ராணுவப் பள்ளி கவனம் பெறுமா?

ராணுவப் பள்ளி கவனம் பெறுமா?
Updated on
2 min read

ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ‘அக்னிபாத்’ என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால், பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களை ராணுவத்துக்குத் தயார்படுத்துவதற்கான முன்னோடித் திட்டமான சைனிக் பள்ளியோ பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.

ஏழை, எளிய மக்களும் படித்து ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, 1960-ம் ஆண்டு பிரதமர் நேருவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனனின் வழிகாட்டலில், அன்றைய 28 மாநிலங்களிலும் தலா ஒரு சைனிக் பள்ளி தொடங்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் 32 சைனிக் பள்ளிகள் உள்ளன. இந்திய ராணுவத்துக்கு 25 சதவீத ராணுவ வீரர்களை சைனிக் பள்ளிகள் கொடுத்திருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதியில் 1962 ஜூலை 16-ம் தேதி அமராவதி சைனிக் பள்ளி தொடங்கப்பட்டது. சிறந்த சிபிஎஸ்இ உண்டு உறைவிடப் பள்ளியாகத் திகழ்ந்துவரும் இப்பள்ளி, வரும் 16-ம் தேதி 60-ம் ஆண்டை நிறைவுசெய்கிறது. இந்திய விமானப் படைப் போர் விமானி அபிநந்தனின் தந்தை வர்த்தமானன், தமிழகக் காவல் துறையின் உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்படப் பலரும் அமராவதி சைனிக் பள்ளியில் படித்தவர்கள்தான்.

வேற்று மாநிலப் பிரச்சினை

ஏழை மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட சைனிக் பள்ளிகள், இன்று லட்சக்கணக்கில் செலவழிக்கும் கல்விக் கூடங்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் வரை கல்விக் கட்டணம் அதிகரித்து, இன்று ஏழைகளுக்கு எட்டாத கல்விக்கூடமாக சைனிக் பள்ளிகள் மாறியுள்ளன. ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான ஓய்வூதியமே, மாணவர் களின் கல்விக் கட்டணத்திலிருந்துதான் ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான வீடுகளும் இல்லை. அமராவதி அணை கட்டப்பட்டபோது பணியாற்றியவர்கள் தங்கியிருந்த அறைகளைத்தான் தற்போதும் ஆசிரியர்கள் பயன்படுத்திவருகிறார்கள். ‘சைனிக் ஸ்கூல் சொசைட்டி சட்ட’த்தின்படி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி வளர்ச்சிக் குழுவைக் கூட்ட வேண்டும். அமராவதி சைனிக் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. பள்ளி வளர்ச்சியும் தொய்வு கண்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, தமிழக மாணவர்களுக்குப் பள்ளியில் போதிய இடங்கள் கிடைப்பதில்லை என்ற மனக்குமுறல்களும் எழுந்துள்ளன. ஒரு மாநிலத்திலோ யூனியன் பிரதேசத்திலோ சைனிக் பள்ளி இல்லையென்றால், அருகமை மாநில மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால், இன்றைக்கு பிஹார், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமராவதி சைனிக் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். வயதுச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும், 6-ம் வகுப்பு சேரும் மாணவர்கள், தோற்றத்தில் வயது மூத்தவர்களைப் போல் உள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் 2 சைனிக் பள்ளிகள் இருந்தாலும், அங்கிருந்தும் இங்கு வந்து மாணவர்கள் சேர்கின்றனர். இதனால் மற்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகள் முறையாக நடக்கின்றனவா என்பன உட்படப் பல்வேறு சந்தேகங்கள் தமிழகப் பெற்றோர் மனங்களில் எழுகின்றன.

‘‘கேரள, கர்நாடக மாநிலங்களைப் போல் சைனிக் பள்ளி விஷயத்தில், தமிழ்நாடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, இப்பிரச்சினைகள் களையப்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால், இது தொடர்பான கோப்புகள் தமிழக அரசிடம் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன” என்கிறார் சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரும், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கோகுலகிருஷ்ணன். 60 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த பள்ளியின் பிரச்சினைகள், இந்த நேரத்திலாவது களையப்படுமா?

- இரா.கார்த்திகேயன், தொடர்புக்கு:

karthikeyan.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in