

திருச்சி சமயபுரத்துக்கு அருகில் நரசிங்கமங்கலத்தில் பிறந்தவர் ஊரன் அடிகளார் (22.05.1933 –13.07.2022). நாகரத்தினம் அம்மைக்கும் இராமசாமிக்கும் 22.05.1933இல் பிறந்த இவருடைய இயற்பெயர் குப்புசாமி. தந்தைவழியில் செல்வமும் தாய்வழியில் கல்வியும் இவருக்குக் கிட்டியது. அன்னையார் நாகரத்தினம் அம்மை சீரிய வாசிப்பாளர். அம்மையார் இளமையில் படித்த புத்தகங்களைக்கூட இறுதிவரை தன் நூலகத்தில் பாதுகாத்து வைத்திருந்தார் அடிகளார். தாய் தந்தையிடம் வளர்ந்ததைவிடவும் தாய்வழித் தாத்தா -பாட்டியிடமே அதிக காலம் வளர்ந்த இவருக்கு, தாத்தா சுப்பையாவே வித்யாகுருவாக விளங்கினார். அதோடு வள்ளலாரிடம் வந்துசேர்வதற்குக் காரணமும் இவரே.
மூன்றாம் வயதிலேயே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை உள்ளிட்ட நூல்களைத் தாத்தாவழி கற்றார். ஏழாம் வயது முதல் மேலும் ஆர்வத்துடன் கற்கத் தொடங்கியது, நீதிநெறி விளக்கம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருவருட்பா, சைவ சித்தாந்த சாத்திரங்கள், கைவல்ய நவநீதம், பகவத்கீதை என்று பெருகி, அவருடைய ஞானக் கல்வியின் அடிப்படையாக அமைந்து நின்றது. “தமிழார்வம் எமது உடன்பிறப்பு; எம்முடன் கூடப் பிறந்தது. ஞான நாட்டமும் அவ்வாறே” என்பது அவர்தம் வாக்குமூலம். துறவியாயினும் மொழிப்பற்றை அவர் ஒருபோதும் கைவிடவில்லை.
ஆன்மிகமும் பொறியியலும்
1939இல், ஆறாம் வகுப்பு பயிலும்போதே பேச்சு, கட்டுரை, நாடகம் எனப் பள்ளி அளவில் ஆளுமை பெற்ற மாணவராகத் திகழ்ந்தார். ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் பாரம் (8ஆம் வகுப்பு) படித்தார். 1950-51இல் திருச்சி நேஷனல் கல்லூரியில் இண்டர்மீடியட் பயின்றார். வரலாறு அவரது விருப்பப் பாடமானது. கல்லூரி நாட்களில் நூலகமே கதியாகக் கிடந்த நேரத்தில், தமிழ் வெறி அவரைப் பிடித்தாட்ட, கல்லூரிக் கல்வியைக் கைவிட்டு, கரந்தைப் புலவர் கல்லூரியில் வித்துவான் படிக்கச் சேர்ந்தார். கல்லூரிக் காலத்திலேயே ‘ஊரன்’ எனும் புனைபெயரால் அறியப்பட்டிருந்தார். பின்னாளில் துறவு பூணும்போது ‘சன்மார்க்க தேசிகன்’ எனும் தீக்ஷா நாமம் பெற்றார். பிறகு, இரண்டையும் இணைத்து, “சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள்” எனத் தம்மை அழைத்துக்கொண்டார்.
சமயபுரம் காசி சுவாமிகளிடம் யோகக் கலை பயின்றார். மாகாளிக்குடிக் கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள் வழிபடவரும் காலங்களில், அவரது பல்லக்கை விரும்பிச் சுமந்த நிகழ்வுகளும் உண்டு. கரந்தைக் கல்லூரியில் வித்துவான் படிக்கச் சென்ற அவரைத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஈர்த்தார். அடிகளாரின் ஆன்மிக நாட்டத்தை அறிந்த பெற்றோர், கரந்தை வந்து முதல்வரிடம் முறையிட்டு அவரை மீட்டு வந்தனர். அதன் பிறகு, பொறியியல் வரைவாளராக இருந்த தம்முடைய உறவினரிடமிருந்த பொறியியல் நூல்களைப் படித்து அதன்பால் ஈர்ப்புக்கொண்டார். கட்டிடப் பொறியியல் பாடங்களில் அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றார். சைவ உணவு கிடைப்பது அரிதாக இருந்ததால், சர்வேயர் அரசுப் பணியைக் கைவிட்டுத் திரும்பியவருக்குத் திருவரங்கம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக வேலை கிடைத்தது. அந்நகராட்சி அலுவலக முத்திரைச் சின்னமும் இவர் எண்ணத்தில் உதித்ததே.
