

பிளாக்செயின், பிட்காயின் குறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்பதைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பிளாக்செயின் தொழில்நுட்பம் எவ்வாறு உருவானது என்பதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இரண்டு அணிகள்தான் ஜெயிக்கும் என்று இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.
ஒருவர் சொன்ன அணி வென்றுவிட்டது, மற்றொருவர் சொன்ன அணி தோற்றுவிட்டது. இந்த நிலையில் பந்தயத்தில் வென்றவர் பந்தயத் தொகையைக் கேட்கும்போது முடியாது என்று தோற்றவர் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
இந்த நிலையை மாற்றுவதற்காக இடைத்தரகர் ஒருவரை நியமித்து அவரிடம் இருவரும் பந்தயத் தொகையைக் கட்டி அதற்கேற்றாற்போல் பந்தயம் வைத்துக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதுபோன்ற சூழலில் இடைத்தரகர்கள் பணத்தை ஏமாற்றிவிடுகிறார்கள், என்னிடம் தொகையைக் கொடுக்கவில்லை என்று ஏமாற்றிவிடுகின்றனர்.
இதனை மாற்ற இடைத்தரகரிடம் கொடுத்த தொகையை நான்கு அல்லது ஐந்து இடங்களில் பதிவுசெய்து வைத்திருந்தால் இடைத்தரகரால் ஏமாற்ற முடியாது. இது போன்ற செயல்பாடுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம். மையப்படுத்தப்படாத வழங்ககத்தின் (Decentralized Server) மூலம் ஒரு இடத்தில் உள்ள தரவானது வெவ்வேறு இடங்களில் பதிவுசெய்யப்பட்டு ஒரு நிகழ்வானது நடைபெறுவதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
கூகுள் பே (Google pay) செயல்பாடுகளில் நாம் தொகையை அனுப்புகிறோம். நாம் அனுப்பும் நபருக்குத் தொகை சென்றுவிடுகிறது. நாம் வெறும் எண்ணால் (ரூ.1,000) குறிப்பிடுகிறோம். தொகையைப் பரிமாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் ரூ. 1,000 என்ற தொகையானது நாம் அனுப்பும் நபருக்குச் சென்றுவிடுகிறது.
இதுபோல நாம் பிட்காயின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். நாம் கணக்கில் வைத்திருக்கும் லட்சக்கணக்கான ரூபாயை பிட்காயினாக மாற்றி சந்தைச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தும்போது இதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். எப்படி நாம் கூகுள் பே தொகை மூலம் அனுப்புகிறோமோ, அதேபோல் நம்மிடமிருந்து மற்றவருக்கு பிட்காயினாக அனுப்ப முடியும்.
இந்தச் செயல்பாடுகளில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுகிறது. நாம் எந்த நாட்டுக்குச் சென்றாலும் இதை வைத்துக்கொண்டு தேவையானதை வாங்கிக்கொள்ள முடியும்; தொகையை அனுப்ப முடியும். அந்த நாட்டுக்கான நாணய மதிப்பாக மாற்றத் தேவையில்லை.
ஒரு பிட்காயின் என்பது தோராயமாக இந்திய மதிப்புப்படி லட்சக்கணக்கில் இருக்கும். நான் என் நண்பனுக்கு ஐந்து பிட்காயின் அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அப்போது என்னுடைய தனிப்பட்ட குறியீட்டு எண்ணை (Private key) பதிவிட்டு, பின் இந்தச் செயல்பாடுகளை ஒரு ஹேஷ் செயல்பாடு (Hash Function) மூலமாக வேறொரு மதிப்பாக மாற்றி என் நண்பனுக்கு பிட்காயினை அனுப்ப முடியும். இது மாதிரியான செயல்பாடுகளில்தான் பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
நாம் வங்கிகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஒரே தொகுதியாக மாற்றி, அதில் உள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு தனிப்பட்ட தற்சார்பு முகவரியாக்கம் (Unique hash) உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. இதுபோல் நிறைய தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட தற்சார்பு முகவரியாக்கம் உருவாக்கப்படும்.
மேலும், ஒரு தொகுதியில் உள்ள தற்சார்பு முகவரியாக்கம், அடுத்த தொகுதியிலும் இருக்கும். ஒரு தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்தால் அனைத்துத் தொகுதிகளுக்கும் தெரியும். இதுவே, பிளாக்செயின் தொழில்நுட்பம். இதுபோல ஒரு தொகுதியாக உருவாக்கிவிட்டால் இடையில் மென்பொருள் ஊடுருவர் (Hacker), ஊடுருவ (hack) முடியாது.
உதாரணமாக, ஒரு திரைப்படத்தில் ஒரு கணக்கில் உள்ள தொகையை மாற்றும் செயல்பாடுகளில் ஒருவர் ஈடுபடும்போது, நடிகர் ஒருவர் அங்கே ஊடுருவி அந்தத் தொகையை வேறு ஒரு கணக்குக்கு மாற்றிவிடுவார். இதுபோன்ற செயல்பாடுகளை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ள முடியாது.
