சொல்...பொருள்...தெளிவு | நான்காம் தொழிற்புரட்சி

சொல்...பொருள்...தெளிவு | நான்காம் தொழிற்புரட்சி
Updated on
2 min read

உலகம் தற்போது நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பமும் அதைச் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளும் இந்தப் புதிய தொழில்நுட்பப் புரட்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தையும் சுருக்கக் குறியீடுகளால் குறிப்பிடுவது இந்த டிஜிட்டல் யுகத்தின் நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. அந்த அடிப்படையில், நான்காம் தொழிற்புரட்சியின் ஆங்கிலப் பெயரான ‘ஃபோர்த் இண்டஸ்ட்ரியல் ரெவல்யூஷன்’ என்பதை ‘4ஐஆர்’ என்று குறிப்பிடப்படுகிறது. சில நேரம் ‘இண்டஸ்ட்ரி 4.0’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், பொருட்களின் இணையம் (Internet of Things), மரபணுப் பொறியியல், குவாண்டம் கணினியியல், ஸ்மார்ட் சென்ஸார்கள், பெருந்தரவு (Big Data) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் நிகழும் முன்னேற்றங்களின் கலவைதான் நான்காம் தொழிற்புரட்சி.

முதல் மூன்று

உலகில் இதற்கு முன் மூன்று தொழிற்புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. 18ஆம் நூற்றாண்டில் நீராவி இன்ஜின் கண்டுபிடிக்கப்பட்டதால், உற்பத்தி நடைமுறை இயந்திரமயமானது. நகர்மயமாக்கலும் அதிகரித்தது. இதுவே முதல் தொழிற்புரட்சி எனப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் ரயில் போக்குவரத்து, மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது உள்ளிட்ட அறிவியல் முன்னேற்றங்களால் ஒட்டுமொத்த உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது.

இதுவே இரண்டாம் தொழிற்புரட்சி என்று வரையறுக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கணினி - டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உற்பத்தி தானியங்கிமயம் அடையத் தொடங்கியது. வங்கியியல், ஆற்றல், தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இதுவே மூன்றாம் தொழிற்புரட்சி என்று அறியப்பட்டது.

தற்போது நடைபெற்றுவரும் தொழில்நுட்ப மாற்றங்களும் முன்னேற்றங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சார்ந்தவைதான். ஆனால் இந்த மாற்றங்களின் வேகம், அளவு, தாக்கம் ஆகியவை இந்த உலகம் இதுவரை கண்டிராததாக இருப்பதாலும், இவை மனித வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றுவதாக இருப்பதாலும் இதை ஒரு புதிய தொழிற்புரட்சிக் காலமாக வரையறுக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த முன்மொழிவை உலகப் பொருளாதார மன்றத்தைத் தொடங்கியவரும் அதன் நிர்வாகத் தலைவருமான கிளௌஸ் ஷ்வாப் 2016இல் முதல் முறையாக அறிவித்தார். இது குறித்து ஒரு கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார் (https://www.weforum.org/agenda/2019/11/the-fourth-industrial-revolution-is-redefining-the-economy-as-we-know-it/). ‘தி ஃபோர்த் இண்டஸ்ட்ரியல் ரெவல்யூஷன்’ என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

