இங்கிலாந்தில் தமிழ்ப் புத்தகக்காட்சி

இங்கிலாந்தில் தமிழ்ப் புத்தகக்காட்சி
Updated on
1 min read

லண்டனில் உள்ள வட வெம்ப்ளியின் லண்டன் தமிழ் நிலைய அரங்கில், ஒரு தமிழ்ப் புத்தகக்காட்சி ஜூன் மாதம் நடைபெற்றது. தெரிவுசெய்யப்பட்ட இலக்கிய நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைத் தேர்வுசெய்தவர்கள் காட்டியிருந்த ஆழ்ந்த ரசனையும் கவனமும் பன்முகத்தன்மையும் குறிப்பிடப்பட வேண்டியவை.

வட வெம்ப்ளி, பழமையான ஒரு புறநகர்ப் பகுதி. அதன் பெயரை முன்னமே எங்கோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று தோன்றியது. இந்தியாவில், நூலக இயக்க வளர்ச்சிக்கு வித்திட்டோரில் முக்கியமானவர் பரோடா சமஸ்தான அரசர் சாயாஜிராவ் கெய்க்வாட். அந்த சமஸ்தானத்துக்கு அவர் அரசராயிருந்தபோது, அமெரிக்க நூலக விரிவுரையாளரும் ஆர்வலருமான வில்லியம் அலன்சன் போர்டன் என்பவரை அழைத்து வந்து, தனது சிற்றரசின் நூலகத் துறை இயக்குநராக நியமித்தார். போலன்சன் 1910ல் பணியில் சேர்ந்ததும், பரோடா அரசு நூலகத்தை மாநில மைய நூலகமாக விரிவுபடுத்தினார். மன்னரின் நன்கொடையாக 20,000 புதிய நூல்கள் சேர்க்கப்பட்டன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. அடுத்த ஆண்டே, பரோடா சமஸ்தானம் முழுவதும் நடமாடும் நூலகங்கள் அனுப்பப்பட்டு, மூலைமுடுக்குகளில் வாழ்ந்த மக்களுக்கும் புத்தகங்கள் போய்ச்சேர வழிவகை செய்யப்பட்டது.

மேலும், பல்வேறு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட அவர், பரோடா மாநில மைய நூலகத்தின் சார்பில் ‘லைப்ரரி மிஸ்ஸலேனி’ என்கிற பெயரிலான மும்மொழி (ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி) இதழைக் கொண்டுவந்தார். 1918-28ஆம் ஆண்டுகளில், பரோடா நூலகத் துறைப் பணிகளை விளக்கும் ஒரு கண்காட்சி பம்பாய், குவாலியர், கோட்டா, வாரணாசி, கடல் கடந்து இங்கிலாந்தின் வெம்ப்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின், அதே இடத்தில் ஒரு கண்காட்சியைத் தமிழ் மக்கள் நடத்தியதும், அதில் நானும் கலந்துகொண்டதும் பெருமகிழ்ச்சியைத் தந்தன. சென்னை புத்தகக்காட்சியுடன் ஒப்பிட்டால் வெம்ப்ளியில் நடைபெற்றது மிகச் சிறியதுதான். ஆனால், இதை ஏற்பாடு செய்தவர்கள், இலங்கை மலையகத் தமிழ் மக்கள், லண்டன் நகர்வாழ் தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோர் அடங்கிய சிறு குழு.

கண் முன்னால் பரோடா சாயாஜிராவ் தொடங்கி இந்தக் குழு வரையிலான ஒரு நீண்ட தொடர் ஓட்டம் மரபாக நீண்டுவந்திருக்கிறது. இந்த ஓட்டம் என்றென்றைக்கும் தொடரும்.

- கமலாலயன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: kamalalayan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in