நீளும் சாதனைகள்
திருச்சியில் வசித்த காலத்தில், சமயபுரம் கண்ணனூரில் வள்ளலாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘ஜோதி மன்ற’த்தை 1954இல் தொடங்கிச் செயல்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். 23ஆம் வயதில் தன் வீட்டிலேயே, ‘திருவருட்பிரகாச வள்ளலார் சமரச சித்தாந்த ஆராய்ச்சி நிலையத்தை’ 22.05.1955இல் தொடங்கினார். அதன் மூலமாக, தமிழ்ச் சமயங்களை, சன்மார்க்க நெறியை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 12 ஆண்டுகள் பணியும் ஆராய்ச்சியும் இணைந்தே சென்றன. ஆய்வுக்கும் தவத்துக்கும் இடையூறாக இருப்பதாகத் தோன்றவே 1967இல் அரசுப் பணியிலிருந்து விலகித் துறவு பூண்டார். முழுமையாகச் சன்மார்க்க ஆய்வில் ஈடுபட்டார். இவருடைய நூலகத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்குச் சன்மார்க்க நூல்கள் குவிந்து கிடப்பதை இன்றும் காணலாம்.
1969 முதல் வடலூர் அவரது வாழ்விடமாயிற்று. ஓமந்தூர் ராமசாமி நிறுவி நடத்திவந்த ‘சுத்த சன்மார்க்க நிலைய’த்தின் செயலாளராகப் பணியைத் தொடங்கிய அவர், அடுத்த ஆண்டே வள்ளலாரின் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலர், தக்கார் எனப் பல பதவிகளை வகித்தார். வள்ளலார் வளாகத்தை சர்வே செய்து ‘மாஸ்டர் பிளான்’ தயாரித்தது, மேட்டுக்குப்பம் கொடி விழாவுக்குப் பத்திரிகை அச்சிட்டது, திட்டப் பதிவேட்டைப் புதுக்கியது, வள்ளலார் மாணவர் இல்லம் தொடங்கியது, நூல்நிலையம் அமைத்தது என அவர் செய்த சாதனைப் பட்டியல் நீளும்.
அகவல் தரிசனம்
எல்லாவற்றுக்கும் மேலாக ‘அகண்ட பாராயணம்’ என்னும் பழைய வழக்கத்தை மாற்றி, ‘முற்றோதல்’ என்னும் பெயரை வழக்கத்துக்குக் கொண்டுவந்து ‘திருவருட்பா முற்றோதல்’ நடைமுறையைப் பரப்பியவரும் அடிகளார்தான். வள்ளலார் தம் கைப்பட எழுதிய ‘அருட்பெருஞ்சோதி அகவல்’ மூல ஏட்டைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து, அனைவரும் தரிசிக்க வழிவகை செய்த பெருமை இவருக்குண்டு.
கருங்குழி இல்லத்தை அதன் உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கித் திருப்பணி செய்து, வள்ளலார் தெய்வ நிலையத்தின் நிர்வாகத்திடம் கொடுத்தார். அடிகளார், 1974இல் தருமசாலை அன்னதான நிரந்தர வைப்புநிதித் திட்டத்தை ஏற்படுத்திப் பணம் திரட்டினார். சுமார் 3.17 கோடி ரூபாய் சேகரித்ததுடன், அந்நிதியைக் கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் வடலூர் கிளையில் எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும் (forever) வண்ணம் போடப்பட்டுள்ளது.
ஊரன் எனும் அடையாளம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் நூற்றாண்டு விழா மலரே இவரது அச்சுப் பணியின் தொடக்கம். சன்மார்க்கம் சார்ந்த நூல்கள் இல்லாக் குறையைப் போக்க, பல நூல்களைப் பதிப்பித்ததோடு தாமே எழுதினார். அவற்றுள் ‘வடலூர் வரலாறு’, ‘வள்ளலார் மறைந்தது எப்படி?’, ‘இராமலிங்க அடிகள் வரலாறு’ உள்ளிட்ட நூல்கள் அடக்கம். 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் இருந்தாலும் அவரின் பெரிய சாதனை, திருவருட்பா ஆறு திருமுறைகளையும் பாடல் எண்ணிக்கையைக் கணக்கிட்டு ஒரே நூலாகப் பதிப்பித்ததுதான். 1867இல் வள்ளலாரால் தொடங்கி நின்றுபோன ‘சன்மார்க்க விவேக விருத்தி’ பத்திரிகையை மீண்டும் சிலகாலம் நடத்தினார்.
பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியிருப்பதுடன் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வள்ளலார் குறித்துப் பேசினார். ‘அருள்விளக்கச் சீலர்’, ‘தர்மப் பிரச்சார சாகரம்’, ‘ஒளிநெறிப் பிழம்பு’, ‘அருளியல் ஞானி’ முதலிய பட்டங்களைப் பெற்றிருந்தபோதும் ‘ஊரன்’ என்னும் பட்டமே சன்மார்க்க உலகில் அவரை இன்றும் அடையாளப்படுத்துகிறது.
வள்ளலாரின் வழியைப் பற்றிக்கொண்டு, அவர் கற்பித்த சமத்துவ நெறியைப் பரப்புவதையே தன் வாழ்நாள் நெறியாகக் கொண்ட அடிகளார், ‘சன்மார்க்க உலகின் வரலாறு’, ‘திருவருட்பா வரலாறும் ஆராய்ச்சியும்’ நூல்களை எழுதத் திட்டமிட்டிருந்தார். அதற்குள், வயோதிகம் அவரைக் கொண்டுசென்றதை எவ்வாறு ஈடுகட்டுவது? ‘பேரிழப்பு’ என்று அமைதியுற முடியவில்லை.
- ப.சரவணன், ‘அருட்பா x மருட்பா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: psharanvarma@gmail.com