

என் பால்ய காலத்தில் ‘காந்தி’ திரைப்படம் பள்ளியில் காட்டப்பட்டது. இவர்தான் காந்தி என்று என் ஆசிரியர் அறிமுகப்படுத்தினார். அந்த அனுபவம் இப்போதும் தித்திப்பாக இருக்கிறது.
காந்தி, ஆட்டுக்குத் தழைகளை ஊட்டும் காட்சி இன்னும் என் மனத்திலிருந்து விடுபடவேயில்லை. கிட்டத்தட்ட 40 வருடம் கழித்து இப்போது சிறார்களுடன் அமர்ந்து வகுப்பறையில் உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கைக் கல்வியைத் தொடங்கிவைத்திருக்கிறது.
பள்ளிப் பாடவேளைகளில் இந்த ஆண்டு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வி இணைச் செயல்பாடுகளும், கல்வி சாரா செயல்பாடுகளும் மாதந்தோறும், வாரந்தோறும் பாடவேளைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடவேளைகளில் மன்றங்களுக்கு என்று ஒன்றை ஒதுக்குவது ஆரோக்கியமான ஒன்று.
இவை அனைத்தும் புத்தாக்கத் திட்டங்கள். பாடவேளைகள் யாருக்கும் குறைக்கப்படவில்லை. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் ஒன்று மட்டும் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாடம் நடத்துவதற்கான வேளை குறைக்கப்பட்டு, மன்றச் செயல்பாடுகளுக்காக அப்பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மன்றங்களால் அரசுப் பள்ளிகளில் என்னதான் மாற்றங்களைச் செய்துவிடமுடியும் என்ற கேள்வி எழலாம். சென்ற ஆண்டு பள்ளித் தொடக்கத்தில் மாணவர்களிடையே சரளமான வாசிப்பு இல்லை என்பது உறுதியானது. இந்த வாசிப்பைப் பலப்படுத்தவே, இளம் வாசகர் வட்டம் பள்ளிக் கல்வித் துறையால் தொடங்கப்பட்டது. நூலகப் பயன்பாடு என்பதைக் கடந்து, நூலகச் செயல்பாடாகப் புத்தக மதிப்புரை எழுதுவது, மொழிபெயர்ப்பது, கலந்துரையாடுவது என்று அமைந்த செயல்களால், மாணவர்களின் படைப்புத் திறன் துளிர்விடத் தொடங்கியது. எங்கள் பள்ளி மாணவர்கள் கதைகள் எழுதினார்கள்; மொழிபெயர்த்தார்கள்.
இக்கதைகளைத் தொகுத்து ‘கிண்டில்’ வடிவத்தில் வெளியிட முடிந்தது. மிக அரிதான, காப்புரிமையற்ற நூல்கள் மாணவர்களால் எண்ம வடிவில் தொகுக்கப்பட்டுப் பள்ளியின் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டது. ஒருவேளை இளம் வாசகர் வட்டம் என்ற ஒன்று இல்லை என்றால், மாணவர்களின் கதைகள் தொகுப்பாக வந்திருக்காது; புத்தகங்களை எண்ம வடிவில் உருவாக்கியிருக்க முடியாது, யூடியூப்பில் புத்தகங்களைப் பற்றி மாணவர்கள் விமரிசனம் செய்து இருக்க முடியாது, நடப்பாண்டில் ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 10 வகுப்பு வரை மொழிமன்றம், வினாடி வினா மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், கணினி நிரல் மன்றம், எந்திரனியல் மன்றம் ஆகிய மன்றங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.
இவை அனைத்தும் மாதச் செயல்பாடுகள் என்ற அமைப்பில் அடங்குபவை. வாரச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை முதல் வாரம் ஓரிகாமி, இரண்டாம் வாரம் சிறார் திரைப்படம், மூன்றாம் வாரத்தில் நாடகம் மற்றும் கூத்து, நான்காம் வாரத்தில் இசை, நடனம், பாரம்பரியக் கலைகள் எனத் திட்டமிட்டு நடைபெற்றுவருகின்றன.
இம்மன்றச் செயல்பாடுகள் இன்னும் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பள்ளிக் கல்வித் துறை. ஆகப் பாடம் என்பதைக் கடந்து வாழ்க்கைத் திறன்களை வடிவமைக்கும் செயல்பாடுகளாகத்தான் இவற்றை நாம் கருதவேண்டும்.
நூற்றாண்டுப் பெருமை கொண்ட எங்கள் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பாக அளிக்கப்பட்ட பேச்சுத் திறன் பயிற்சியில், ஒரு மாணவியும் மாணவனும் மாவட்ட அளவில் முதன்முறையாக இரண்டாம் பரிசும் ஆறுதல் பரிசும் பெறவுள்ளனர். ஓவிய மன்றம் சார்பாக மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெறவுள்ளார் இன்னொரு மாணவி.
ஓவிய மன்றம் சார்பாகத் தயாரிக்கப்பட்ட ஆயிரம் ஓரிகாமி கொக்குகள் இன்னும் பள்ளியில் பறந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பள்ளியில் தொடங்கப்பட்ட சத்யஜித் ரே திரைப்பட மன்றம் சார்பான மாணவர் செயல்பாடுகள், இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் திரைப்பட மன்றம் தொடங்கக் காரணமாகியுள்ளது. பாடவேளை என்பது எண்ணிக்கையில் இல்லை. செயலில்தான் இருக்கிறது.
பாடம் நடத்துவதைத் தவிர, மாணவனின் திறனை வெளிக்கொணர நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஆசிரியர்களிடம் பதில் இருக்கவேண்டும். பள்ளிக் கல்வித் துறை ஒவ்வொரு ஆசிரியரிடமும், ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு மரக்கன்றை தந்துள்ளது.
ஒருவர் நட்டு வளர்த்தால் அது மரம். சிலர் நட்டால் அது தோப்பு. பலப் பலர் நட்டால் அது அடர்ந்த காடு. யானையின் பிளிறலையும், மானின் துள்ளலையும், சிங்கத்தின் கர்ஜனையையும் ஓடைகளின் அமைதியையும் நாம் காணவேண்டும் என்றால், எல்லாரும் ஒன்றுகூடி மரக்கன்றுகளைப் போலப் பள்ளிகளில் மன்றங்களை வளரச் செய்ய வேண்டும்.
- ரா.தாமோதரன், தமிழ் ஆசிரியர், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி, தொடர்புக்கு: raa.damodaran@gmail.com