

காரைக்கால் சாந்தி தியேட்டரில் ‘தெய்வம்’ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம். எங்கள் பகுதியின் எல்லாத் தெருப் பெண்களும் ‘செகண்ட் ஷோ’வுக்கும் குழந்தைகளுடன் கூட்டம்கூட்டமாகச் சென்று பார்த்துவந்தனர். அதில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடல் குறித்து ஊரே பேசிக்கொண்டது. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். சிறுவனாக இருந்த எனக்கு அந்தப் பாடலின் ஆதாரமாக இருந்த ராகத்தின் பெயர் தெரியாது.
இளமையின் பரவசத்துடன் காரைக்கால் டைமண்ட் தியேட்டரில் ‘இளமைக் காலங்கள்’ பார்த்தபோது, அதில் இடம்பெற்றிருந்த ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும்’ என்கிற பாடல் என்னை என்னவோ செய்தது. பாடலின் சரணத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனி எங்கும் பூ வசந்தம். கட்டிக் கரும்பு தொட்டவுடன் சாறாகும்’ என்கிற வரிகளில் நின்று சுழன்றன ஆக்ஸிடோசின் உணர்வுகள்! அப்போதும் தெரியாது, அந்தப் பாடல் என்ன ராகம் என்று!
பாடல்களின் அடிநாதம்
அடுத்த சில ஆண்டுகளில் சினிமா இயக்குநர் கனவுகளுடன் சென்னை வந்து உதவி இயக்குநராகவும் பணிபுரியத் தொடங்கியிருந்தேன். சினிமாவில் இசை நுணுக்கங்களை, திரையிசைப் பாடல்களின் ஆதார ராகங்களை, பாடலின் இடையிசையில் பின்னணி இசைக் கருவிகளைப் பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து வியந்தேன். அப்போது இளையராஜாவின் விரல் தூரிகை, புதிய புதிய ஃபியூஷன் பாடல்களைத் தீட்டிக்கொண்டிருந்தது. ‘கல்யாணத் தேனிலா’ பாடலும் ‘ஆகாய வெண்ணிலாவே’ பாடலும் வெளியாகி உயிரைத் திருடியபோதுதான் இந்தப் பாடல்களின் அடிநாதம் தர்பாரி கானடா ராகம் என்று தெரிந்துகொண்டேன். காதல், கருணை, உணர்ச்சிப் பெருக்கு, மெல்லிய துயர், அதீத பக்தி, ஆனந்தம் போன்ற முக்கியமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ராகமாகத் தர்பாரி கானடா வர்ணிக்கப்படுகிறது. கர்னாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை தவிர்த்து, வெளி நாட்டு இசை வடிவங் களான ஜாஸ், ப்ளூஸ் ஆகியவற்றிலும் தர்பாரி கானடாவின் சாயல் காணப்படுவதாக இசை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்குலக இசை மரபில் இது மைக்ரோ டோனல் (Micro tonal) என்று அழைக்கப்படுகிறது. தமிழ்ச் செவ்வியல் ராகமான கானடா, இந்துஸ்தானி செவ்வியல் ராகமான தர்பாரி கானடாவுக்கு இணையாகச் சொல்லப்படுகிறது.
நூற்றாண்டுகள் கடந்த புகழ்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் ‘கோபால் நாயக்’ என்ற இசைக் கலைஞரின் தலைமையில், தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த 300 கர்னாடக இசைக் கலைஞர்களை இசை பயிற்றுவிப்பதற்கென, டெல்லி அரசர் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலி்க் கபூர் டெல்லிக்கு அழைத்துச் சென்றதாக ‘கருணாமிர்த சாகரம்’ நூலில் ஆபிரகாம் பண்டிதர் பதிவுசெய்திருக்கிறார். கோபால் நாயக் தென்னிந்திய இசைவாணர்களில் ஆற்றல்மிக்கவர். புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் ஆமிர் குஸ்ரோ கில்ஜியின் அரசவையில் அரசவைக் கவியாக இருந்தவர். சிதார் என்னும் நரம்பிசைக் கருவியை உருவாக்கியவர். இந்துஸ்தானி இசையை மேம்படுத்தியவர்களில் முக்கியமானவர். கோபால் நாயக்கின் இசையை மறைந்திருந்து கேட்டுவிட்டு, அனைவரும் பிரமிக்கும்படி ஆமிர் குஸ்ரோ மறுபடியும் பாடிக்காட்டினார் என்கிற செய்தியை அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. பிறகு, அக்பரின் அரசவைப் பாடகராக இருந்த தான்சேனால் தர்பாரி கானடா ராகம் மேலும் புகழ்பெற்றது. தர்பார் எனும் அரசவையில் பாடப்பட்டுப் பிரபலம் அடைந்ததால் தர்பாரி கானடா எனப் பெயர்பெற்றது.
இளையராஜா கொடுத்த உயிர்
இந்த ராகம் குறித்தும் இதை இளையராஜா தன் பாடல்களில் எப்படி வித்தியாசமாகக் கையாண்டுள்ளார் என்பது குறித்தும் திரையிசை ஆய்வாளர் டெஸ்லா கணேஷிடம் கலந்துரையாடினேன்.
‘‘22ஆவது மேளகர்த்தா ராகமாகிய கரகரப்ரியாவின் சேய் ராகம் கானடா. 20ஆவது மேளகர்த்தா ராகமாகிய நடபைரவியின் சேய் ராகம் தர்பாரி கானடா. இந்த ராகத்தின் அமைப்பில் இந்துஸ்தானியில் இருக்கக்கூடிய கட்டமைப்புகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. தர்பாரி கானடா ராகத்தைப் பொறுத்தவரை கே.வி.மகாதேவன் காலம் வரை மோனோஃபிக் முறையிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. மோனோஃபோனிக், பாலிஃபோனிக் முறையின் அடுத்த வடிவமான ஹார்மோனிக் முறையை எம்.எஸ்.விஸ்வநாதன் சிறிய அளவில் தொடங்கிவைத்தார். ‘வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்’ போன்ற பாடல்களில் இந்த ஹார்மோனிக் முறையின் கூறுகள் உள்ளன. 1982இல் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ என்ற படத்தில் ‘விதைத்த விதை தளிராய் எழுந்து’ என்ற தீபன் சக்கரவர்த்தி - சசிரேகா பாடிய பாடல் வழியாக ஹார்மோனிக் முறையில் தர்பாரி கானடா ராகத்தைக் கையாண்டு, அதன் இடையிசையில் இளையராஜா அற்புத ஜாலங்கள் புரிந்தார். ஆனால், அதே படத்தில் இடம்பெற்ற ‘அலைபாயுதே கண்ணா’ எனும் கானடா ராகப் பாடல் அளவுக்கு இந்தப் பாடல் புகழ்பெறவில்லை. செவ்வியல் தன்மை மிகுந்த, சற்று இறுக்கமான அதன் கட்டமைப்பை எளிமையாக அழகாக்கி, ‘இளமைக் காலங்கள்’ என்னும் படத்தில் ‘இசை மேடையில் இந்த வேளையில்’ என்னும் தர்பாரி கானடா ராகப் பாடலை மீண்டும் உருவாக்கினார். அந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. இதுதான் இளையராஜா டச்!’’ என்றார் அவர்.
தர்பாரி கானடாவில் அவர் நிகழ்த்திய இசை அற்புதங்களுக்கு உதாரணங்களாக, அதற்குப் பிறகு வெளிவந்த ‘கல்யாணத் தேன் நிலா’, ‘ஆகாய வெண்ணிலாவே’, ‘மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா’, ‘உனக்குப் பிடித்த பாடல் அது எனக்கும் பிடிக்குமே’ ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.
தர்பாரியின் பயணம்
1942இல் வெளியான ‘மனோன்மணி’ திரைப்படத்தில் பி.யூ.சின்னப்பா பாடிய ‘மோஹனாங்க வதனி’ என்கிற பாடலிலிருந்து தமிழ்த் திரையிசையில் தர்பாரி கானடா ராகம் கோலோச்சத் தொடங்கியது. தொடர்ச்சியாக ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் தர்பாரி கானடாவை விதவிதமான அழகுடன் கையாண்டுள்ளனர். சில முக்கிய தர்பாரி கானடா ராகப் பாடல்கள்: ‘முல்லை மலர் மேலே’ (உத்தம புத்திரன்), ‘சின்னஞ் சிறிய வண்ணப் பறவை’ (குங்குமம்), ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு’ (நீதிக்குத் தலை வணங்கு), ‘பூமாலை வாங்கி வந்தான்’ (சிந்து பைரவி), ‘புது வெள்ளை மழை’ (ரோஜா), ‘காற்றே என் வாசல் வந்தாய்’ (ரிதம்), ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (கருத்தம்மா), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ (கன்னத்தில் முத்தமிட்டால்), ‘மலரே மௌனமா’ (கர்ணன்), ‘நீ காற்று நான் மரம்’ (நிலாவே வா).
ஒரு வசீகர அழகு கொண்ட ராகம் இது. கேட்கிற கணங்களில் எல்லோரையும் ஈர்த்து, எளிதில் நினைவில் பதிந்துவிடும் தன்மை கொண்டது. நாடி நரம்புகளில் உடனடிப் பரவசத்தைப் பரவச்செய்வதாலேயே, இது உலகின் ஜனரஞ்சகமான ராகமாகக் கருதப்படுகிறது. மீண்டும் ஒரு முறை இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். தர்பாரி கானடா என்னும் ராக தேவதை இன்னும் வசீகரமாக உங்கள் இதயத்தைத் தழுவி ஆனந்தம் தருவாள்.
எஸ்.ராஜகுமாரன், எழுத்தாளர், இயக்குநர். தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com