குமரிக்கண்டம்: வெறும் கற்பனையல்ல!

குமரிக்கண்டம்: வெறும் கற்பனையல்ல!
Updated on
3 min read

குமரிக்கண்டம் கற்பனையே என்கிற கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது. சிவராஜ பிள்ளை (1932), நீலகண்ட சாஸ்திரி (1941), தெரேச பானே (2014) போன்றோர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்றும், அது தமிழர்களின் உணர்வு சார்ந்த நம்பிக்கை என்றும் கூறியுள்ளனர்.

சுமார் 3,690 மீட்டர் ஆழத்தில் குமரிக்கண்ட நிலப்பரப்பு இருக்கும்போது, உலகில் உள்ள அனைத்து பனிப்பாறைகளும் உருகினாலும் 65.83 மீட்டர் மட்டுமே கடல் மட்டம் உயர முடியும் என்பதும் கண்டப் பெயர்ச்சியில் குமரிக்கண்டம் காண்பிக்கப்படவே இல்லை என்பதுமே அவர்களது வாதம். இதற்கிடையே ஜீன் டக்ளஸ் (2004) என்கிற அறிஞர் மடகாஸ்கர் மட்டுமே குமரிக்கண்டம் என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார்.

புதிய ஆய்வு

அண்மையில், கடல் கீழ் நிலப்பரப்பைக் காண்பிக்கும் ‘ஜெப்கோ’ படங்களைக்கொண்டு புவித்தகவல் அமைப்பு மென்பொருள் மூலம் கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரிக்கண்டம் விவரிக்கப்பட்ட பகுதிகளில் கடல் கீழ் நிலப்பரப்பை முப்பரிமாணமாக வடிவமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் சங்க இலக்கியங்களிலே விவரிக்கப்பட்ட குமரிக்கண்டத்தின் புவிப்பரப்பியல் தெளிவாகத் தெரிகிறது. கன்னியாகுமரிக்கு மேற்கே தற்போதைய பரளியாற்றின் கழிமுகத்திலிருந்து தெற்காக சுமார் 400 கி.மீ. மிகப் பெரிய பள்ளத்தாக்கை ஏற்படுத்தி ஓடி, பின்னர் 500 கி.மீ. தூரத்துக்குச் சமவெளியில் கிழக்காகத் தெரியும் ஆறு, பஃறுளி ஆறு என்றே தெரிகிறது.

இதே போன்று குமரிமுனைக்குக் கிழக்கே தற்காலக் குமரியாற்றின் கழிமுகத்திலிருந்து தெற்கு-தென்கிழக்காகச் சுமார் 300 கி.மீ. தூரம் ஆழமான பள்ளத்தாக்கை ஏற்படுத்தி, மேலும் சுமார் 500 கி.மீ. சமவெளியில் ஓடியிருக்கும் நதி குமரி ஆறு என்று தெரிகிறது.

பஃறுளி ஆற்றின் சமவெளியில்தான் முதல் தலைநகரான தென் மதுரையையும் குமரி ஆற்றின் சமவெளியில் இரண்டாவது தலைநகரான கபாடபுரத்தையும் பாண்டிய மன்னர்கள் அமைத்து, குமரிக்கண்டத்தை ஆண்டிருக்க வேண்டும்.

வைகை இதற்கு வடக்கே தற்போதைய கழிமுகத்திலிருந்து தெற்காகச் சுமார் 400 கி.மீ. தூரம் வரை மிக ஆழமான பள்ளத்தாக்கை ஏற்படுத்தி ஓடி, பின்னர் சற்றே கிழக்காக மேலும் 300 கி.மீ. ஓடி, இலங்கைக்குத் தெற்கே சமவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவையும் இலங்கையையும் வடக்கு-தெற்காகப் பிரித்து ஓடும் வைகைப் பள்ளத்தாக்கில் தாமிரபரணி நதி இணைவதை ‘ஜெப்கோ’ படங்கள் காட்டுகின்றன.

சிலப்பதிகார நிலப்பகுதிகள்

சங்க நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் தெங்கு நாடு, பனை நாடு, பாலை நாடு ஆகியவை ஜெப்கோ படங்களில் தெரிகின்றன. வடக்கு-தெற்காக நீண்டு உயர்ந்த வீரமகேந்திரம் மலையின் மேற்கு அடிவாரத்தில், தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழ் தெங்கு நாடு என்பது கேரளப் பகுதிகளிலே காணப்படுகின்ற தென்னை மரங்களைக் கொண்டுள்ள காயல் நிலப் பகுதிகள்போல் தெரிகின்றன.

அதே போன்று, மேற்கே இருந்துவந்த காற்று வீச்சு ஏற்படுத்திய பள்ளங்கள் வீரமகேந்திரம் மலையின் மேற்கே உள்ள சமவெளியிலும், அவை கொட்டிய மணல் மலையின் அடிவாரப் பகுதிகளிலும் தென்படுகின்றன. இதைப் போன்ற மணல் பரப்புகள் காலப்போக்கில் செம்மணலாக மாறிய பிறகு, தென் தமிழ்நாட்டில் திருச்செந்தூர் கடலோரப் பகுதிகளிலே காணப்படும் பனை போன்று குறும்பனைகள் வளரும்.

