அமெரிக்காவின் இரண்டு முகங்கள்

அமெரிக்காவின் இரண்டு முகங்கள்
Updated on
3 min read

கடந்த ஜூன் 26ஆம் தேதி பிராட்வே நடைபாதையில் நின்றிருந்தேன். நான் நின்றிருந்த பிராட்வே சிகாகோ நகரில் இருக்கிறது. நடைபாதை நெடுகிலும் நூற்றுக்கணக்கானோர் நின்றிருந்தார்கள்.

எங்கள் முன்னால் ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அதில் பங்கேற்றவர்கள் பல வண்ண ஆடைகளில் வந்திருந்தார்கள். அலங்கார ஊர்திகளிலும் வாத்தியங்கள் இசைத்துக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் வந்தார்கள்.

அந்த ஊர்வலத்தின் பெயர் ‘பெருமைப் பேரணி’. ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும் திருநங்கைகளும் திருநம்பிகளும் இருந்தனர். ஒரு பால், இரு பால் ஈர்ப்பாளர்கள் இருந்தனர். அது பால்புதுமையினரின் (LGBTQ) ஊர்வலம். பால்புதுமையினர் மீது சமூகம் அவமானத்தை ஏற்றி வைத்திருந்தது. இவர்கள் அதைக் களைந்துவிட்டு நிமிர்ந்து நிற்பவர்கள்.

எதிர்பால் ஈர்ப்பு என்பது பலருக்கும் இயற்கையானது. அதைப் போலவே ஒரு பால் ஈர்ப்பு சிலருக்கு இயற்கையானது. ஒருவர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பதுபோல் திருநராகவோ பால்புதுமையினராகவோ
இருக்கலாம்.எதுவும் இயற்கைக்கு விரோதமில்லை. இதை அந்தப் பேரணி உரக்கச் சொன்னது. அந்தப் புரிதலை அமெரிக்கச் சமூகமும் பெற்றிருக்கிறது.

உயரும் குரல்கள்

பிரபல இசைக் குழுக்கள், விளையாட்டு அணிகள், தன்னார்வ அமைப்புகள், கிறிஸ்துவத் திருச்சபைகள் எனச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பேரணியில் பங்கேற்றார்கள். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில் அது தெரிந்தது.

பலரும் பால்புதுமையினரின் வானவில் கொடியைப் பிடித்திருந்தார்கள். இதைத் தவிர, பல்வேறு வாசகங்களைத் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தார்கள். ‘துணிவோடு இரு, திருநராக இரு’, ‘நான் இப்படித்தான் பிறந்தேன்’, ‘ஒருபால் ஈர்ப்பை நான் தேர்ந்தெடுக்கவில்லை; அது என்னைத் தேர்ந்தெடுத்தது’ முதலான பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

அவை அமெரிக்காவின் முற்போக்கு முகத்தைக் காட்டின. அதே ஊர்வலத்தில் வேறு சில பதாகைகள் அமெரிக்காவின் இன்னொரு முகத்தைக் காட்டின. அவற்றில் இப்படி எழுதியிருந்தது: ‘கருக்கலைப்பு என் அரசியல் உரிமை’, ‘பெண்ணின் உடல் பெண்ணின் தேர்வு’, ‘உங்கள் கருத்தை எங்கள் வயிற்றில் திணிக்காதீர்கள்’ - இவை எல்லாம் கருக்கலைப்புக்கு ஆதரவான வாசகங்கள்.

இவை ஏன் இந்தப் பெருமைப் பேரணியில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்? காரணம் இருந்தது. இந்தப் பேரணி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று வெளியாகியிருந்தது. அதுவரை கருக்கலைப்புக்கு நாடு தழுவிய சட்டபூர்வ அனுமதி இருந்தது.

ஜூன் 24ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அந்த உரிமையை ரத்துசெய்துவிட்டது. இனி, அந்தந்த மாகாணங்களுக்கான கருக்கலைப்பு விதியை மாகாண அரசுகளே இயற்றிக்கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் இருந்தது. இந்தத் தீர்ப்பை அடியொற்றி, அமெரிக்காவின் சரிபாதி மாகாண அரசுகள் கருக்கலைப்பைத் தடை செய்யக்கூடும் எனப்படுகிறது.

1973க்கு முன்பு, கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும் பெண்கள், கருக்கலைப்பு தடைசெய்யப்பட்ட மாகாணங்களைச் சேர்ந்தவர்களாகவும் வசதியுள்ளவர்களாகவும் இருந்தால், அவர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்ட மாகாணங்களுக்குச் செல்வது அல்லது உள்ளூரில் தெரிந்த மருத்துவரிடம் சட்ட விரோதமாக அதே நேரம் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்வது.

