முத்தம்மாள் சத்திரம்: சரபோஜியின் தாஜ்மகால்

முத்தம்மாள் சத்திரம்: சரபோஜியின் தாஜ்மகால்
Updated on
3 min read

ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் தெருக்களில் முதியோர், ஆதரவற்றோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கூடிநின்று பேசும்போது இந்தப் பேச்சு காதில் விழும்: “சத்திரத்தில் உலுப்பை வாங்கப் போகும்போது என்னையும் கூட்டிகிட்டுப் போத்தா.

அந்தக் காசு வந்தாத்தான் இந்த மாசம் பசி பட்டினி இல்லாம ஓடும்.” அது என்ன உலுப்பை, யார் கொடுத்தார்கள் என்று கேட்டால் இப்படிப் பதில் வரும்: “தஞ்சாவூர் சரபோஜி மகாராசா, எங்களை மாதிரி ஏழைப்பட்ட ஜனங்களுக்குன்னு மாதாமாதம் கொடுக்கிற உதவித்தொகை. அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், எண்ணெய்க்குப் பதிலா பணமாக் குடுப்பாக. அதப் போய் ராசா சத்திரத்திலேதான் வாங்கணும்.”

“இப்பத்தான் ராசா இல்லியே, வேற யார் கொடுக்கிறாங்க?” “நம்ம கலெக்டர் ஆபீஸிலிருந்து தாசில்தார் வந்துதான் கொடுப்பாங்க.” இது ஒரு பக்கம். “ராத்திரி முச்சூடும் உடம்பெல்லாம் வலி, இருமல், சுரம், உடம்பு அனலா கொதிக்குது. சத்திரத்து ஆஸ்பத்திரி போனா தண்ணி மருந்து, மாத்திரை, களிம்பு கொடுப்பாங்க. சீசா எடுத்துக்கிட்டு வெள்ளென போகணும்.” இது இன்னொரு பக்கம்.

“ஏங்க்கா, உன் மகனுங்க ரெண்டும் பள்ளிக்கூடம் போகலியா? பத்து நாளா காணுமே. உங்க அம்மா வூட்டுக்குப் போயிருக்கானுவளா?” “அங்கெல்லாம் போகலக்கா, காசு குடுத்துப் படிக்க வைக்க நம்ம என்ன ஜமீன் பரம்பரையா? நல்லாப் படிப்பு வருதுன்னு சொன்னாங்க.

இவனுங்களும் படிக்கணும்னு ஆசைப்படுறானுங்க. ஒரத்தநாடு சத்திரம் போர்டிங் ஸ்கூல்ல கொண்டுபோய்ச் சேர்த்திருக்கேன். சோறு, தண்ணீ, துணிமணி, தலைக்கு எண்ணெய்கூடக் கொடுத்து, அங்கேயே தங்கவச்சுப் படிப்பு சொல்லித்தாராங்களாம்… அதான்.”

எல்லோரும் சத்திரம் சத்திரம் என்கிறார்களே... அது எங்கே இருக்கிறது என்ற தேடலின் முடிவில் கண்டது, இரண்டாம் சரபோஜி மன்னர் ( ஆட்சி ஆண்டுகள் கி.பி.1798-1832) தன் காதலியின் நினைவாகக் கட்டிய ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம். தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து 15-வது கிலோ மீட்டரில் உள்ள ஊர் ஒரத்தநாடு.

இவ்வூரில் 200 ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய சத்திரம் உள்ளது. சத்திரத்தோடு, கோயில், குளம், கல்விக்கூடம், மருத்துவமனை என்று ஒரே சமயத்தில் 5,000 பேர் தங்கக்கூடிய பிரம்மாண்டமான மாளிகைதான் முத்தம்மாள் சத்திரம். யார் இந்த முத்தம்மாள்?

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் புகழ்பெற்றவர் இரண்டாம் சரபோஜி மன்னர். பன்முக ஆளுமையும் ஆற்றலும் திறமையும் கொண்ட சரபோஜி மன்னர், அறிவுப் பசிக்கு சரஸ்வதி மகால் நூலகத்தை விரிவுபடுத்தியதுபோல், பசிப்பிணி தீர்க்கவும், உடற்பிணி நீக்கவும், கல்விப் பணியாற்றவும் உருவாக்கிய சத்திர தர்மங்களுள் ஒன்றுதான் முத்தம்மாள் சத்திரம்.

10 வயது ராஜாராம் என்ற பாலகன், மஹாராஷ்டிரத்திலிருந்து தஞ்சாவூர் அழைத்துவரப்பட்டு, வாரிசு இல்லாத துளஜா மன்னரின் தத்துப்புத்திரனாக, சரபோஜி என்ற பெயருடன் 22-வது வயதில் தஞ்சையின் மன்னராகப் பட்டம் சூட்டப்பட்டார். சரபோஜி பட்டம் ஏற்கும்முன், தஞ்சை அரண்மனை உயரதிகாரியின் தங்கையும் பேரழகியுமான முத்தம்மாள் மீது காதல்வயப்பட்டார்.

