

பிரபலங்களின் இறப்பு பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களில் ஒன்று. தற்போது பிரபலங்களின் இறப்பு மட்டுமில்லாமல் அவர்களுடைய பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உடன்பிறந்தோர் ஆகியோரின் இறப்பும்கூட மக்கள் கவனத்தை ஈர்ப்பவையாகக் கட்டமைக்கப்படுகின்றன.
அரசியல், சினிமா போன்ற துறைகளில் நீண்ட காலம் இயங்கிப் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்ற ஆளுமைகள் இறக்கும்போது, அந்த மரணம் குறித்த செய்திகளும் இறந்தவரின் பெருமைகளை எடுத்துக்கூறும் செய்தித்தொகுப்பும் ஊடகங்களில் இடம்பெறுவது இயல்பானது.
காட்சி ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு பிரபலமானவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் மரணம் தொடர்பான செய்திகள், இறுதி மரியாதை செலுத்த வரும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகள், இறந்தவர் குறித்துப் பிரபலங்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்து ஆகியவை ஒளிபரப்பப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் யூட்யூப் அலைவரிசைகள் என்னும் இணையக் காட்சி ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டன. இதனால், சமூகத்தில் ஓரளவு அறியப்பட்டவர்கள், சினிமா துறையில் யார் இறந்தாலும் அது குறித்த செய்திகளுக்கு நேரடி ஒளிபரப்புகள் வரத் தொடங்கிவிட்டன.
செய்திகளைத் தேவைக்கு அதிகமாகப் பெரிதுபடுத்திப் பரபரப்பாக முன்வைப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை ஈர்த்து லாபம் ஈட்டும் வேட்கை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகப் பிரபலங்களின் மரண நிகழ்வுகளின் ஒவ்வொரு தருணமும் ஒளிபரப்பப்படுகிறது.
பிரபலங்களின் நெருங்கிய உறவினர்களின் மரணத்துக்கும் பிரபலங்களின் மரணத்துக்கு இணையான ஊடக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.
அந்தரங்கத்தில் அத்துமீறல்
2015-ல் தனது மகன் இறந்தபோது, துக்கம் நிறைந்த தருணத்தில் தம்மைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நடிகர் விவேக் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அப்போதும் அவருடைய வீட்டுக்குப் பல ஊடகங்கள் கேமராக்களுடன் படையெடுப்பதை நிறுத்தவில்லை.
இறந்தவரின் வாழ்க்கைத் துணையோ குழந்தைகளோ கதறி அழும்போது அவரை நோக்கி கேமராக்களைத் திருப்புவது தொடங்கி, இறந்தவருக்கான இறுதிச் சடங்கின் ஒவ்வொரு அம்சத்தையும் முழுமையாக ஒளிபரப்புவது வரை துக்க வீட்டின் அனைத்து நிகழ்வுகளும் காட்சிப் பொருளாக்கப்படுகின்றன.
இறந்தவர்கள், நெருங்கிய உறவைப் பறிகொடுத்தவர்களின் தனிப்பட்ட வெளி, அந்தரங்கத் தருணம் ஆகியவை குறித்து பல யூடியூப் அலைவரிசைகளுக்குக் குறைந்தபட்ச அக்கறைகூட இருப்பதில்லை.
2020-ல் நடிகரும் தோல் மருத்துவருமான சேதுவின் மரணத்தின்போது சடலம் வைக்கப்பட்டிருந்த அவருடைய வீட்டிலும் தகன மேடையிலும் நடந்த இறப்பு சார்ந்த சடங்குகள் அனைத்தும் சில யூடியூப் அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
ஒருவரின் இறப்பைச் செய்தியாக்கும்போது இறந்தவர் அல்லது அவருடைய குடும்பத்தினரின் அந்தரங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் கவனத்துடன் ஊடகங்கள் செயல்பட வேண்டும்.
ஆனால், நம் நாட்டில் பிரபலங்கள், குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு அந்தரங்கம், தனிப்பட்ட வாழ்க்கை என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்பதே பெரும்பாலோரின் நம்பிக்கை.
ஊடகங்களும் இந்த மனப்போக்குடனோ அல்லது இத்தகைய மனப்போக்குக்குத் தீனிபோடும் வகையிலோதான் செயல்படுகின்றன. இறப்பு சார்ந்த நிகழ்வுகளிலும் இதே அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.
விதிமீறிய காட்சிப்படுத்தல்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வாரம் மரணமடைந்தபோது இந்தப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டது. மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் சடலம் ஏற்றப்பட்டு வீட்டுக்குக் கொண்டுவரப்படுவது தொடங்கி, சடலத்தை எரிப்பதற்கு முன் தகன மேடையில் செய்யப்படும் சடங்குகள் வரை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
சில யூடியூப் அலைவரிசைகள் இவற்றை நேரலையாக ஒளிபரப்பிய காணொளிப் பதிவுகள் அந்த அலைவரிசைகளில் கிடைக்கின்றன. 12 மணி நேரம் வரை நீளும் இந்தக் காணொளிகளை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நேரலையில் இவற்றைப் பார்த்து கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர்.