ஏனெனில், பிளாக்செயின் செயல்பாடானது மையப்படுத்தப்படாத வழங்ககத்திலிருந்து நடைபெறும். தரவுகள் அனைத்தும் பன்முகப்படுத்தப்பட்டு வழங்ககத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தரவுகள் அனைத்தும் ஒரு மையப்படுத்தப்பட்ட வழங்ககத்தில் (Centralised server) இருந்தால் நாம் அதற்குள் எளிதில் ஊடுருவ முடியும்.
பன்முக அமைப்பாகத் தரவுகள் இருக்கும்போது, ஒரு இடத்தில் தகவல் எடுக்க முயன்றால் எல்லா வழங்ககத்திலும் மாற்றம் ஏற்படும். எனவே, இப்படிப்பட்ட தரவுகளிலோ செயல்பாடுகளிலோ யாராலும் ஊடுருவ முடியாது.
நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து, இன்னொருவருடைய வங்கிக் கணக்குக்கு நாம் பணம் அனுப்பும்போது, நம்முடைய கணக்கில் உள்ள பணத்திலிருந்து, பணமானது கழிக்கப்பட்டு அங்கே செல்வதுபோல தோன்றும். ஆனால், இடையில் வங்கியானது நம்முடைய கணக்கை சரிபார்த்து, பிறகுதான் இன்னொருவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பும். இவ்வாறு இடையில் நடக்கும் வங்கிச் செயல்பாடுகளில் மென்பொருள் ஊடுருவர்கள் எளிதாக ஊடுருவிவிடுவார்கள்.
இதைத் தவிர்ப்பதற்கு எல்லாவிதமான நடவடிக்கைகளும் தொகுதியாக (block) சேமித்து வைக்கப்பட்டு, தற்சார்பு முகவரியாக்கம் மூலம் பாதுகாக்கப்படும். இதுபோல பல தொகுதிகள் உருவாக்கப்படும். ஒரு தொகுதியில் உள்ள தற்சார்பு முகவரியாக்க மதிப்பு இன்னொரு தொகுதியிலும் இருக்கும்.
யாராவது நீங்கள் அனுப்பிய 100 ரூபாயை இடையில் 10,000 ரூபாய் என்று மாற்றினால், தொகுதியில் உள்ள தற்சார்பு முகவரியாக்க மதிப்பிலும் மாற்றம் ஏற்படும். மேலும், அந்தத் தொகுதியில் முன்னாள் தொகுதியில் உள்ள தற்சார்பு முகவரியாக்க மதிப்பும் மாறும். அதை சரிபார்க்கும். எனவே நாம் அனுப்பும் தொகையை வேறொருவர் மாற்றவோ எடுக்கவோ முடியாது.
இன்னும் எளிமையாக, பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதற்குக் கீழ்க்காணும் உதாரணத்தைப் படியுங்கள். ஒரு பணத்தைப் பாதியாகக் கிழித்து, ஒருவரிடம் ஒரு பாதியும், மற்றொருவரிடம் ஒரு பாதியும் இருக்குமாறு வைத்துக்கொள்வோம்.
இந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டுமென்றால், ஒருவரிடம் உள்ள பாதியையும், மற்றொருவரிடம் உள்ள பாதியையும் இணைத்த பிறகுதான் பயன்படுத்த முடியும். அதுபோலத்தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். ஒரு தொகுதிக்கென ஹேஷ் குறியீடு (Hash key) இருக்கும்.
இன்னொரு தொகுதிக்கென ஒரு ஹேஷ் குறியீடு (hash key) இருக்கும். அந்த இன்னொரு தொகுதியை நாம் பயன்படுத்தும்போது முன்னர் உள்ள தொகுதிக்கான குறியீட்டின் மதிப்பு (Key Value ) நமக்குத் தேவை. அப்போதுதான் அதைச் செயல்படுத்த முடியும். இவ்வாறு செய்வதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம் போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். ஏதாவதொரு தகவலை அழிப்பதோ மாற்றுவதோ இதில் கடினமானது. ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் வலையிணைப்புக் கணுக்கள் (network nodes) மூலமாகவும், பராமரிப்பாளர்கள் மூலமாகவும் சரிபார்க்கப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம் சென்றுவிடும். இதனை வலையிணைப்புக் கணுக்களும் பராமரிப்பாளர்களும் உறுதிசெய்வார்கள்.
இடம் யாருக்குச் சொந்தம், எப்போது பரிமாற்றம் நடந்தது என்பன போன்றவற்றை அதிநவீனக் கணினி மூலமாக, கணிதக் கோட்பாடுகளையும் சமன்பாடுகளையும் எதிர்கொண்டு விடையளிப்பதாக அந்த உறுதி அமையும். இவ்வாறு பரிமாற்றத்தை உறுதிசெய்த பின், மறுமுறை அதே இடத்தை வேறொருவருக்குக் கொடுக்க இயலாது.
அதேபோல்தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பல்வேறு பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதிவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில் பிளாக்செயின் குறித்து அறிந்துவைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
- பா.சிதம்பரராஜன், இயக்குநர், எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி;
க.சண்முகம், உதவிப் பேராசிரியர், எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி.