மகாபாரதத்தின் எல்லைகளை விரித்தவர்

மகாபாரதத்தின் எல்லைகளை விரித்தவர்
Updated on
1 min read

மகாபாரதத்தின் எல்லைகளை விரித்தவர்நாடக ஆளுமை பீட்டர் ப்ரூக் காலமாகிவிட்டார். இந்திய இதிகாசமான மகாபாரதத்தை மேற்கத்திய நாடக அரங்கில் பிரபலப்படுத்தியவர் அவர். 1985இல் பிரெஞ்சு எழுத்தாளர் ழான் கிளாட் கேரியர் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘லே மகாபாரதா’ பிரெஞ்சு நாடகத்தை எழுதினார். 9 மணி நேரக் கால அளவு இந்த நாடகத்தை இயக்கியவர் பீட்டர் ப்ரூக். பிரான்ஸின் தென்கிழக்கு நகரான அவினானில் போல்பன் குவாரி அரங்கில் 1985, ஜூலை 7இல் இந்த நாடகம் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நாடகம் உலகின் பல பாகங்களில் நிகழ்த்தப்பட்டு பெரும் கவனம் பெற்றது. இதன் மூலம் ஓர் இந்திய இதிகாசத்துக்கு சர்வதேச நாடக அரங்கில் அங்கீகாரம் கிடைத்தது.

இந்தப் பிரெஞ்சு நாடகத்தை ப்ரூக், 1987இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து லண்டனில் அரங்கேற்றினார். இந்த நாடகம், பகடையாட்டம், வனவாசம், போர் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. 1989இல் இந்த நாடகம் ப்ரூக்கால் 6 மணி நேரத் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டது. பின்னர் இது மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டுத் திரைப்படமாகவும் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. இதில் திரெளபதியாக நடித்த நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், ப்ரூக்கின் பன்முகக் கலாச்சாரப் பற்றுதான் அவரது பலம் என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ப்ரூக் தன் வாழ்நாளில் 8 வருஷத்தை மகாபாரத உருவாக்கத்துக்காகக் கொடுத்திருக்கிறார். இவ்வருஞ்செயலுக்காக இவருக்கு 2021-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கிக் கெளரவித்தது.

அன்புள்ள மார்க்கேஸுக்கு...

லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் பதிப்பிக்கப்படாத கடிதங்களை அவரது பேத்தி எமிலியா கார்சியா எலிசோண்டோ சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். மார்க்கேஸின் அறையில் ‘பேத்தி’ என எழுதப்பட்ட ஒரு பெட்டியைக் கண்டெடுத்துள்ளார். அதில் அவரது தாத்தாவுக்கு சிலிக் கவிஞர் பாப்லோ நெருடா, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ, அமெரிக்க நடிகர் ராபர்ட் ரெஃபோர்டு உள்ளிட்ட பல பிரபலங்கள் எழுதிய 150 கடிதங்கள் இருந்துள்ளன.

-ஜெய்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in