

தமிழின் முதல் மகளிர் இதழைத் தொடங்கியவர் பற்றிய குறிப்பை ஆங்கில நூல் ஒன்று தருவது வேடிக்கைதான். நாட்டின் முதல் ஆங்கில மகளிர் இதழைத் தொடங்கி நடத்திய கமலா சத்தியநாதனின் கணவர் சாமுவேல் சத்தியநாதனின் உதவியுடன் வெளியான ‘இந்திய கிறிஸ்தவர்களின் வாழ்க்கை வரலாறு’ (1896) நூலில், நீண்ட காலப் புதிர் ஒன்றுக்கான விடை கிடைத்திருக்கிறது. 1865இல் மதராஸிலிருந்து வெளிவந்த ‘அமிர்தவசனி’ மகளிர் இதழை நிறுவி, அதன் ஆசிரியராகப் பல ஆண்டு காலம் செயல்பட்டவர் ‘மதராஸ் மிஷனரி’ ஆர்.எம்.பாபுவின் மனைவி தபிதா பாபு (1845-1890) என்கிறது இந்நூல்.
தமிழ் நூல் விவரணை அட்டவணை நூலில் (1865), ‘1865ஆம் ஆண்டு மதராஸில் ஆச்சரியமூட்டும் வகையில் ‘அமிர்தவசனி’ எனப் பெயரிடப்பட்ட படக்கதைகள் கொண்ட இதழ் ஒன்று இந்துப் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்டது. இதில் எழுதியோர் பெரும்பாலும் உள்நாட்டுக் கிறிஸ்தவப் பெண்கள்’ எனப் பதிவுசெய்கிறது.
‘அமிர்தவசனி’யில் வெளியான குழந்தை மணம் எதிர்ப்பு, சுகாதாரம் பேணுதல், நன்னடத்தை, கொடை வழங்குதல் குறித்த கட்டுரைகள் ‘தத்துவ போதினி’ இதழ்களில் இடம்பெற்றுள்ளன. பெண் எழுத்துக்கு, அதிலும் வேற்று மதப் பெண்களின் எழுத்துக்கு அன்றைய சூழலில் ‘தத்துவ போதினி' தந்த இந்த இடம் மிக முக்கியமானது.
1860-களில் பெண் கல்வி குறித்த பெரும் முன்னெடுப்பு மதராஸில் நடந்துள்ளது. ஆந்திரசன், ராஜகோபால் ஆகியோர் வரிசையில் பாபு தம்பதியும் மதராஸில் பள்ளிகளை நிர்வகித்துவந்தனர். கறுப்பர் நகரப் பகுதியில் ராஜகோபால் பெண்களுக்கெனத் தொடங்கிய பள்ளியின் குழந்தைகளிடமும், அவர்கள் தாய்மாரிடமும் சென்று சேர்வதே ‘செனானா’ எனப்படும் பெண்கள் மிஷனுக்கான தொடக்கப் பணி என்று தபிதா கருதினார். இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் வாழ்க்கை வரலாறு நூலைத் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழியிலும் பெண்கள் புரிந்துகொள்ள ஏதுவாக எளிய நடையில் தபிதா எழுதினார்.
மணமான இந்துப் பெண்களிடம் சீரிய கருத்துகளைக் கொண்டுசெல்ல ‘அமிர்தவசனி’ சிற்றிதழை தபிதா தொடங்கினார். அப்போது அவரது வயது 20. “இந்த இதழில் எழுதியவர்கள் மதம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவிய இந்துப் பெண்கள்; இவர்களில் பலர் மிஷன் பள்ளிகளில் பயின்றவர்கள்” என ‘ஜர்னல் தே மிஷன் இவாஞ்சலிக்’ என்ற பிரெஞ்சு நூல் குறிப்பிடுகிறது. கறுப்பர் நகரத்தின் ஹர்ட் (Hurd) என்ற அமெரிக்க மிஷனரியின் வீட்டில் வளர்க்கப்பட்ட தபிதா, அங்கு ஹர்ட் நடத்திய அமெரிக்க மிஷன் அச்சகத்தில் சிறு வயது முதலே ஈடுபாடுகொண்டிருந்தார். இந்த அனுபவமே பின்னாளில் கறுப்பர் நகரத்தில் சத்தியதீபம் அச்சகத்தை அவர் தொடங்கி நடத்த உதவியது. அச்சுக்கோப்பது முதல், சரிபார்ப்பது வரை அனைத்துப் பணிகளையும் தபிதா முன்னின்று கவனித்துக்கொண்டார்; சத்தியதீபம் அச்சகத்தில் ‘அமிர்தவசனி’ அச்சிடப்பட்டது எனவும் மர்டாக் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதழுக்கான சந்தா, விண்ணப்பங்களை தபிதாவின் கணவர் ஆர்.எம்.பாபு பெற்றுக்கொண்டதற்கான தரவும் உள்ளது.
தபிதா தன்னை எங்கும் முன்னிறுத்த முயன்றதில்லை. அவரது பெயரை ‘மிசஸ் பாபு’ என்றே பதிவுசெய்துள்ளார். நிழலில் இயங்கிய தபிதாவைக் காலம் தன் சுழலுக்குள் இழுத்துச் சென்று அமிழ்த்திவிட்டது. “இம்மண்ணில் பெண் கல்விக்கு எதிராக எழும் ஒவ்வொரு தடைக்கும் நான் முழு விடையளிக்க முயன்றுள்ளேன்” எனத் தன் ‘ராணியார்’ நூலின் முன்னுரையில் தபிதா குறிப்பிடுகிறார். இங்கு அவர் செய்ததும் அதைத்தான். பெண் விடுதலைக்கான முதல் தமிழ் அச்சுக் குரலாக நூற்றாண்டு கடந்தும் ஒலிக்கிறார் தபிதா.
- நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர், தொடர்புக்கு: niveditalouis@gmail.com