இதே போன்று வீரமகேந்திர மலையின் மேற்குப் பகுதி அடிவாரத்திலே காணப்படுகின்ற செம்மணல் பரப்புகளை இலக்கியங்கள் குறும்பனை நாடு என்று விவரித்திருக்கின்றன. அதே போன்று மேற்கிலிருந்து காற்று கொண்டுவரும் மணல் மலையின் மேற்கு சாய்வுப் பகுதிகளிலே கொட்டப்பட்டிருக்கின்றன.

பாலைவனப் பகுதிகளில் ஏற்படும் காற்றுவாக்கு மணல் குன்றுகள் என்று கூறப்படுகிறது. அவற்றையே தமிழ் இலக்கியங்கள் முன்பாலை நாடு என்று குறிப்பிடுகின்றன. காற்றானது மலைகளைக் கடக்கும்போது மலைகளுக்குப் பின்புறமும் மணலைக் கொட்டிச்செல்லும். பாலைவனப் பகுதிகளிலே இவை காற்றுமறை மணல் மேடுகள் எனப்படுகின்றன.

அதே போன்று மகேந்திரபுரம் மலைக்குக் கிழக்கே காணப்படும் இம்மணல் பரப்பை இலக்கியங்கள் பின்பாலை நாடு என விவரித்திருக்கின்றன.

இவ்வாறு பஃறுளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே வடக்குத் தெற்காகக் காணப்படும் தென் கன்னியாகுமரி மலைகளை ஏழ் மதுரை நாடுகள் என்று கணிக்கலாம். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிலப் பகுதிகள் ஜெப்கோ படத்தில் இதுபோல் தெரிகின்றன.

மணிமேகலையில் விவரிக்கப்பட்ட கடல்கோள்களை ஜெப்கோ படம் கணித்ததை முப்பரிமாணக் கடல் கீழ் புவிப்பரப்பியல் மீது காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, கடல்கோள்களால் சிறிதுசிறிதாகப் பாண்டியர்கள் வடக்கு நோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

அப்படி நகர்ந்தபோது, வைகை-தாமிரபரணி பள்ளத்தாக்கைப் பாதைகளாக அவர்கள் பயன்படுத்தியிருப்பதற்கான சாத்தியமும் தென்படுகிறது. இந்தப் பின்னணியில் கடல்கோள் ஆழிப்பேரலையாக ஆகும்போது, குமரிக்கண்ட மக்களும், தளவாடங்களும் தாமிரபரணி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டு, அதன் குவியலே ஆதிச்சநல்லூரில் தென்படுகின்றன என்கிற யூகங்களும் எழுகின்றன.

மேற்கூறியவை அனைத்தும் கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பகுதி இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், பண்டைய அறிஞர்கள் கருதியதைப் போல் மிகப் பெரிய நிலப்பரப்பாக மடகாஸ்கர் - அண்டார்க்டிகா - ஆஸ்திரேலியா வரை பரவியில்லாமல் மேற்கே மகேந்திரபுரம் மலைத் தொடரிலிருந்து, கிழக்கே தென் கன்னியாகுமரி மலைகள் வரை பரவியிருப்பதை ஜெப்கோ படங்கள் காட்டுகின்றன.

ரனதிர் மகோபாத்தியாய, காட்கே (1992) சோம.இராமசாமி (2006) ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளில் கூறப்பட்டிருப்பதுபோல், இந்தியத் துணைக் கண்டம் மண்புழுபோல் மேலும் கீழும் வளைந்திருப்பதும், குமரி முனைக்குத் தெற்காக கிழக்கு-மேற்காக உள்ள பூமி வெடிப்புகளால் பூமி கீழே சென்றதும்தான் இதற்குக் காரணம் என்று கூற முடியும்.

எக்கோ பீம் சௌண்டர் சர்வே மூலம் கடல் புவிப்பரப்பியலை ஆராய்ந்தால், அதன் மூலம் கடல் கீழ் தரைமட்டத்தில் உள்ள கலாச்சாரச் சின்னங்களை வெளிக்கொணர்வதோடு, அதன் பின்னர் பூபௌதீக ஆய்வுகள் மூலம் புதையுண்ட மனிதக் குடியிருப்புகளையும் கண்டுபிடிக்க முடியும். அதன் தொடர்ச்சியாக, தொல்லுயிர் எச்சங்களையும் அவற்றின் காலத்தையும் கார்பன் காலக் கணிப்பு மூலம் கண்டறிந்து, குமரி மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, அவர்கள் வடக்கே நகர்ந்த பாதைகள் ஆகிவற்றையும் வெளிக்கொணர முடியும்.

- முனைவர் சோம.இராமசாமி, தொலை உணர்வுத் துறை மதிப்புறு பேராசிரியர், தொடர்புக்கு: smrsamy@gmail.com

ஜெ.சரவணவேல், இணைப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in