சட்டபூர்வமான மனைவியல்லாத முத்தம்மாள் இரண்டு முறை கருவுற்றார். முதல் குழந்தை பிறந்து இறந்தது. இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்தது. பிரசவத்தின்போது முத்தம்மாளும் இறந்துபோனார்.

முத்தம்மாள் மரணப்படுக்கையில் இருந்தபோது கதறி அழுத மன்னரிடம், அந்த அம்மையார் கேட்ட வரம் “என் பெயர் என்றும் விளங்கும்படியாகச் சத்திர தர்மம் ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு இருக்க வேண்டும்” என்பதுதான்.

சரபோஜி தன் காதலியின் நினைவாகத் தன் முன்னோர்களின் கட்டிடக் கலைப் பாணியிலேயே மிகப் பெரிய மாளிகையை ஒரத்தநாட்டில் எடுப்பித்தார். ஏற்கெனவே செயல்பட்டுவந்த வழிப்போக்கர்களுக்கான சத்திரங்களில் தங்குமிடம், உணவு, மருந்து என்று அனைத்துமே இலவசமாகவே வழங்கப்பட்டன.

இதையே முதன்மைக் காரணியாகக் கொண்டு அனைத்து வசதிகள், அரண்மனையைப் போன்ற அழகுடன், கலைகளின் இருப்பிடமாக முத்தம்மாள் சத்திரம் உருவானது. ஒரே சமயத்தில் 5,000 பேர் உண்டு, உறங்கி ஓய்வெடுப்பதற்கான வசதிகளும், மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும், கல்விக்கூடமும் தனித்தனியாக அமைக்கப்பட்டன.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கட்டிடத்தின் கிழக்குப் பகுதி நுழைவுவாயிலுக்கு மேலே மராத்தி மொழியில் அமைந்த மூன்று வரிக் கல்வெட்டு, இச்சத்திரத்தின் நோக்கத்தையும், கட்டப்பட்ட ஆண்டுபற்றியும் பதிவுசெய்துள்ளது. கீழ்த் தளம் தேர் வடிவில் குதிரை, யானை இழுத்துச்செல்வதுபோல் கருங்கல் சிற்பங்கள், செங்கல் செதுக்குச் சிற்பங்கள், சுதைச் சிற்பங்களுடன் கலைக்கூடமாகவே காட்சியளிக்கிறது.

தர்மசத்திரத்தின் மேல்தளம் ராஜஸ்தானி பாணியில் மாடம், கனமான சுவர், உருளை வடிவப் பெரிய தூண்கள், நடைபாதைகள், முற்றங்கள், பூஜை அறைகள், கிணறுகள், சத்திர அலுவலர்கள், பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகள், காய்கறித் தோட்டம், மாட்டுப் பண்ணை என்று அனைத்து வசதிகளுடன் அமைந்து கலைக்கூடமாக இருப்பதுடன், அன்னச் சத்திரமும் அழகுடன் திகழ்ந்திருக்கிறது.

சத்திரத்தின் நிர்வாக, பராமரிப்பு, நிதி ஆதாரத்துக்காக, ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள் சத்திரத்தின் சொத்துக்களாக இருந்தன. ஊர் எல்லைக்குள் சுங்க வரியும், சாராயக் குத்தகை வரியும் சத்திரத்தின் நிர்வாகச் செலவுக்கு வழங்கப்பட்டன. சத்திரத்தின் வருவாயை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் திருப்பிவிடக் கூடாது. பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அரண்மனையிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரத்தநாடு சத்திரத்தின் ஒரு அறையில் உள்ள சிவலிங்கம், முத்தம்மாள் நினைவாக வைக்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்திருக்கின்றன. ஒரு ரம்ஜான் பண்டிகையன்று சத்திரத்தில் சாதி மத வேறுபாடின்றி 4,576 பேர் விருந்து உண்டதாக ஒரு குறிப்பு மோடி ஆவணத்தில் (மோடி லிபி - மராத்திய மொழியை எழுதுவதற்கு முன்பு வழக்கத்தில் இருந்த லிபி) உள்ளது.

தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, பாரசீகம், உருது போன்ற மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தார்கள். அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி வைத்தியர்கள் உரிய முறைப்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்கள்.

ஷாஜஹான் தன் மனைவிக்குக் கட்டிய தாஜ்மகால் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. ஆனால், தஞ்சையின் இரண்டாம் சரபோஜி, தன் காதலிக்கு, அரசி அந்தஸ்து பெறாதவருக்கு, தன் சமூகத்தைச் சேராதவருக்குக் கட்டிய, பல்நோக்குத் திட்டங்களுடன் சமூகப் பணியாற்றிய ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் இன்று உலகுக்குத் தெரியாமல் அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு காதலியின் கனவு கலைந்துவருகிறது. ஒரு வரலாறு மறைந்துவருகிறது. முத்தம்மாள் சத்திரத்தைப் புனரமைத்து அதை ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொள்ள வேண்டும்.

- அய்யம்பேட்டை என்.செல்வராஜ், தஞ்சை வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: nayakkavadiyar@gmail.com

இந்த ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னர்

பதவியேற்ற 225-வது ஆண்டு

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in