கொடுத்துள்ளார். இன்றைய இளம் தலைமுறைக் கவிஞர்கள் பலரும் அந்த இயக்கத்தின் தொடர்ச்சி என அறுதியிட்டுச் சொல்லலாம்.
இளையவர், மூத்தவர் என்கிற வித்தியாசம் இன்றி அவருக்குப் பிடித்துவிட்டால், இந்தியாவின் எந்த முடுக்கில் இருந்தாலும் எழுத்தாளர்களைத் தேடி அவர் புறப்பட்டுவிடுவார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதத் தொடங்கிய காலத்தில், மத்திய அரசுப் பணியில் இருந்த அவரை காசர்கோட்டுக்குப் போய்ச் சந்தித்ததை ஜெயமோகன் பகிர்ந்திருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே சகஜமாகப் பேசத் தொடங்கும் அவருக்கு வளர்ந்த நென்மேணிக் குணம். அதனால்தான் தமிழில் ‘தந்தை’ என்ற சொல்லுக்கு நிகராகத் தீவிர இலக்கியத்தில் ‘அண்ணன்’ என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் கோணங்கி.
தீவிர இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சமூக முரண்பாடு கோணங்கிக்கு எப்போதும் இருந்ததில்லை. பள்ளிக் கல்விகூட முடிக்காத, நாளிதழ் படிக்கும் பழக்கம்கூட இல்லாத என் நண்பர் ஒருவருடன் கோணங்கிக்குப் பிடித்த மாவிலோடைச் சேவுடன் கோவில்பட்டி காந்தி நகர் வீட்டுக்குப் பத்துப் பண்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது நவீன நாடக இயக்குநரும் கோணங்கியின் தம்பியுமான முருகபூதியின் நாடகம் பற்றி கோணங்கியும் நண்பரும் ஒரு மணி நேரம் பரஸ்பரம் உரையாடல் நிகழ்த்தியது இன்றும் நினைவில் இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி ஆங்கில இதழ் பட்டியலிட்ட முக்கியத்துவம் மிக்க மனிதர்களில் கோணங்கியும் ஒருவர் என்பது நினைவுக்கு வருகிறது.
எப்போதும் கதைகளை மடக்கிச் சுருட்டிக் கக்கத்தில் வைத்திருப்பதுபோலப் பேசும் இயல்புடையவர். விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி நாவல் அளவுக்கு விரிவுகொள்ளும் கதையை, சென்னை பெருநகரப் பூங்கா ஒன்றில் கதவு அடைக்கும் வரை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கரிசல், தேரி, வைப்பாற்றின் வண்டல் என மண் மீதான காதலை ஒரு பாம்பு அந்த மண் பரப்பில் ஊர்வது போன்ற உணர்வில் கைகளை அசைத்துச் சொல்லியிருக்கிறார்.
கோணங்கியின் தொடக்க கால ‘மதினிமார்கள் கதைகள்’ கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சி எனச் சொல்லலாம். ஆனால், அதன் பிறகு தன் கதைகளுக்கான விவரிப்பு மொழியை கோணங்கி பதப்படுத்தித் தீட்டிக்கொண்டார். எழுத்தாளர் பூமணி நவீனப்படுத்திய கரிசல் மொழியின் தொடர்ச்சி என்று கோணங்கியை இப்போது வரையறுக்க முடியாது. நிலம், தொன்மம் ஆகியவை மீதான பிடிப்பு அவரது கதைகளுக்கு உண்டு. ஆனால், அதன் மொழி அவர் உருவாக்க முயலும் உள் மனத்தின் திட்டுத்திட்டான சர்ரியலிசத் தீற்றல்கள். தமிழில் அதிகம் விவாதத்துக்குள்ளான மொழியைச் சில பதிற்றாண்டுகளாகக் கோணங்கி அடைகாத்து வருகிறார். இந்த அம்சத்தில் தமிழ்த் தீவிர இலக்கிய மரபும் கோணங்கியும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள். அந்த இயக்கத்தின் ஜீவனுள்ள வடிவம், கோணங்கி. அந்த வகையில் எழுத்தாளர் கோணங்கிக்கு தமிழ்நாடு நாளை முன்னிட்டுத் தமிழக அரசு அளித்திருக்கும் இலக்கிய மாமணி விருது, தமிழ்த் தீவிர இலக்கியத்துக்கானது எனப் பெருமை கொள்ளலாம்.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in