வானவில் அரங்கம் | தமிழிசையின் ஒரு பிரிவுதான் கர்னாடக இசை! - இசையறிஞர் நா.மம்மதுவுடன் நேர்காணல்

வானவில் அரங்கம் | தமிழிசையின் ஒரு பிரிவுதான் கர்னாடக இசை! - இசையறிஞர் நா.மம்மதுவுடன் நேர்காணல்
Updated on
4 min read

இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததுதான் தமிழ். இப்பிரிவுகளில் தமிழிசை வேர்களைத் தொல்லாசிரியர்கள் வழியில் மீட்டுக் கொண்டுவருவதைத் தம் தலையாய பணியாகக் கொண்டிருப்பவர் நா.மம்மது. அறக்கட்டளை அமைத்து தமிழிசை ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவர் ‘தமிழிசைப் பேரகராதி’, ‘ஆபிரகாம் பண்டிதர்’, ‘தமிழிசை வரலாறு’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மதுரைவாசியான இசையறிஞர் மம்மது, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

நெடுஞ்சாலைத் துறையில் தமிழக அரசு கண்காணிப்பாளர் பணியிலிருந்து 2004-ல் ஓய்வுபெற்ற பின், தமிழிசை ஆய்வைத் தொடங்கிய உங்களின் தேடலைப் பற்றிக் கூறுங்களேன்...

கிராமத்தினருக்கு இசையைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எனது 25 ஆண்டு கிராமிய வாழ்க்கையில், பல்வேறு இசை வகைகள் என்னைத் தேடி வந்தன. தாலாட்டு, ஒப்பாரி, திருமணப் பாட்டு, கோயில்களில் கரகாட்டம், காவடி, கிராமங்களுக்கே உரிய ஓடக்காரன் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் காரணமாக என் தாத்தா, தந்தை என எங்கள் குடும்பமே இசையை ரசிப்பவர்களாக இருந்தார்கள். திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்குச் சென்ற நான், பாளையங்கோட்டையில் மிகப் பெரிய இசை அறிஞரான சி.சு.மணியைச் சந்தித்தேன். இவர்தான் இசையில் ராகம், பண் போன்றவற்றை எனக்குக் கற்றுக்கொடுத்தார். எனக்குள் இருந்த ஆர்வத்தை அடையாளம் கண்டு, இசை தொடர்பான சில நூல்களையும் படிக்கக் கொடுத்தார். இதன் பலனாக எனக்கு இசை அறிவு வளர்ந்தது. பிறகு, வீ.ப.கா.சுந்தரத்திடம் மதுரையில் இசையை முறையாகக் கற்றுக்கொண்டேன். இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைக்காக ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்.

தமிழுக்கென்று ஒரு தனி இசை இருக்கிறது என்பதே கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டதல்லவா?

ஒவ்வொரு பண்பாட்டுக்கும் இனத்துக்கும் தனித்த இசை, ஆடல், பாடல் மரபுகள் உண்டு. இந்தப் பண்பாட்டைத் தீர்மானிப்பது அவர்களின் மொழி. பெரிய பாறாங்கல்லை உருட்டுவது போன்ற கடினமான பணிகளில் உழைப்பாளர்கள் தங்கள் களைப்பு தெரியாமலிருக்கப் பாடுவதுண்டு. இந்த உழைப்பாளர் இசையைப் போல், அனைத்துச் செயல்பாடுகளுக்கும், எல்லா இனங்களுக்கும் தனித்தனி இசை உண்டு. தமிழினம் என்பது ஒரு தொன்மையான இனம். இதற்கென்று தனியாக இருப்பதுதான் தமிழிசை. தற்போதைய தமிழ்த் திரைப்படங்கள், கச்சேரிகளின் பாடல்கள் போன்றவற்றில் நாம் அதிகம் கேட்பது தமிழிசைதான். பழைய திரைப்படங்களில் ராகங்கள் அதிகம் நிறைந்த பாடல்கள் இடம்பெற்றன. காலம் மாறி இவை மெல்லிசையாயின. இதனால்தான் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ என்ற பெயர் வந்தது. இவரது காலத்தில் இசையின் தாக்கம் அதிகரித்து ராகங்களின் அழுத்தம் குறைந்தது.

