

சிவசேனை கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் அவருக்கு ஆதரவான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ‘மஹா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சிக்கு எதிராக உயர்த்திய போர்க்கொடி, அம்மாநில ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், மஹா விகாஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பது உறுதியானதால், முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனை அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன.
சிவசேனை அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் துணை முதல்வராக பதவியேற்றார்.
பாஜகவின் பங்கு
மஹா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்திருப்பதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அக்கட்சி கூறினாலும், இதனால் நேரடிப் பலனடையப் போவது என்னவோ அந்தக் கட்சிதான்.
மேலும், அதிருப்தியாளர்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே தங்கவைக்கப்பட்டதும், அசைக்க முடியாத வலிமை மிக்க ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு தமக்கு இருப்பதாக ஷிண்டே கூறியதும் பாஜகவுக்கு இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்திருக்கக்கூடிய பங்கை மறுக்க முடியாதபடி கோடிட்டுக் காண்பிக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி செலுத்திவந்த கட்சி/கூட்டணிகளின் பதவிக் காலம் முடிவதற்குள் அவை அகற்றப்பட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இவற்றில் மத்திய பிரதேசத்தில் மட்டுமே ஆளும் கட்சியாக காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தது. மற்ற இரண்டு மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சியே நடந்துவந்தது.
ஆக, மஹாராஷ்டிர ஆட்சி மாற்றம், கூட்டணி அரசுகளின் காலம் முடிந்துவிட்டது என்னும் கூற்றுக்கு மேலும் வலுசேர்ப்பதாகவே அமைந்துள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் பாஜகவுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருந்தது என்பது உறுதிசெய்யப்படவில்லை. அதே நேரம், மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் பிழைகளும் ஆட்சி மீதான அதிருப்தியும்கூட இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியப் பங்களித்திருப்பதை மறுக்க முடியாது.
இந்துத்துவம் எதிர் இந்துத்துவம்
பாலா சாஹேப் என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறவரும் சர்ச்சைக்குரிய அரசியலருமான பால் தாக்கரேவால் 1960-களில் தொடங்கப்பட்ட சிவசேனை ‘மண்ணின் மைந்தர்’களுக்கு ஆதரவான அரசியல் கட்சியாகத் தன்னை அறிவித்துக்கொண்டது. மராத்திய இனப் பெருமிதத்தை ஊட்டி வளர்த்து, அரசியலில் முன்னேறியது.
பின்னர், இந்துத்துவக் கொள்கைகளையும் வரித்துக்கொண்டது. இந்துத்துவம் சார்ந்த அரசியலில் பாஜக தலையெடுத்த பிறகு, 1980-களின் இறுதியில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து, மஹாராஷ்டிரத்தில் நீண்ட காலம் ஆட்சியிலும் எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டுவந்தது.
2019 தேர்தலை இரண்டு கட்சிகளும் இணைந்தே எதிர்கொண்டன. ஆனால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, சிவசேனையின் வாக்கு வீதம் சரிந்ததைக் காரணம் காட்டி, அதிகாரப் பகிர்வுக்குச் சம்மதிக்கவில்லை. இதனால், பாஜகவுடனான கூட்டணியை சிவசேனை முறித்துக்கொண்டது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
மதச்சார்பற்ற இரண்டு கட்சிகள், இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் ஒரு தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் ஒரு மாநிலக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, அரியணையில் அமர்த்தி, அதிகாரத்தைப் பங்குபோட்டுக்கொண்டன. இத்தகைய விசித்திரமான கூட்டணி அமைந்தபோதே இதன் நிலைத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இப்போது சிவசேனையில் இருக்கும் இந்துத்துவக் கொள்கைக்கு ஆதரவான தரப்பினராலேயே இந்தக் கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. அத்துடன், சிவசேனையில் இந்துத்துவக் கொள்கையில் தீவிரமான பற்றுறுதி கொண்டோருக்கே செல்வாக்கு அதிகம் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காகவும் அதிகாரத்தைச் சுவைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் கொள்கை சமரசங்களும் ஜனநாயக, மதச்சார்பின்மை முகமூடிகளும் நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதும் மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.