இதுபோன்ற நேரலை ஒளிபரப்பு போதாதென்று ‘கணவரை நினைத்துக் கதறி அழுத மீனா’, ‘கணவருக்குக் கடைசியாக முத்தம் கொடுத்த மீனா’, ‘கணவரின் அஸ்தியை அழுதபடியே சுமந்து செல்லும் மீனா’, ‘கணவரின் மரணத்துக்குப் பின் மீனா செய்த காரியத்தைப் பாருங்கள்’ என்பது போன்ற சர்ச்சைக்குரிய/கவன ஈர்ப்புத் தலைப்புகளுடன் பல யூடியூப் அலைவரிசைகள் காணொளிகளை வெளியிட்டுள்ளன.
இணைய ஊடகங்களிலும் இதுபோன்ற மோசமான தலைப்புகள், ஒளிப்படங்களுடன் செய்திகளைக் காண முடிகிறது. இந்த மரணத்தை ஒட்டி மீனாவின் மகள் நைனிகா தொடர்பான செய்திகளும் அவருடைய ஒளிப்படங்களும்கூட வெளியிடப்பட்டன. 18 வயதுக்கு உட்பட்டவரை அவருடைய பெற்றோர் அல்லது காப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் காட்சிப்படுத்தும் விதிமீறலும் இந்த விவகாரங்களில் அரங்கேறுகிறது.
திருமணமும் விதிவிலக்கல்ல
ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தனிநபர்களின் அந்தரங்கம் குறித்த எந்த மரியாதையும் இல்லாமல் பெரும்பாலான யூடியூப் அலைவரிசைகள் செயல்படுகின்றன. மரண நிகழ்வுகள் என்றில்லை, திரைத் துறைப் பிரபலங்களின் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்க உரிமைகளில் அத்துமீறல் நடைபெறுகிறது.
கடந்த மாதம் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஊடகங்களை அனுமதிக்காமல் நடத்தப்பட்டாலும், அந்தத் திருமணம் நடைபெற்ற இடத்துக்குப் பெரும்பாலான ஊடகங்கள் படையெடுத்துச் சென்றன. திருமண நிகழ்வு தொடர்பாகக் கசிந்த ஒவ்வொரு தகவலும் செய்தியாக்கப்பட்டது.
திருமணம் செய்துவைத்த புரோகிதரைப் பேட்டியெடுக்கச் சில யூடியூப் அலைவரிசைகள் துரத்திச் சென்றதாக மீம் வெளியாகும் அளவுக்கு, அந்தத் திருமணத்துக்குத் தேவைக்கு அதிகமான ஊடக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
யூடியூபில் குழந்தைப் பிரபலங்களுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம், அவர்கள் மீது ஒரு சாரார் வெறுப்புக்கொள்ளவும் வன்மம் நிறைந்த கருத்துகளை வெளிப்படுத்தவும் வழிவகுக்கிறது.
ஆனால், இதுபோன்ற காணொளிகளை வெளியிடும் யூடியூப் அலைவரிசைகளுக்கு, அவை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த எந்தக் கவலையும் இருப்பதில்லை. அத்துடன் சர்ச்சைகளைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் நோக்கமும் சில அலைவரிசைகளுக்கு இருப்பதை உணர முடிகிறது.
எது கடமை?
இதுபோன்ற காணொளிகளுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பதை வைத்து ‘ஜனங்களுக்குப் பிடிச்சதைத்தானே காண்பிக்க முடியும்’ என்று யூடியூப் அலைவரிசைகளின் மோசமான போக்கைச் சிலர் நியாயப்படுத்துகிறார்கள் அல்லது மக்கள் மீது பழிபோடுகிறார்கள்.
மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவதைக் கொடுப்பதல்ல, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றைக் கொடுப்பதுதான் ஊடகங்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். பல யூடியூப் அலைவரிசைகள் ஊடகவியலின் இந்த அடிப்படை நெறியைப் புரிந்துகொள்ளாமல் அல்லது அதை ஏற்றுக்கொள்ளாமல் செயல்படுவதைக் காணலாம்.
அதே நேரம், தரமான உள்ளடக்கத்தைத் தருவதற்கான உழைப்பைச் செலுத்தத் தவறிவிட்டு, மக்கள் மீது பழிபோடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தரமான உள்ளடக்கத்துக்கு மக்கள் ஆதரவளிப்பதில்லை என்பது சரியான வாதமல்ல. கடினமான அறிவியல் கோட்பாடுகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்கும் அலைவரிசைகளும் பார்வையாளர்களின் பேராதரவோடு இதே யூடியூபில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
‘மக்களின் ரசனை’யைக் காரணம் காட்டி, மோசமான திரைப்படங்களை எடுத்துத் தள்ளும் வெகுஜன சினிமா பிரபலங்களைப் போல், யூடியூப் ஊடகங்களும் செயல்படக் கூடாது. வணிக சூத்திரங்களுக்குள் அடைபடாமல் மக்கள் ரசனையை மேம்படுத்திய படைப்புகளைக் கொடுத்த படைப்பாளிகளே காலம் கடந்தும் நினைவுகூரப்படுகிறார்கள்.
அனைத்து வகையிலும் திரைப்படத் துறையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் யூடியூப் அலைவரிசைகள் இத்தகைய படைப்பாளிகளையே தமது முன்னோடிகளாகக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் சடலத்தையும் இறந்தவர்களின் துக்கத்தையும் அங்குலம்அங்குலமாகக் காட்சிப்படுத்தும் ‘மரண வியாபார’த்தையாவது தவிர்க்க வேண்டும்.
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in