இரு நாவல்கள்
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, சம்பத் எழுதிய ‘இடைவெளி’ - இந்த இரு நாவல்களும் வெவ்வேறு வகை. ஒன்று, மீனவ சமூகத்தின் வாழ்க்கை ஓட்டத்தை யதார்த்தமாகச் சொல்வது. இன்னொன்று, மனைவியால் பைத்தியம் என்றும் சித்தரிக்கப்பட்ட ஒரு இயந்திரகதியான வாழ்க்கைச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு தனிமனிதனின் உள்மனப் போராட்டம்.
‘இடைவெளி’ நாவலைப் பார்ப்போம். சதா சர்வகாலமும் சாவு என்றால் என்ன என்ற கேள்வியிலேயே உழலும் தினகரனின் கதைதான் இது. எங்கிருந்தாலும், யாருடன் பேசும்போதும் இந்தக் கேள்வியே சுற்றிச் சுற்றி வந்து தினகரனைத் தாக்கும். தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தும் அது முடியாமல் போகிறது.
ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியவில்லை. அவரைச் சார்ந்தவர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. சாவுக்கு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விளக்கங்களை அவர் கண்டுபிடித்தாலும் கடைசியாகச் சாவு அவர்முன் வந்து பேசுகிறது. ‘சாவு என்றால் என்ன என்று கண்டுபிடித்துவிட்டாயா?’ என்று கேட்கிறது. தூக்குக்கயிறு சின்னதாக இருந்தால் கழுத்தில் நுழையாது. பெரிதாக இருந்தால் நுழைந்தும் பயனில்லை. ஒரு நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியுடன் சாவு சம்பவிக்கிறது. முரண்பாடுடைய இடைவெளியை, சாவை, வெல்ல முடியாது. சம்பத் இந்த ஒரு நாவல் மட்டும்தான் எழுதியிருக்கிறார். தனது 42வது வயதில் மூளை ரத்தநாளம் சேதத்துக்குள்ளாகி மரணமடைந்தார் என்பது அதிர்ச்சிதான்.
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ படிக்கும்போதே ஒரு சினிமா பார்த்துக்கொண்டிருப்பதுபோல் பிரமிப்பு ஏற்படும். போராட்டம் மிகுந்த வாழ்க்கையாக இருந்தாலும் அதைச் சலிப்பில்லாமல் இயல்பாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடனும், உறவின் ஒட்டுதலுடனும் வாழும் மீனவக் குடும்பங்கள் ஆச்சரியத்தை அளிக்கும். கதையின் கதாநாயகி பிலோமி தனது குடும்பத்துக்குள்ளும் சரி, அதற்கு வெளியேயும் சரி உறவின் பாலமாக இருப்பவள். எதையும் துடைத்துவிட்டுப் போகும் தெம்புள்ளவள். அப்பன் ஒரு குடிகாரன். மீன்பிடித்துவிட்டு வந்து குடித்துப் படுத்துக்கிடப்பவன். நல்லவன். தனக்கென்று ஒன்றும் யோசிப்பது கிடையாது. பிலோமியின் அண்ணன் வேறு ஊரில் வாத்தியாராகப் போய்விட்டான். ஆனால், அடிக்கடி வருவான். அவன் அப்பாவை எல்லாவற்றையும் விற்றுவிட்டுத் தன்னுடன் வந்துவிடும்படி வற்புறுத்துவான். பிலோமியின் தோழி, காதலன் என்று கதை வெவ்வேறு தளங்களில் செல்லும். துன்பம், இன்பம், சண்டை, சச்சரவு என்பதெல்லாம் இந்த வாழ்க்கையின் தினசரி நிகழ்வுகள். பிலோமி நம்மை ஒவ்வொரு கணமும் ஆச்சரியப்படுத்துவாள். எதையும் அழுத்திச்சொல்லாமல் கதைமாந்தர்களின் போக்கிலேயே விட்டுவிட்டு, மிக யதார்த்தமாகக் கதையை வண்ணநிலவன் நகர்த்தியிருப்பார்.
இந்த இரண்டு நாவல்களுமே அன்று வெகுவாக என்னை ஈர்த்தவை. சமீபத்தில் மறு வாசிப்பில் அதே அனுபவத்தை இந்த நாவல்கள் அளித்தன. இது ஆசிரியர்களது எழுத்தின் வெற்றி. 40 ஆண்டு காலம் கழித்து அதே பாதிப்பு என்றால் அந்த எழுத்துகளின் மகத்துவம் அப்படிப்பட்டது. இன்னொரு விஷயம். ஆரம்பகால தமிழ் எழுத்துக்கும், தற்போதைய எழுத்துக்கும் நடுவில் இவர்களது படைப்புகள் இருப்பதால் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இவர்களது படைப்புகளை நாம் காணலாம்.
- கு.பாஸ்கர், தொடர்புக்கு: baskar6052@gmail.com
