

38 மாவட்டங்கள்
தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் மாவட்ட காலநிலை மாற்றத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் பணிகளுக்குத் திட்ட இயக்குநர்களாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், காலநிலை அதிகாரிகளாக மாவட்ட வன அலுவலர்களும் செயல்படுவார்கள்.
292 பள்ளிகள்
தமிழக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் 15 மாவட்டங்களில் 292 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
304 மாணவர்கள்
மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண்பதற்கும், சர்வதேச வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 304 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
13 ஆம் நூற்றாண்டு
யூதர்களின் சூதபள்ளியைக் குறிக்கும் பொ.ஆ.(கி.பி.) 13ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
80 ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80ஐ நெருங்கியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.
70.9 சதவீதம்
உயர் பதவிகளில் பணிபுரியும் பெண்-ஆண் விகிதத்தில் மிசோரம், 70.9 சதவீதத்துடன் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.
135 ஆவது இடம்
உலக அளவில் பாலின சமத்துவத்தில் இந்தியா 135ஆவது இடத்தில் உள்ளது என உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உடல்நலம், உயிர்வாழ்வு ஆகியவற்றுக்கான தரவரிசையில் இந்தியா 146ஆவது இடத்தில் உள்ளது.
உலகம்
2.5 மடங்கு
பிரேசிலின் அமேசான் மழைக் காடுகளில் 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் காடழிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3,988 சதுர கிமீ காடு அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது டெல்லியின் பரப்பளவைப் போல் 2.5 மடங்கு.
3,00,000 பேர்
2011இல் தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரின் முதல் பத்தாண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் ஒரு நாட்டில் பலியானோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகம்.
6 பில்லியன் டாலர்
சர்வதேச நாணய நிதியம், 2019இல் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக இருந்த 6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி, அந்நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதாரச் சரிவால் அறிவிப்போடு நிறுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், 6 பில்லியன் டாலர் நிதியுதவியைப் பெறுவதற்கான கடுமையான நிபந்தனைகள் அடங்கிய பூர்வாங்க ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் சமீபத்தில் செய்துகொண்டுள்ளது.
தொகுப்பு: ஹுசைன்