`இசை சாகரம்` ஆபிரகாம் பண்டிதர்

`இசை சாகரம்` ஆபிரகாம் பண்டிதர்
Updated on
2 min read

‘கல்வியும், இசை உள்ளிட்ட கலைகளும் ஒரு சாராருக்கே உரியவை’, ‘இசை தலைமுறை சார்ந்தது, வாழையடி வாழையாக வருவது’, ‘இசை என்பது ஒரு கொடுப்பினை; எல்லாருக்கும் அது வாய்க்காது’... இப்படியான பிரச்சாரங்களைப் பொய்யாக்கி தன் வாழ்நாளில் கல்வி, இசை, மருத்துவம், அறிவியல் கண்டுபிடிப்புகள், ஜோதிடம், விவசாயம், நெசவு இப்படிப் பல துறைகளையும் கற்றுத் தேர்ந்து, அவற்றில் நிபுணத்துவத்துடன் சாதனை படைத்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசைக்கு அவர் தந்திருக்கும் மகத்தான இசைக் கொடையான ‘கருணாமிர்த சாகர’த்தின் சாரத்தை, அவருடைய பன்முகத் திறமைகளை, நிகழ்த்திய சாதனைகளை ஆவணப்படம் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் கவிஞரும் இயக்குநருமான குட்டி ரேவதி.

குட்டி ரேவதி
குட்டி ரேவதி

‘ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்: தமிழிசை வரலாறும் இசைத்தமிழ் நூலும்’ என்கிற இந்த ஆவணப்படத்தை, ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை தயாரித்துள்ளது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் செயின்ட் ஜோகன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ் விழாவில் இந்தப் படம் இன்று (ஜூலை 3) திரையிடப்படுகிறது.

தற்போது பரவலாக அடையாளம் பெற்றுள்ள கர்னாடக இசை, இந்துஸ்தானி இசைக்கு தமிழிசையே ஆதாரமாக இருப்பதையும் இதை முதன்முதலாகச் சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு ஆபிரகாம் பண்டிதர் எப்படி நிறுவினார் என்பதும் உறுதியாக வெளிப்பட்டுள்ளது. பண்களைப் பற்றிய ஆராய்ச்சி, ஒரு ஸ்வரத்துக்கு இணை ஸ்வரம், பகை ஸ்வரம் எதுவெனத் தெளிதல், இக்காலத்தில் வழக்கத்திலிருக்கும் ஆலாபனை பாடும் முறை ஆளத்தி பாடுவதிலிருந்துதான் வந்திருக்கிறது என்பதை சிலப்பதிகாரத்தின் வழிநின்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆபிரகாம் பண்டிதர் எப்படி நிரூபித்திருக்கிறார் என்பதை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

தமிழும் இசையும்

தமிழிசையின் தொன்மை குறித்து அறிஞர்கள் பேசுவதும் ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை அவரின் குடும்பத்தினரும் பகிர்ந்துகொள்வதும், தொடக்கத்தில் தனித்தனி கிளைகளாக விரிகின்றன. பின்னர் இரண்டும் ஒரு புள்ளியில் சங்கமித்து, ஒரே சரடாகப் பயணிக்கும் அனுபவத்தையும் இந்த ஆவணப்படம் தருகிறது. முதன்முதலில் அச்சுக் கூடத்தைத் தொடங்கியது, ஜெர்மனியிலிருந்து காற்றாலைத் தளவாடங்களைத் தருவித்து, மின்சாரம் தயாரித்து கிராமத்தினருக்கும் பிரமுகர்களுக்கும் வழங்கியது எனப் பண்டிதருடைய வாழ்க்கையின் மலைக்கவைக்கும் பக்கங்களும் பதிவாகியிருக்கின்றன.

ராணி கனக ரத்தின பாண்டியன், அமுதா பாண்டியன், தமிழிசை ஆய்வாளர் அருட்சகோதரி மார்கரெட், பேராசிரியர் இரா. கலைவாணி, தமிழிசை ஆய்வாளர் இளமுருகன், தொ.பரமசிவன், பேராசிரியர் அரிமளம் பத்மநாபன், முனைவர் துர்கா, வேர்ச்சொல் ஆய்வறிஞர் ப.அருளி, இசை அறிஞர் பி.எம்.சுந்தரம், இசை அறிஞர் மம்மது உள்ளிட்ட பல அறிஞர்கள், ஆபிரகாம் பண்டிதரின் குடும்பத்தினர் இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளனர்.

பண்டிதரின் கொடை

ஆங்கில இசை முறையில் தமிழிசையை எழுதுதல், பெருந்திசை நரம்புகளால் பாடுதல், இசை மாநாடுகள் கூட்டுதல், 24 அலகு (சுருதி) முறையின் சிறப்பை அறிவித்தல், ஸ்வரங்கள் தோன்றிய முறைகள், நாற்பெரும் பண்கள், ஏழ் பெரும் பாலைகள், தேவார காலம் முதல் ராகங்களின் வரலாறு, இப்படிப்பட்ட அரிய இலக்கணங்களை முதன்முதலில் தமிழிசை உலகுக்குக் கொடையாக அளித்த ஆபிரகாம் பண்டிதரின் இசை முகத்தை இந்த ஆவணப்படத்தில் மிக நெருக்கமாகத் தரிசிக்க முடிகிறது. தமிழிசை முறையில் பாடுவதற்கான கீதம், வர்ணம் ஆகியவை தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்த ஆபிரகாம் பண்டிதர், அதற்காகவே 96 தமிழிசைப் பாடல்களை அவற்றுக்கான ஸ்வர தாளக் குறிப்புகளோடு படைத்துள்ளார். தமிழ் மீது பண்டிதர் கொண்டிருந்த மதிப்பையும் காதலையும் இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

முழுமையான ஆவணம்

நம்முடைய இசை 22 சுருதிகளுக்குள் அடங்குவது என்பதை வலியுறுத்திய நாட்டிய சாஸ்திரம், சங்கீத ரத்னாகரம் போன்ற பண்டைய நூல்களுக்கு மாறாக, நம்முடைய இசை 24 அலகுகளைக் கொண்டது என்பதைத் தகுந்த ஆதாரங்களோடு நிறுவியது இசைத் துறையில் ஆபிரகாம் பண்டிதரின் முக்கியமான பங்களிப்பு. பரோடாவில் நடைபெற்ற இசை மாநாட்டில் அவருடைய மகள்கள் வீணை வாசித்து பண்டிதர் கண்டறிந்த 24 அலகுகளுடன் அமைந்த தமிழிசையின் நுட்பத்தை விளக்கிய தருணம் பற்றிய குறிப்புகளும் பதிவாகியிருக்கின்றன. அந்த வகையில் உலகம் முழுவதும் தமிழிசையைத் தூக்கிப் பிடிக்கும் பெருமைமிகு படைப்பாக இந்த ஆவணப்படம் திகழும். படத்தின் இறுதியில் ஒலித்து உருகவைக்கும் ‘கண்ணே ரகுமானே..’ பாடல் ஒன்றே போதும், பண்டிதரின் புகழ் காலத்தைத் தாண்டிச் சொல்வதற்கு.

தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in