சொல்... பொருள்...தெளிவு | நிலைத்த வளர்ச்சி இலக்குகள் தற்போதைய நிலை

சொல்... பொருள்...தெளிவு | நிலைத்த வளர்ச்சி இலக்குகள் தற்போதைய நிலை
Updated on
2 min read

ஐ.நா.வின் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் என்பவை (Sustainable Development Goals- SDGS) வறுமையையும் பசியையும் ஒழிப்பது, சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்துவது, குடிநீர் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவது உள்ளிட்ட 169 குறிக்கோள்களைக் கொண்டவை.

இந்த 17 நிலைத்த இலக்குகளை 2030-க்குள் எட்ட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட 200 நாடுகள் 2015 செப்டம்பரில் உறுதியேற்றன. இதன் மூலம், அடுத்த 15 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நடவடிக்கைகளால், மக்களுக்கும் பூமிக்கும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது.

\நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்த ஐ.நா.வின் ஆண்டு அறிக்கை, அந்த இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், 2030-க்குள் இலக்குகளை அடைய நாடுகள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஐ.நா. கடந்த வாரம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

கரோனா பெருந்தொற்றுப் பரவல், காலநிலை நெருக்கடி, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட அதிகரித்துவரும் மோதல்கள் போன்ற காரணங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய நிலைத்த வளர்ச்சி இலக்குகள் ஆபத்தில் உள்ளன என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

பெருந்தொற்று காரணமாக வறுமையை ஒழிப்பதில் நான்கு ஆண்டுகளுக்கு எட்டப்பட்ட முன்னேற்றத்தை இழந்திருக்கிறோம். 2020இல் உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் தீவிர வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உருவான உக்ரைன் போர், நவீனக் காலத்தின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கவலையளிக்கும் அம்சங்கள்

நிலைத்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

# உலகளவில் 10 பேரில் ஒருவர் பசியால் வாடுகிறார். ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை.

# தடுப்பூசி மூலம் கிடைத்துவந்த பாதுகாப்பு 10 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளது. காசநோய், மலேரியாவால் இறப்புகள் அதிகரித்துள்ளன.

# 2020இல் பதற்றம், மனச்சோர்வு சார்ந்த உலகளாவிய பாதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இளைஞர்களும் பெண்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# 2021இல், 1 கோடியே 70 லட்சம் மெட்ரிக் டன் ஞெகிழி பெருங்கடல்களில் கொட்டப்பட்டுள்ளது. இந்த மாசுபாட்டின் அளவு 2040இல் 2 அல்லது 3 மடங்காக உயர்ந்துவிடும்.

# ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை சுமார் 2 கோடியே 40 லட்சம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குத் திரும்ப வர இயலாத நிலையில் உள்ளனர்.

# 2019இல் பெருந்தொற்றுக்கு முன்னர், மொத்த வேலைவாய்ப்பில் 39% பெண்கள் இருந்தனர். ஆனால், 2020இல் உலகளவில் வேலை இழப்புக்கு உள்ளானவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள்.

# உக்ரைன் போர், தொற்றுநோயின் புதிய அலைகள் போன்றவை காரணமாக 2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 0.9 சதவீதம் குறைந்துள்ளது.

வளர்ச்சி கண்ட அம்சங்கள்

# உலக மக்கள்தொகையில் 91 சதவீதம் பேர் மின்வசதியைப் பெற்றுள்ளனர். 2010 இல் 120 கோடிப் பேர் மின்வசதி இல்லாமல் இருந்தனர். அதே நேரம், 2020இல் 73 கோடியே 30 லட்சம் பேர் மட்டுமே மின்வசதி இல்லாமல் உள்ளனர்.

# பாதுகாப்பான குடிநீர் வசதியைப் பயன்படுத்தும் உலக மக்கள்தொகையின் விகிதம் 2015 இல் 70 சதவீதமாக இருந்தது. அது 2020இல் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.

# அதே காலகட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் மக்கள்தொகை குறைந்துள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்போர் எண்ணிக்கை, 74 கோடியிலிருந்து 49 கோடி என மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

# பெருந்தொற்று காரணமாக இணையப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 410 கோடியாக இருந்த இணையப் பயனர்களின் எண்ணிக்கை 2021இல் 490 கோடியாக அதிகரித்துள்ளது.

எதிர்கால மதிப்பீடுகள்

# தற்போதைய முன்னேற்ற விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், 2030 இல் கீழ்க்கண்ட வகையில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்:

# 160 கோடிப் பேர் பாதுகாப்பான குடிநீர் வசதியைப் பெறாமல் இருப்பார்கள்.

#280 கோடிப் பேர் பாதுகாப்பான சுகாதார வசதியைப் பெறாமல் இருப்பார்கள்.

# 190 கோடிப் பேர் கைகழுவுதல் போன்ற அடிப்படை சுகாதார செயல்பாடுகளுக்கான வசதிகள் கிடைக்காமல் இருப்பார்கள்.

- ஹுசைன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in