

“பெண்களின் மாதவிலக்கு பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் இருந்தேன். அந்த நாட்களில் என் அக்காவைக் கேலி பேசி மனம் வருந்தும்படி நடந்துகொண்டிருக்கிறேன்.
இன்று அதைப் பற்றித் தெரிந்துகொண்ட பின், என் செயலுக்காக வெட்கப்படுகிறேன். உங்கள் எல்லோர் முன்பாகவும் அதற்காக வருந்தித் தலைகுனிகிறேன்!”
இப்படிப் பேசியவர் ஒரு 12-ம் வகுப்பு மாணவர். பேசிய இடம் உதகமண்டலம். ‘புதியன விரும்பு’ என்கிற தலைப்பில், அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பில் நுழைந்துள்ள மாணவ-மாணவியருக்கான ஐந்து நாள் கோடைப் பயிலரங்கினை ஜூன் முதல் வாரத்தில் பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைத்திருந்தது.
மாநிலம் முழுவதுமிருந்து தேர்வுசெய்யப்பட்ட 1,250 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அப்பயிலரங்கில் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான கீதா இளங்கோவன், தான் இயக்கிய ‘மாதவிடாய்’ என்கிற ஆவணப்படத்தைத் திரையிட்டு, ஆண் - பெண் சமத்துவம் பற்றிக் கருத்துரை ஆற்றினார்.
அவருடைய உரைக்குப் பிறகான கேள்வி நேரத்தில்தான் மேற்குறிப்பிட்ட மாணவர் அப்படிப் பேசியிருந்தார். இதுபோன்ற 20 அமர்வுகளில் கருத்தாளர்கள் பங்கேற்று மாணவ - மாணவியருடன் உரையாடினர்; மாணவர்கள் விவாதித்தனர்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் இந்த உலகையும் சமூகத்தையும் பிரபஞ்சத்தையும் அறிமுகம்செய்யும் நோக்குடன் இப்பயிற்சி முகாம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பன்முக அமர்வுகள்
முதல் நாள் காலைப்பொழுதில் 1,250 குழந்தைகளுடன் குன்னூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியபோது, “தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தலைவர்கள் எல்லோருமே முன்னர் அரசுப் பள்ளி மாணவர்களாக இருந்தவர்கள்தாம்.
ஆகவே, இன்னும் பத்தாண்டுகள் கழித்து நம் சமூகத்தில் தலைவர்களாக உருவாகப்போகிறவர்கள், உங்கள் மத்தியிலிருந்துதான் வர வேண்டும். அதற்கான பயிற்சிதான் இது.
சமூகநீதி, ஆண்-பெண் சமத்துவம், மதச்சார்பின்மை, அறிவியல் பார்வை உள்ளிட்ட அனைத்தும் இந்த ஐந்து நாட்களில் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்” என்று கச்சிதமான உரையுடன் தொடங்கிவைத்தார்.
கவிதையை அறிமுகம் செய்யக் கவிஞர்கள் மனுஷ்ய புத்திரன், வெய்யில், சக்திஜோதி, மு.முருகேஷ், மனுஷிபாரதி; கதை அரங்கில் எழுத்தாளர்கள் உதயசங்கர், மணிமாறன், மானசீகன், தீபா நாகராணி, பாஸ்கர் சக்தி; தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற கலைஞர்கள் நாடக அரங்கிலும் மைம் அரங்கிலும் தாளக்கருவிகளுடன் காத்திருந்தனர்.
ஐந்து நாட்களும் மாணவச் செல்வங்கள் கவிதையோடும் கதைகளோடும் கலைகளோடும் பயணித்தனர்.
ஒவ்வொரு நாளும் மாலை அமர்வுகளில் இளம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அலுவலர்கள் தேர்வுகளில் வென்ற கதைகளை எடுத்துரைத்தனர். மாணவர்கள் கேள்வி மழையால் அவர்களைத் திக்குமுக்காட வைத்தனர்.
சுதன் ஐ.ஏ.எஸ், இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., அலர்மேலுமங்கை ஐ.ஏ.எஸ்., அமித் ஐ.ஏ.எஸ்., அருண்கபிலன் ஐ.பி.எஸ்., பிருந்தா ஐ.பி.எஸ்., ஆகியோர் நம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கினர்.
திருநங்கை பிரியாபாபு திருநங்கையர் உலகத்தின் வலிகளையும் வாதைகளையும் பகிர்ந்துகொண்டபோது, அரங்கம் உணர்ச்சிகரமான மௌனத்தில் ஆழ்ந்தது.
மாறிய பிம்பம்
ஏ.எஸ்.பத்மாவதி வளரிளம் பருவத்துப் பிரச்சினைகளை விவாதித்ததுடன் வாழ்க்கைத் திறன்கள் பற்றியும் வகுப்பெடுத்தார். இரவு நேரம் வான்நோக்கிகளுடன் நட்சத்திரக் கூட்டங்களைத் தேடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. ‘தமிழ்நாடு அஸ்ட்ரனாமிகல் சயின்ஸ் சொசைட்டி’யின் நண்பர்கள் 25 பேர், 10 தொலைநோக்கிகளுடன் பிரபஞ்ச ரகசியங்களைக் குழந்தைகளுக்குத் திறந்து காட்டினர்.
நிறைவு நாளில் மாணவர்கள் எழுதிய கவிதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நிறைவு விழா மேடையில் கதைகள் கூறி அசத்தினர். நான்கே நாட்களில் உருவாக்கப்பட்ட நாடகம், மைம், ஆட்டக்கலைகளை அரங்கேற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
முகாமில் பயிற்றுநர்களாகப் பங்கேற்ற அனைவரும் ஒரே குரலில் சொன்ன வாக்கியம், “அரசுப் பள்ளி மாணவ-மாணவியரைப் பற்றி நாங்கள் கொண்டிருந்த கருத்தும் பிம்பமும் இந்த ஐந்து நாட்களில் சுக்குநூறாக நொறுங்கிப்போயின. எவ்வளவு அறிவார்ந்த குழந்தைகளாக இவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்” என்பதுதான்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பற்றிச் சமூக ஊடகங்களில் ஊதிப்பெருக்கி விதைக்கப்பட்டுள்ள எதிர்மறைக் கருத்துகள் சூரியனைக் கண்ட பனிபோல மாயமாக மறைந்துவிட்டன.
இந்த உண்மையை ஊருக்கு உரக்கச் சொல்லி, அரசுப் பள்ளிகள் குறித்த நேர்மறையான பிம்பத்தைக் கட்டியெழுப்புவோம்.
- ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்.
தொடர்புக்கு: tamizh53@gmail.com