

இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகள் அனைத்திலும் காணப்படும் பொதுவான அம்சங்கள் இரண்டு. ஒன்று, மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்னும் வாக்குறுதி. இரண்டு, இலவசங்கள் கிடையாது எனும் தீர்மானமான முடிவு.
உண்மையில், இந்த இரண்டுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. டிவி, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் என்று தொடங்கி இதுவரை தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ள அனைத்து இலவசங்களுக்குமான நிதி ஆதாரம் பெருமளவில் மது வியாபாரத்தில் இருந்தே கிடைத்து வந்துள்ளது. மது விற்பனையை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இலவசங்களையும் அதிகரிக்க முடியும் என்பதையும் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று சாத்தியமில்லை என்பதையும் இதுவரை தமிழகத்தை ஆண்டுள்ள திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் நன்கு அறிந்துவைத்துள்ளன.
எம்.ஜி.ஆர். காட்டிய வழி
எம்.ஜி.ஆர். தனது தேர்தல் வாக்குறுதியை மீறி 1980-81-ல் மதுவிலக்கு கொள்கையைத் தளர்த்தியதைத் தொடர்ந்து, கலால் வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் குறிப்பிடத் தக்க அளவில் அதிகரித்தது. 1980-85 ஆண்டுகளில் தமிழகம் ஈட்டிய மொத்த வருவாயில் மதுவின் பங்களிப்பு மட்டும் 13.9%. அப்போது தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் மது விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் பல மடங்கு உயரத் தொடங்கியது. இதைக் கண்ட எம்.ஜி.ஆர். மதுவிலக்கை முற்றிலுமாகக் கைவிட்டார். அதனால், அவருடைய புகழ் குறைந்துவிடவில்லை; அதிகரிக்கவே செய்தது. அதற்குக் காரணம், மக்களை ஈர்க்க அவர் அறிவித்த சில கவர்ச்சிகரமான திட்டங்கள்.
இதிலிருந்து தமிழக அரசியல் களம் சில அடிப்படைப் பாடங்களைப் படித்துக்கொண்டது. ‘மக்கள் பெரும்பாலும் எளியவர்கள், அரசியல் உணர்வு அற்றவர்கள். அவர்களுக்குச் சில இலவச வசதிகளைச் செய்துகொடுத்துவிட்டால், நம்மை மீண்டும் மீண்டும் வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். இந்த வசதிகளைச் செய்துகொடுப்பதற்கான நிதியைக்கூட மறைமுகமாக அவர்களிடமிருந்தே கறந்துவிட முடியும். அதற்குச் சரியான கருவி மது. மது விற்பனையை அதிகப்படுத்துவதன் மூலம், அடித்தட்டு மக்களிடமிருந்து அதிக வரியைப் பெற்றுவிடவும் முடியும். அவர்களை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்திவைக்கவும் முடியும்.’
இந்தப் புரிதலுடன் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே மது விற்பனையைத் தடையின்றித் தொடர்ந்தனர். கூடவே, போட்டி போட்டுக்கொண்டு பல இலவசத் திட்டங்களையும் அறிவித்தனர். அந்த வகையில், இது வரை இங்கே நடைபெற்றுள்ள தேர்தல்கள் இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டுமில்லாமல், அவர்கள் அளிக்கும் இலவசங்களுக்கு இடையிலான போட்டியாகவும் இருந்திருக்கின்றன.
மாறும் காட்சிகள்
மது வருவாயைக் கொண்டு இலவசங்களை அதிகரித்தால், வெற்றிவாய்ப்பும் அதிகமாகும் என்பதை இரு கட்சிகளும் நேரடியாகக் கண்டுகொண்டதால்தான் இங்கே மதுவிலக்கு இதுவரை வெற்றிபெறவில்லை. எனில், இந்த முறை மட்டும் ஏன் விதிவிலக்காக திமுக இலவசங்கள் இல்லாத ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது? ஆட்சியில் உள்ள அதிமுகவை வீழ்த்த இதற்கு முன்பு அளித்ததைக் காட்டிலும் அதிக மதிப்பிலான, அதிக எண்ணிக்கையிலான இலவசங்களை ஏன் அள்ளிக் கொடுக்க முன்வரவில்லை திமுக?
அதற்குக் காரணம் மக்கள்தாம். மதுவுக்கு எதிராக தமிழகமே திரண்டெழுந்து போராடியதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு இந்தத் தேர்தலின் பிரதான கோரிக்கையாக உருவெடுத்தது. இதனால், வேறு வழியின்றி மதுவிலக்கு கோரிக்கையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியத்துக்கு திமுக தொடங்கி அனைத்துக் கட்சிகளும் வந்து சேர்ந்தன. மதுவிலக்கு சாத்தியமேயில்லை என்று அறிவித்த அதிமுககூட, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
அடுத்து அமையவிருக்கும் அரசு மதுவிலக்கை அமல்படுத்துமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் மது விற்பனையைக் குறைத்தாக வேண்டிய அவசியத்துக்குத் தள்ளப்படும். இதன் பொருள் அரசு தன் வருவாயில் ஒரு கணிசமான பகுதியை இழக்க வேண்டும் என்பதுதான். வருவாய் குறையும்போது இலவசம் எப்படிச் சாத்தியப்படும்? அதனால்தான், ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என்று உரக்கச் சொல்ல முடிந்த அவர்களால், இலவசங்களை வழங்குவோம் என்றும் உரக்கச் சொல்ல முடியவில்லை.
கவர்ச்சித் திட்டங்கள்
அதே சமயம், மக்களைக் கவரும் பல அறிவிப்புகளைத் தேர்தல் அறிக்கைகளில் பார்க்க முடிகிறது. ஆவின் பால் விலை குறைப்பு, அறிஞர் அண்ணா உணவகம், வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் என்பன போன்ற திட்டங்களை திமுக அறிவித்துள்ளது. முதல் முறை வாக்களிக்கும் இளைஞர் கூட்டத்தைக் கவரும் வண்ணம், மாணவர்களுக்குக் கடன் தள்ளுபடி, 16 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களும்கூட அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா இணைந்து வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும்கூட இலவசங்கள் இல்லை என்றாலும், இத்தகைய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கலாம். இவையும்கூட மக்களுக்கு ஓர் அரசால் வழங்கப்படுபவைதான் என்றாலும், இவற்றை இலவசங்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. மக்களின் நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்காகவும் அவர்களுடைய ஆதரவை வென்றெடுப்பதற்காகவும் அரசியல் கட்சிகள் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை அறிவிப்பது உலகம் முழுவதிலும் உள்ள ஒரு ஜனநாயக நடைமுறை.
இலவசங்களில் இருந்து மக்கள் நல அரசியல் நோக்கி தமிழகக் கட்சிகள் நகர்ந்திருப்பது சந்தேகமின்றி ஒரு முக்கியமான மாற்றம். சுயவிருப்பம் இல்லாவிட்டாலும் எப்படி இன்று எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கைப் பேசுகின்றனவோ அவ்வாறே இலவசங்களுக்கு எதிராகவும் பேசத் தொடங்கியிருக்கின்றன. இது போராடும் எளிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி.
மதுவின் மயக்கத்தில் இருந்தும் இலவசத்தின் பிடியில் இருந்தும் மக்கள் முழுமையாக விடுபடும்போது மேலும் பல ஆரோக்கியமான மாற்றங்களை அவர்களால் நிகழ்த்த முடியும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு : marudhan@gmail.com