Published : 14 Jul 2022 09:18 AM
Last Updated : 14 Jul 2022 09:18 AM

‘அரசியல் கட்சி' - விவரிக்க முடியாத விநோதம்!

‘இருட்டறையில் உள்ளதடா உலகம்!' (பாரதிதாசன்) இந்திய ஜனநாயகம் அப்படித்தான் உள்ளது; அப்படித்தான் இருக்க வைக்கப்பட்டு உள்ளது.

இங்கே ‘மக்களாட்சி', மக்களின் ஆட்சிஇல்லை; மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி.புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மக்களின் பிரதிநிதிகள் அரசி யல் கட்சிகளின்முகவர்களாக செயல்படவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள் ளதை ஏற்க முடியவில்லை. ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்', என்னதான் ‘நல்ல நோக்கத்துக்காக' கொண்டுவரப்பட்டாலும், ஒரு மக்கள் பிரதிநிதி, சுயமாக சிந்திக்க, செயல்படவிடாமல் தடுக்கிறது; ஒரு கட்சியின் சேவகனாக மட்டுமே நீடிக்க முடியும் என்கிறது.

‘பிரதிநிதித்துவ நாடாளுமன்ற ஜனநாய கம்' - அரசியல் கட்சிகளை மையமாகக் கொண்டே இயங்குகிறது. அப்படியானால், ‘அரசியல் கட்சி' என்பது என்ன?

இரண்டு நாட்களாக இடையறாது தேடினேன். ‘அரசியல் கட்சி' என்பதற்கு வரையறுக்கப்பட்ட விளக்கம் (definition) எங்கும் தென்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 2(f) கூறுகிறது - ‘தேர்தல் ஆணையத்தால் ‘அரசியல் கட்சி' என்று பதிவு செய்யப்பட்ட அமைப்பு, அரசியல் கட்சியாகும்'. அதாவது விளக்கம் அளிக்கும் பொறுப்பை தேர்தல் ஆணையத்துக்குத் தள்ளிவிட்டது. சரி... தேர்தல் ஆணையம், ‘அரசியல் கட்சி'என்பதற்கான அதிகாரப்பூர்வ, வரையறுக்கப்பட்ட விளக்கம் எதுவும் வைத்து இருக்கிறதா? அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் கட்சி நடவடிக்கை தொடர்பாக எண்ணற்ற வழக்குகள் பல்வேறு நிலை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன; தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில்எங்கும் அரசியல் கட்சி குறித்த தெளிவான விளக்கம் இல்லை. அமைப்பு ரீதியாக, கட்டமைப்பு தொடர்பான விதிமுறைகள் இருந்தால் அரசியல் கட்சி ஆகிவிடுமா?

சிலர் கூடி நடத்துகிற ‘அமைப்பு', எதன் அடிப்படையில் ‘அரசியல் கட்சி' ஆகிறது? ஓர் அமைப்பு, அரசியல் கட்சிதான் என்று தேர்தல் ஆணையம் எதை வைத்துத் தீர்மானிக்கிறது? மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட பகுப்புக்கோடு எங்கே இருக்கிறது?

தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர், அமைப்புத் தேர்தல்... இவைஇருந்தால் போதுமா? ஆம் எனில், பல்வேறு அலுவலகங்கள், குடியிருப்புகளில் இயங்கும் ‘மனமகிழ் மன்றம்' (recreation club) விண்ணப்பித்தால், அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படுமா? ஏன் கூடாது? ஒருவேளை ஆணையம் மறுத்தால், எது ‘தடையாக' இருக்கிறது?

தேர்தல் ஆணையத்தை விட்டு, நீதியத்துக்கு வருவோம். அரசியல் கட்சி தொடர்பு வழக்குகளில் எங்கேனும் அரசியல் கட்சி என்பதற்கான விளக்கம் தீர்ப்புகளில் வழங்கப்பட்டு இருக்கிறதா? நமக்குத் தெரிந்து இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை நாம் முழுமையாக மதிக்கிறோம்; விமர்சனத்துக்கு உள்ளாக்குவது நமது நோக்க மல்ல.

மாண்பமை நீதிமன்றம், ‘உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவது இல்லை' என்று அறிவிக்கிறபோது சில ஐயங்கள் எழுகின்றன. உறுப்பினர் கட்டணமாக பொதுமக்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பெறுகிற ஒரு கட்சியின் நிர்வாகம் தொடர்பான புகார்களை, ‘உள் விவகாரம்' என்று கூறி நீதியம் ஒதுங்கிவிட முடியுமா?

இதே அளவுகோல்படி, சகோதரர்களி டையே ஏற்படும் சொத்துத் தகராறு வழக்கு - ‘குடும்ப பிரச்சினை'; விவாகரத்து வழக்கு - ‘கணவன் மனைவி இடையிலான அந்தரங்க பிரச்சினை' என்று நீதிமன்றம் தள்ளிவிட முடியுமா?

ஒரு கட்சியின் இரு பிரிவில் எந்தப் பக்கமும் சாயாது, ஒரு சாமானியத் தொண்டன் எதிர்பார்ப்பது - ‘மாண்பமை நீதிமன்றம் சொல்லட்டும்.' பிரச்சினை பெரிதாகி வெளி உலகுக்குத் தெரிந்து நீதிமன்றத்துக்கு வழக்கு வந்த பின்னரும் அது எப்படி ‘உட்கட்சி விவகாரம்' ஆகும்? ஒரு சாத்தியம்தான்உண்டு - அரசியல் கட்சி என்பது, ஒரு பொதுநல அமைப்பு என்கிற கோட்பாடு சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

மாண்பமை நீதிமன்றம் இப்படிச் சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு விளக்கம் நாமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். காரணம் மிக வலுவானது. ‘அரசியல் கட்சி' -எந்தச் சட்டத்தின் கீழும் முறையாக வரையறுக்கப்படவில்லை. இது மிக முக்கியம் என்று தேர்தல் ஆணையம், நீதியத்துக்கு ஏன் தோன்றவே இல்லை?

இது மட்டுமல்ல. பொதுத் தேர்தலில் வாக்களித்தல், அரசமைப்புச் சட்டத்தில், அடிப்படை உரிமை (பாகம் III) இல்லை. அடிப்படைக் கடமையாகவும் (பாகம் IVA) குறிப்பிடப்படவில்லை! தேர்தல் சீர்திருத்தம் குறித்துப் பேசும் தேர்தல் ஆணையம் இதனை வலியுறுத்துவதும் இல்லை.

அரசியல் கட்சியின் வருவாய், வருமானவரிக்கு உட்படாது; தனது சின்னத்தைப் பரப்புவதில் அரசியல் கட்சி செய்யும் செலவு,அக்கட்சி வேட்பாளரின் கணக்கில் வராது; அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை மட்டுமே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்; ஆதரவளிக்கும். இத்தனை இருந்தும், ‘அரசியல் கட்சி' என்பதற்கான தெளிவான விளக்கம் மட்டும் எந்தச் சட்டமும் சொல்லப் புகாது. என்ன சொல்வது? எல்லாரும் சமம். அரசியல் கட்சிகள் ‘அநியாயத்துக்கு' அதிக சமம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x