

உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் விரைவில் வெளிவர இருக்கிறது. ஜோதனன் கேப் பதிப்பகம் இதற்கான இங்கிலாந்து, காமன் வெல்த் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது. இது பென்குயின் ராண்டம் ஹவுஸின் துணை நிறுவனம். ‘விக்டரி சிட்டி’ (Victory City) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தென்னிந்தியாவைப் பின்னணியாகக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது.
14ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இரு பேரரசுகளுக்கு இடையில் நடந்த போரின் பின்னணியில் நாவல் விவரிக்கப்பட்டுள்ளது. பம்பா கம்பனா என்னும் ஒன்பது வயதுச் சிறுமியின் உடலில் சேர்கிறாள், பார்வதி தேவி. இதனால் வரலாறு பெரும் மலையைப் போல் புரண்டுகொள்கிறது.
அந்தக் களங்கமில்லாச் சிறுமிக்குப் புதிதாகச் சக்தியை அளிக்கும் தேவி, பிஸ்னகா என்னும் நகரம் உருவாகத் தான் ஒரு ஆயுதமாக இருப்பேன் என வரம் அளிக்கிறாள். அடுத்த இருநூற்று ஐம்பது ஆண்டுகள் பம்பா கம்பனா, பிஸ்னகாவின் பெண் அதிகாரத்தைக் கட்டமைக்கிறாள். ஆனால், அடுத்தடுத்துக் காட்சிகள் மாறுகின்றன. ஒரு இதிகாசத்தைப் போல் இந்தக் கதையில் காதல், சாகசம் எல்லாம் தொன்மக் கதைகளின் பின்னணியில் சல்மான் ருஷ்டி விவரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசு வெளியிட்ட தமிழ்ப் பாடல்கள்
இந்தியா சுதந்திரம் பெற்ற 75ஆம் ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசு ஒருங்கிணைக்கும் ‘அம்ரித் மகோத்சவ்'வில் பிரிட்டிஷ் ஆட்சியில் தடைசெய்யப்பட்ட இந்திய மொழிப் பாடல்களின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
‘அம்ரித் மகோத்சவ்'வில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் வங்கம், குஜராத்தி, இந்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளுள் தமிழ்ப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. பாரதியாரின் கவிதைகள் உட்பட வி.ஆர்.ஏழுமலைப் பிள்ளை, கே.பி.வடிவேலு செட்டியார், வி.நடராஜ பிள்ளை போன்ற அறியப்படாத கலைஞர்களின் பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொகுப்பில் ‘இன்பத் திராவிடம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் நாரா.நாச்சியப்பனின் நூலும் இடம்பெற்றுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள வெ.நாராயணசாமியின் ‘ஆணையேற்போம்’ என்னும் நூல் கவனத்தை ஈர்க்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடிய களப்பால் குப்புசாமியைப் பற்றிய பாடல் இதில் இடம்பெற்றுள்ளது. ‘களப்பால் குப்புசாமி வீரா! / காலைக் கதிரே எங்கள் தோழா’ எனப் போற்றும் பாடல், அவர் சிறையில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக முடிகிறது.