

தமிழின் மூத்த எழுத்தாளர் அகிலனின் எழுத்துப் பயணம், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் அவரது கதைகளை, விடுதலைக்குப் பிந்தைய புதிய இந்தியக் காலகட்டக் கதைகள் என வரையறுக்கலாம். சுதந்திரம்பெற்ற ஒரு நாட்டின் லட்சியக் கனவுகளையும் யதார்த்த நிலையையும் அகிலனின் கதைகளுடன் இயல்பாகத் தொடர்புபடுத்த முடியும். விடுதலை அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிந்தைய கதையான ‘எங்கே போகிறோம்?’ நாவலில், இந்தச் சிக்கலை அகிலனே பேசியிருக்கிறார்.
சமூகம், குடும்பம், காதல், புரட்சி, பயணம், வரலாறு எனப் பலவிதமான தளங்களில் அகிலன் கதைகளை எழுதியுள்ளார். எந்தத் தளத்தில் எழுதினாலும், வாசிப்புச் சுவாரசியம் அவரது கதைகளின் அடிப்படை நோக்கமாக இருந்தது. புதிய பின்னணியை, புதிய நிலப்பரப்புகளைத் தன் கதைகளுக்காக அகிலன் தேடிக் கண்டடைந்ததும் இந்தப் பின்னணியிலேயே நடந்தது. ‘நெஞ்சினலைகள்’ நாவல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ முகாம் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டது. மலேசிய ரப்பர் தோட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ‘பால்மரக் காட்டினிலே’ நாவலை, நேரில் கள ஆய்வு நடத்திய பிறகே அகிலன் எழுதியுள்ளார். இந்தக் கதைக்குள் காதல், குடும்பம், தொழிலாளர் போராட்டம், சமூகம் என உள்ளும் புறமுமாகப் பல அம்சங்களைச் சொல்லியிருக்கிறார்.
காதல் எனும் ஈர்ப்பு
அகிலனின் கதைகளில் சொல்லப்படும் காதலையும் மேற்சொன்ன பன்மைத்தன்மையுடன் பொருத்திப் பார்க்கலாம். கைகூடாக் காதல், முக்கோணக் காதல், சமூக வழக்கத்தை மீறிச் சேரும் காதல் எனப் பலவிதமாகக் காதலை அகிலன் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்த அம்சம் அகிலன் கதைகளுக்குள் வாசக நுழைவுக்கான சாத்தியத்தை அதிகப்படுத்தியிருக்கக்கூடும். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் குறித்த அவரது வரலாற்று நாவலான ‘வேங்கையின் மைந்த’னில் ஒரு சரித்திரக் காதலைப் பார்க்க முடியும். கரந்தைச் செப்பேடுகள் அடிப்படையிலான வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் அதற்குள் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ - இலங்கை இளவரசி ரோகிணி என இரு காதல் பிரதிமைகளை, போர்க் காட்சிகள் நிறைந்த சரித்திர நாவலுக்குள் பிரதிஷ்டை செய்திருப்பார். இதன் மூலம் பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்ததாகச் சொல்லப்படும் வாளைக் கைப்பற்ற நடக்கும் போர்ச் சூழல் சார்ந்த வாசிப்பில் ஒரு சமநிலையை இந்தக் காதல் உண்டாக்கும். யதார்த்தக் கதாபாத்திரமான ராஜேந்திர சோழனுக்கும் கற்பனைக் கதாபாத்திரமான இளங்கோவுக்குமான உறவு, விநோதமான வாசிப்பு சுவாரசியத்தை அளிக்கக்கூடியது.
‘சித்திரப்பாவை’ அகிலனின் பேசப்பட்ட நாவல். இதற்காக அவர் ஞானபீட விருதுபெற்றார். இது ஒரு முக்கோணக் காதல் கதை; அண்ணாமலை, ஆனந்தி, மாணிக்கம் ஆகிய மையக் கதாபாத்திரங்களைக் கொண்டது. இதன் நாயகி ஆனந்தி, யதார்த்தத்தில் நாம் பார்க்க முடியாத ஒரு பெண். பெண்களுக்கே உரியதாக ஆண் மனம் கற்பிதம் செய்துகொள்ளும் லட்சணங்களை இயல்பாகக் கொண்டவள். அவளது அழகும் மெல்லியல்பும் காண்பவரை வசீகரிக்கக்கூடிய வகையில் அகிலன் படைத்திருப்பார். இதன் நாயகன் அண்ணாமலையும் சளைத்தவன் அல்ல. அந்தக் காலகட்ட லட்சியவாத இளைஞன். யதார்த்தவாத ஓவியன். அண்ணாமலை - ஆனந்தியின் உன்னதமான காதலுக்கு இடையில் மூன்றாம் நபராக வருகிறான் மாணிக்கம். இதனால் கதை தலைகீழாக மாறுகிறது. மாணிக்கம் தரும் ஒரு முத்தம், மற்ற இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. அண்ணாமலை சுந்தரியையும், ஆனந்தி மாணிக்கத்தையும் மணம் முடிக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகும் சிறு புரட்சியை இந்த நாவலுக்குள் அகிலன் செய்திருக்கிறார். அது சமூக விழுமியங்களை மீறியதாக அன்று பார்க்கப்பட்டிருக்கக்கூடும். அகிலனின் மற்றொரு நாவலான ‘துணைவி’யிலும் இதேபோல் காதல் கைகூடாக் காதலர்கள் இறுதியில் இணைவதாகச் சித்தரித்திருப்பார்.
பரந்த வாசகப் பரப்பு
அகிலனின் புகழ்பெற்ற மற்றொரு நாவலான ‘பாவை விளக்’கிலும் பலதரப்பட்ட காதல்கள். ஒரு எழுத்தாளனை நான்கு பெண்கள் காதலிக்கிறார்கள். அதில் ஒருத்தி கைம்பெண். இது அந்தக் காலகட்டத்தில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. திருமணமானவர் எனத் தெரிந்தும் காதல் பக்தியிலிருக்கும் வாசகி உமாவை, ஆண்டாளைப் போல் அகிலன் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அகிலனின் மற்றொரு வரலாற்றுப் புதினமான ‘கயல்விழி’ பாண்டியர்களைப் பின்னணியாகக் கொண்டது. ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ என்னும் பெயரில் எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.
நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் வாசகப் பரப்பு விரிவடைந்து வந்ததில், வார இதழ்களின் தொடர்கதைகளுக்கு முக்கியமான பங்குண்டு. அப்படியான வார இதழ்களில் தங்கள் தொடர் கதைகள் மூலம் ஆதிக்கம் செலுத்திய எழுத்தாளர்களில் கல்கி, நா.பார்த்தசாரதி, சாண்டில்யன் வரிசையில் தவிர்க்க முடியாத ஒருவர் அகிலன்.
அகிலன் 19 நாவல்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, திரைப்படம் எனப் பலவிதமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். சமூகம், காதல், வரலாறு, அரசியல் எனப் பல்வேறுபட்ட புலங்களில் கதைகளை எழுதியுள்ளார். அவருக்கே உரிய தனித்துவமான இந்த அம்சத்தால்தான், வாசகர் விரும்பும் பல்சுவை எழுத்தாளராக அவர் பாராட்டப்படுகிறார்.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in