வசதியற்ற பெண்களுக்கும் இரண்டு தெரிவுகள் இருந்தன. வேண்டாத மகவைப் பெற்றெடுப்பது அல்லது பாதுகாப்பற்ற கருக்கலைப்பை மேற்கொள்வது. இதில் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பினப் பெண்களும் பதின்பருவத்துப் பெண்களும். இந்தத் துயரங்கள் மீண்டும் தொடங்கும். அது கடந்த காலத்தைவிட மோசமாகவும் இருக்கும்.

பிளவுபட்ட கருத்துகள்

50 ஆண்டுகளுக்கு முன் கருக்கலைப்பு ஓர் அரசியல் பிரச்சினையாக இல்லை. சமூகப் பிரச்சினையாக இருந்தது. அப்போது அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளிலும் கணிசமானோர் கருக்கலைப்பை ஆதரித்தார்கள். ஆனால், இப்போது மற்ற பல பிரச்சினைகளைப் போலவே, இதிலும் கட்சிரீதியாக அமெரிக்கா பிளவுபட்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சி, ஒரு பெண்ணுக்கு அவளது கருவைக் கலைத்துக்கொள்ளும் உரிமை இருக்க வேண்டும் என்கிறது. குடியரசுக் கட்சி, அதைத் தீர்மானிக்கும் உரிமையை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கைமாற்றிக் கொடுத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரிக்கிறது.

கட்சிரீதியிலான இந்தப் பிளவு உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் இருந்தது. கருக்கலைப்பை எதிர்த்த நீதிபதிகள் ஆறு பேர், ஆதரித்தவர்கள் மூன்று பேர். இந்த ஆறு நீதிபதிகளும் குடியரசுக் கட்சி அதிபர்களால் நியமிக்கப்பட்டவர்கள். அமெரிக்காவில் நீதிபதிகளுக்கு ஓய்வுபெறும் வயதில்லை.

வாழ்நாள் முழுதும் நீதிபதிகளாக இருப்பார்கள். இந்த அறுவரில் இருவரை மூத்த புஷ்ஷும் (1991, 1992), ஒருவரை இளைய புஷ்ஷும் (2005), மூவரை டிரம்ப்பும் (2017, 2018,2020) நியமித்திருந்தார்கள். கருக்கலைப்பை ஆதரித்த மூவரும் ஜனநாயகக் கட்சி அதிபர்களால் நியமிக்கப்பட்டவர்கள். ஒருவர் கிளிண்டனாலும் (1994) இருவர் ஒபாமாவாலும் (2009, 2010) நியமிக்கப்பட்டவர்கள்.

இந்த நீதிபதிகளின் திண்ணை காலியாகிறபோது, யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சார்பானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த விநோத முறை குடியரசுக் கட்சிக்குத் தற்போது சாதகமாக அமைந்துவிட்டது. இந்தத் தீர்ப்பை மாற்றவே முடியாதா? முடியும். அரசமைப்புத் திருத்தத்தால் முடியும். ஆனால், செனட் அவையில் பைடன் அரசுக்குப் போதுமான பெரும்பான்மை இல்லை. எதிரணியில் இருக்கும் குடியரசுக் கட்சி, சட்டத் திருத்தத்துக்குச் சம்மதிக்கப் போவதில்லை.

உரிமைகளைத் துறக்கலாமா?

ஒரு பக்கம், பால்புதுமையினர் விட்டு விடுதலையாகி நிற்போம் என்று கொண்டாடுகிறார்கள். மறுபக்கம், அடிப்படைவாதிகளின் கரங்கள் பெண்களின் கருப்பை வரை நீண்டுவிட்டன. அடுத்து, பால்புதுமையினரையும் அவை தீண்டுமோ என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது. அடிப்படைவாதத்துக்கு ஆதரவான குரல்கள் அமெரிக்காவுக்குப் புதிதில்லை.

ஆனால், இப்போது ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஆதரவுடன் அது ஒலிக்கிறது. அது தேசத்தை இரு கூறாகப் பிளக்கும் வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் அறிவுச் சமூகத்துக்கு அடிப்படைவாதத்தை முறியடிக்கும் கடமை இருக்கிறது.இந்த அமெரிக்கக் கதையில், இந்தியாவுக்கும் பாடம் இருக்கிறது. நம் நாட்டில் 1971 முதற்கொண்டு கருக்கலைப்பைச் சட்டம் அனுமதித்துள்ளது.

2018இல் ஒருபால் திருமணத்துக்கும், 2019இல் ஒருவர் மூன்றாம் பாலினமாகப் பதிவுசெய்துகொள்வதற்கும் சட்டம் வகை செய்துள்ளது. அறிவாளர்களும் அரசும் பொதுச் சமூகத்திடம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.பன்னெடுங்காலக் காத்திருப்புக்குப் பிறகு சாத்தியமாகியிருக்கும் கருக்கலைப்பு உரிமைகளையும் பால்புதுமையினரின் உரிமைகளையும் நாம் விட்டுக் கொடுக்கலாகாது.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in