பயன்கள்

நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் கார் எந்தச் சாலை வழியாகச் சென்றால் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்பதைக் கணித்துச் சொல்லும் ஜிபிஎஸ் அமைப்பு; ஆப்பிள் சிரி, அலெக்ஸா உள்ளிட்ட குரல்வழி உத்தரவுகளின் மூலம் தகவல்களைத் தரும் கருவிகள்; நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் உங்கள் ரசனைக்கு ஏற்ற திரைப்படங்களையும் தொடர்களையும் பரிந்துரைக்கும் ஏற்பாடுகள்; ஃபேஸ்புக்கில் நீங்கள் இருக்கும் ஒளிப்படத்தை யாரோ ஒருவர் பதிவேற்றினால் உங்கள் முகத்தைத் தெரிந்துகொண்டு, அந்தப் பதிவில் உங்களை ஃபேஸ்புக்கே டேக் செய்வது; நீங்கள் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் இருக்கின்றன, ஒரு நாளில் எத்தனை காலடிகள் நடந்திருக்கிறீர்கள், எவ்வளவு உடல் உழைப்பைச் செலுத்தியிருக்கிறீர்கள், இவற்றின் மூலம் எவ்வளவு கலோரியை இழந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அணிந்திருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்தே தெரிந்துகொள்வது - இவை எல்லாமே இந்த நவீனத் தொழில்நுட்ப முன்னேற்றங்களால்தான் சாத்தியமாகியுள்ளன. இவை எல்லாமே இயற்பியல், உயிரியல், டிஜிட்டல் உலகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்துவருகின்றன.

ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானோரைத் திறன்பேசிகளின் மூலம் இணைத்துவிட முடிகிறது. தகவல்களையும் அறிவையும் சேமித்துவைப்பதற்கும் பகிர்ந்துகொள்வதற்குமான வசதிகள் எல்லையற்று விரிந்துகொண்டிருக்கின்றன. தொழில், வணிகத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் உலகில் எந்த மூலையிலிருந்தும் தனக்கு உகந்த வணிக நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது இயல்பாகியுள்ளது.

ஒரு பொருள் அல்லது சேவையைப் பற்றி விற்பனையாளர் அளிக்கும் தகவல்களோடு அவற்றைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க தரமான சேவையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ளது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை தானியங்கிக் கருவிகள் அதிகரிப்பதால் உற்பத்திச் செலவு, ஊழியர்களுக்கான ஊதியம், போக்குவரத்து உள்ளிட்ட பல வகைச் செலவுகளைக் குறைக்க முடியும். ஒரே இடத்திலிருந்தபடி உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் வேண்டுமானாலும் தொடர்புகொண்டுவிட முடியும் என்பதால், உலகளாவிய வணிக வலைப்பின்னல்கள் அனைவருக்கும் சாத்தியமாகியுள்ளன. உலகளாவிய வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பன்மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியங்களை நான்காம் தொழிற்புரட்சி உள்ளடக்கியிருக்கிறது.

பாதகங்கள்

நான்காம் தொழிற்புரட்சி கொண்டுவரும் வசதிகள் யாவும் டிஜிட்டல் உலகுடன் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றன. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் திறன்பேசி, இணையம் உள்ளிட்ட எந்த வசதியையும் பயன்படுத்தாமல் டிஜிட்டல் உலகுக்கு வெளியே பெரும்பாலோர் இருக்கிறார்கள்.

நான்காம் தொழிற்புரட்சி கொண்டுவரும் மாற்றங்கள் யாவும் இந்த டிஜிட்டல் பிரிவினையை ஆழப்படுத்தி, அதன் விளைவாக சமத்துவமின்மையை அதிகரிக்கின்றன. மேலும், வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஊடுருவும் இணைய, டிஜிட்டல் கருவிகளால் தனிநபர்களின் அந்தரங்கம் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மனிதர்கள் இடைவெளியில்லாமல் கண்காணிக்கப்படும் ஆபத்து பெரிதாகியிருக்கிறது.

தானியங்கிமயம் ஆதிகரித்துவருவதால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துவருகிறது. தானியங்கிமயத்தால் வேலைவாய்ப்பு குறையும் அதே வேளையில், புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்வதற்கான திறமைசாலிகளின் தேவையும் அதிகரிக்கிறது.

எனவே, இத்தகைய தொழில்நுட்பங்களில் அறிவும் திறமையும் மிக்கவர்களாக இளைஞர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையிலும் திறன் பயிற்சிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உறுதிப்படுத்த முடியும்.

- கோபால்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in