கட்சிகளின் கொள்கை மாற்றம் அதிகாரத்தைப் பங்குபோட்டுக்கொள்ளும் தலைவர்களிடம் இருந்தல்ல, களத்தில் பணியாற்றும் தொண்டர்களிடமிருந்தே முகிழ்ந்தெழ வேண்டும். கொள்கை மாற்றத்தை விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களும் சித்தாந்தவாதிகளும் தொண்டர்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும் என்னும் அரசியல் பாடங்களும் இதன் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன.
ஆனால், சிவசேனை அதிகாரபூர்வமாக இந்துத்துவக் கொள்கையிலிருந்து விலகியதாக எப்போதும் காண்பித்துக்கொள்ளவில்லை. பதவி விலகலுக்கு முந்தைய கடைசி கேபினெட் கூட்டத்தில்கூட மஹாராஷ்டிரத்தின் ஒளரங்காபாதுக்கு சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் பெயரில் சம்பாஜி நகர் என்று பெயர் வைக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘இந்துக்களைக் கொடுமைப்படுத்திய முகாலய அரசர் ஒளரங்கசீப்பின் பெயரில் ஒரு மஹாராஷ்டிர நகரம் அழைக்கப்படக் கூடாது’ என்னும் இந்துத்துவவாதிகளின் கோரிக்கையை ஏற்றே இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்முனை அதிருப்தி
பால் தாக்கரேவின் மறைவுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரேவின் தலைமையில் கட்சியின் வாக்கு வீதம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்துத்துவக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்திவரும் பாஜகவுக்கு மாற்றான சக்தியாக உத்தவ் தாக்கரேவால் தன்னை முன்னிறுத்திக்கொள்ள இயலவில்லை.
அதனாலேயே அவர் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியமைத்து ‘அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சி கொடுத்து’ தன்னை அரசியல்ரீதியாக நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார்.
இருந்தபோதும், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் இரண்டரை ஆண்டு ஆட்சிக்கு எதிராகப் பல முனைகளில் அதிருப்தி எழுந்தது. ஆட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கிராமப்புறங்களில் செல்வாக்குமிக்க சிவசேனைத் தலைவர்கள், கட்சியில் தமது செல்வாக்கு குறைந்துவிட்டதாக உணர்ந்தனர்.
முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சுற்றி தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் ஒரு அதிகார வளையத்தைக் கட்டமைத்திருந்தனர். இதனால், பிற தலைவர்களாலும் தொண்டர்களாலும் அணுகப்பட முடியாத தலைவர் என்னும் பிம்பம் உத்தவ் தாக்கரே மீது படிந்தது.
அத்துடன் அவருடைய மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு கேபினெட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதும் கட்சியில் ஆதித்யாவின் செல்வாக்கு அதிகரித்ததும் மூத்த தலைவர்களின் அதிருப்திக்குக் காரணமானது. குறிப்பாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சக நடவடிக்கைகளில் ஆதித்ய தாக்கரேவின் தலையீடு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதும், ஷிண்டேவின் அதிருப்தியுமே ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி உருவெடுத்ததற்குக் காரணமாகவும் கூறப்படுகிறது.
குடும்ப ஆட்சிக்கான எதிர்ப்பு
நாடு முழுவதும் செல்வாக்குச் சரிவை எதிர்கொண்டுவரும் காங்கிரஸுக்கு இது மற்றுமொரு இடி. சிவசேனை, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தொண்டர்களின் உழைப்பால் வளரும் கட்சிகள், அதிகாரத்தில் உள்ள குடும்பங்களின் தனிச்சொத்தாகப் பாவிக்கப்படும் சூழல் நெடுங்காலத்துக்குத் தொடர முடியாது என்பதற்கான சமிக்ஞையாகவும் மஹாராஷ்டிர ஆட்சி மாற்றத்தைப் பார்க்கலாம். குடும்பங்களின் ஆளுகையில் இருக்கும் பிற கட்சிகளுக்கும் இதில் பாடங்கள் இருக்கின்றன.
- ச.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in