

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், 89ஆவது வயது பூர்த்தியடைந்து 90-க்குள் நுழைகிறார். 1954இல் ‘மாத்ருபூமி’யில் வெளிவந்த ‘வளர்த்து மிருகங்களி’ல் தொடங்கிய எம்டியின் எழுத்து வாழ்க்கையும் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீருக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்பட்ட ஆளுமை எம்டி.
அவரது பெயர்பெற்ற தொடக்க காலக் கதையான ‘இருட்டின்றெ ஆத்மா’வில் அவர் தன்னைத் திடமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு தரவாட்டின் சந்ததியான வேலாயுதனை ஊரே பைத்தியக்காரன் எனச் சொல்ல, அவன் மாத்திரம் அதை மறுப்பவனாக இருக்கிறான். வளர்ந்த தன்னை வேறு ஒருவர் குளிப்பாட்டுவது ஏன் எனக் குழம்புவான். அந்தத் தரவாட்டில் இருக்கும் அவனது முறைப்பெண்ணுக்கு இவன் மீது விநோதமான சிநேகம். அப்பா இல்லாமல் தாய்மாமனால் நிர்வகிக்கப்படும் அந்தத் தரவாட்டின் காட்சிகளைக் கொண்டு, எம்டி தான் எழுதப் போகும் கதைகளுக்கான வெள்ளோட்டத்தை நடத்தியிருப்பார்.
மலையாளத்தின் கிளாஸிக் நாவல்களில் ஒன்றான எம்டியின் ‘நாலுகெட்’டில் வடக்கேபாட்டு தரவாட்டுச் சந்ததியின் கதையைச் சொல்லியிருப்பார். கொடி பரப்பிய தரவாடு வீழ்ச்சி அடையும் காலம் வரை விவரிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலில், தரவாட்டு நம்பிக்கைகளும் சடங்குகளும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். காதலால் தரவாடு படி கடந்த ஒரு தாயின் மகனான அப்புண்ணிதான் இந்த நாயகனின் மையமாக இருக்கிறான். முத்தச்சி கதாபாத்திரம் வழி அவனது தாயின் பேருகேட்ட தரவாடு பற்றிய பெருமிதம் அவனுக்கு உருவாக்கப்படுகிறது. நாவலைத் தொடர இந்த உணர்ச்சியை எம்டி பயன்படுத்தியிருப்பார். புறக்கணிப்பும், வேதனையும், இழந்த பெருமிதத்தைக் கைப்பற்றும் வேட்கையும் எனத் தீவிரமாகச் செல்லும் இந்த நாவலைத் தன் மொழியால் வசீகரமானதாக மாற்றியிருப்பார். காவும் களமெழுத்தும் கய்தப்பூ வாசனையும் என கேரளிய மணம் வீசும் 50-களின் கிராமத்தைத் தன் எழுத்து நடையால் வாசகர்களுக்கு உணர வைத்திருப்பார். ‘அசுர வித்து’, ‘பாதிராவும் பகல் வெளிச்சமும்’, ‘காலம்’, ‘வாரணாசி’ போன்ற நாவல்களில் இந்த எழுத்தின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.
மகாபாரதத்தின் கதாபாத்திரங்களைத் தெய்விகத்தன்மையில் இருந்து விடுவித்து, இயல்பான மனிதர்களாகத் தன் கதைக்குள் சிருஷ்டித்த அவரது முயற்சியான ‘ரெண்டாமுழம்’ இதிலிருந்து மாறுபட்டது. தனிக் கவனமும் பெற்ற படைப்பு. இரண்டாம் இடம் வகித்த பீமனைச் சாதாரண மனிதனாக்கி அவன் மனச் சஞ்சலங்களை இதில் விவரித்திருப்பார். புகழ்பெற்ற ஒரு இதிகாசக் கதைக்குள் எம்டி நிகழ்த்திய நவீனக் குறுக்கீடு என இந்த நாவலைச் சொல்லலாம்.
‘வள்ளுவநாடன் பாஷையும் நாயர் தரவாடும் இல்லை என்றால், எம்டி கதைகள் இல்லை’ என்று மலையாள இலக்கியத்தில் கிசுகிசுக்கப்படும் விமர்சனத்துக்கு எதிரான எழுத்துகள் என இதையும் ‘மஞ்சு’ நாவலையும் முன்னிறுத்தலாம்.
‘மஞ்சு’ நாவல் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது. தன் எளிய நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் கவித்துவமான நடையை இதில் எம்டி வசப்படுத்தியிருப்பார். பனிப் பிரதேசத்தின் மென்வெளிச்சத்தை இந்த மொழியில் உணர முடியும். மலையாளக் கவி ஒ.என்.வி.குரூப் உட்படப் பலரும் இதை ‘உரைநடைக் கவிதை’ என்கிறார்கள். இந்த நாவலின் நிலமான இமயமலைத் தொடரில் உள்ள பசுமை சூழ் நைனிடாலும் காதலும் இந்தக் கவித்துமான மொழிக்கான காரணங்கள் எனலாம். காத்திருப்புதான் இதன் மையம். நாவலின் மையக் கதாபாத்திரமான விமலா டீச்சர் உட்பட இந்த நாவல் காத்திருப்பின் மனிதர்களால் நிறைந்தது. காதல் பாதையும் ஏரியும் நகரமும்கூட இந்த நாவலில் காத்திருக்கின்றன. ‘மஞ்சு’ 1962இல் வெளிவந்தது. அறிவியல் வளர்ச்சியோ தகவல்தொடர்புச் சாதனங்களோ உலகமயமாக்கலோ எதுவும் நிகழ்ந்திராத காலகட்டத்தில், நாவல் கொண்டுள்ள நவீனம் இந்த நூற்றாண்டையும் தாண்டியது எனலாம்.
வாசகனை மிரட்சிகொள்ளச் செய்யும் மொழியோ சிக்கலான சொற்சேர்க்கையோ இல்லாமல் எளிய சொற்களால் அனுபவங்களை உயிர்ப்பித்தவர் என எம்டியைச் சொல்லலாம்.
மந்தகதி அல்ல, மொழி நிகழ்த்தும் நிர்த்த விசேஷம்தான் எம்டியின் சிறப்பு. அதிர்ச்சி அளிக்கும் உள்ளடக்கத்தையோ அதிசயிக்கத்தக்க கதைப் பாத்திரங்களையோ உருவாக்க எம்.டி. சிரத்தை எடுப்பதில்லை. மாறாக, அவற்றின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர். எம்டியின் மொத்த கதைகளும் வாழ்வின் சங்கடங்களைச் சொல்பவையே. அவரே சொல்வதுபோல் ‘சந்தம் இழந்த அந்தச் சங்கடங்களுக்கு இடையே தாளத்தை உருவாக்கியது’தான் எம்டியின் வெற்றி.
- ரீனா ஷாலினி, ‘மஞ்சு’ நாவல் மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: svshalini@gmail.com