

கடந்த ஞாயிறு அன்று நாடு முழுவதும் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வானது பாடத்திட்டம், கேள்விகள் என எல்லாவற்றையும் தாண்டி, வேறொரு விவாதத்தை இம்முறை எழுப்பியிருக்கிறது.
கேரளத்தின் கொல்லத்தில் ஒரு தேர்வு மையத்தில் மாணவி ஒருவரைச் சோதித்தபோது, அவரது உள்ளாடையில் கொக்கி இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக உள்ளாடையைக் கழற்ற வேண்டும் என்று அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.
தேர்வுக்கான விதிமுறைகளில் உள்ளாடைகள் குறித்து எவ்விதக் குறிப்புகளும் இல்லை என்பதால், தனது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மாணவியின் தந்தை. அம்மாநிலத்தின் மனித உரிமை ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளன.
மத்திய கல்வித் துறை அமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தேர்வு மைய நிர்வாகத்தைக் கண்டித்துத் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டபோது, மாணவிகள் காதணிகளையும், கழுத்தணிகளையும் அணிந்துவர அனுமதிக்கப்படவில்லை. அணிந்துசென்றவர்களும் அவற்றைக் கழற்றிய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
எந்த வகையான காலணிகளை அணிந்துவர வேண்டும் என்றும்கூட கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இந்த முறை நடந்திருப்பது மாணவர்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் படுமோசமான உளவியல் தாக்குதலாகக் கருதப்படுகிறது. தேர்வெழுதும் ஒரு மாணவர் தன்னை மிகவும் இயல்பாக உணர வேண்டும் என்பதும் பதற்றத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதும் எந்தவொரு தேர்வுக்கும் பாலபாடம்.
உள்ளாடை அணிவதைத் தனக்கு வசதியாக உணரும் ஒரு மாணவரிடம் அவற்றை அகற்றுமாறு கோருவது அதுவும் சங்கடத்துக்கு உள்ளாக்கும்வகையில் அறிமுகமில்லாத அறைகளில் அகற்றச்சொல்வது என்பது தேர்வெழுதும் அவரது மனநிலையை முற்றிலுமாகச் சிதைத்து அழிக்கக் கூடிய வாய்ப்புகள் கொண்டது.
முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லாதவகையில் நேர்மையாகவும் சந்தேகத்துக்கு இடமளிக்காதவாறும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற தேசியத் தேர்வு முகமையின் நோக்கம் சரிதான்.
ஆனால், அதற்காகத் தேர்வெழுதும் மாணவர்களை நடத்துவதில் இவ்வளவு கடுமைகள் காட்டத் தேவையில்லை. தேசியத் தேர்வு முகமை நடத்தும் மற்ற தேர்வுகளிலும்கூட இத்தன்மையைப் பார்க்க முடிகிறது.
உதவிப் பேராசிரியர்களுக்கான தேசியத் தகுதித் தேர்வுகள் முன்பெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழுவால் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் கண்காணிப்புடன் நடத்தப்பட்டன.
அப்போதெல்லாம் இல்லாத கெடுபிடிகள், இப்போது அத்தேர்வுகளைத் தேசியத் தேர்வு முகமையின் கீழ் சிபிஎஸ்இ நடத்தும்போது கடைப்பிடிக்கப்படுகின்றன.
உதவிப் பேராசிரியருக்கான தேர்வுகளை எழுதுபவர்களில் மணமான பெண்களும் உண்டு என்பதால், அவர்கள் சம்பிரதாய அணிகலன்களை அகற்றுமாறு கோரப்படுகின்றனர்.
எனவே, இது போன்ற நிகழ்வுகள் ஏதோ நீட் தேர்வில் மட்டும் நடக்கவில்லை. தேசியத் தேர்வு முகமை நடத்தும் மற்ற தேர்வுகளிலும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அது தேர்வு மைய அதிகாரிகளின் மனோநிலைக்கேற்ப மாறுபடுகிறது.
இந்தியாவின் மிக உயரிய பொறுப்புகளுக்கான அதிகாரிகளைத் தேர்வுசெய்யும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில்கூட இந்த அளவுக்குக் கடுமை காட்டப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் காட்டிலும் தேசியத் தேர்வு முகமை மாணவர்களிடத்தில் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? தேசியத் தேர்வு முகமை, மாணவர்களின் மனநலத்தையும் கணக்கில் கொண்டு தேர்வு மையங்களுக்குத் தெளிவான வழிகாட்டு முறைகளை வழங்குவதால் மட்டுமே இம்மாதிரியான சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.