கர்னாடக இசை மட்டும் எப்போதும் தனிக்கவனம் பெற்று வளர்ந்துவருகிறதே?

ராகங்களை-பண்களை எடுத்து ஆலாபனை செய்வது தமிழிசையின் முக்கிய அம்சம். இந்த வகையில், வெறும் சுரத்தை வைத்தும் பாடுவார்கள். இதுபோல், பாடல் வரிகளே இன்றி ராகங்களை மட்டும் வைத்துப் பாடுவது கர்னாடக இசையில் அதிகமாக இருக்கும். தமிழிசைக்கே உரிய இந்த முறையைத்தான், ‘கர்னாடக இசை’ என்று அழைக்கிறார்கள். தமிழிசையின் ஒரு பிரிவுதான் கர்னாடக இசை. பக்திக்கு, நாடோடிகளுக்கு, நடனத்துக்கு, நாடகங்களுக்கு என்றிருக்கும் தமிழிசைப் பிரிவுகளில் ஒன்றுதான் ‘கிளாஸிக்கல்’ இசை. இந்தித் திரைப்படங்களில் வருவது இந்துஸ்தானி இசை. ஆனால், இதுவும் தமிழிசையைப் போன்று ராகங்களின் அடிப்படையிலான இசையே. இந்த ராகங்கள் இரண்டு இசைக்கும் பொதுவானவையே, பெயர்கள் மட்டும்தான் வேறுவேறு. ராகங்களை அடிப்படையாகக் கொண்ட இசையைத்தான் இந்திய இசை என்று அழைக்கிறார்கள். மேற்கத்திய இசை என்பது அப்படியல்ல.

ஆனால், கர்னாடக இசை தமிழுக்கானது அல்ல என்பதுபோல் ஒரு தோற்றம் உள்ளதே?

கர்னாடக இசை மேதையான தியாகய்யர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் என்பதால்தான் தமிழிசை முறையில் பாடினார். இதற்கான முக்கிய வாத்தியமான வீணையும் தமிழுக்கானதல்ல எனவும் ஒரு தோற்றம் உண்டு. வீணையும் நாகசுரமும் வேறு எந்த இசையிலும் இல்லை. வழக்கமாக, நாடோடிப் பாடல்களையும் ஒரு உயர்குடி சமூகத்தவர் பாடினால் அதை ‘கிளாஸிக்கல்’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

தமிழிசைக்கான வரலாற்றைச் சுருக்கமாகக் கூற முடியுமா?

எல்லா ஊர்களிலும் சிவன், பெருமாள் ஆகியோருக்கான பெருந்தெய்வக் கோயில்கள் உள்ளனவோ, இல்லையோ ஒவ்வொரு இடத்திலும் ஒரு அம்மன் கோயில் இருக்கும். அசாமின் காமாக்யாவில் தொடங்கி கன்னியாகுமரியின் குமரித் தெய்வம் உள்ளிட்ட அனைத்தும் தாய் தெய்வக் கோயில்களே. இதன் பின்னணியில், இனக்குழு சமூகங்களுக்குப் பெண்கள் மட்டுமே தலைமை தாங்கியதாக உள்ளது. இவர்கள்தான் தமிழிசையை உருவாக்கினார்கள். சமீப காலமாக இதற்குப் பல்வேறு சான்றுகள் கிடைத்துவருகின்றன. இவை பற்றி நான் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். இந்த ஆய்வுகளின்படி முதன்முதலான பூசாரிகள், ஆசிரியர்கள், தலைவர்கள் எனப் பலரும் பெண்கள்தான். இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள்தான் பாணர்கள். இந்தப் பாணர்கள்தான் பண், ஆடல் போன்றவற்றை மேலும் வளர்த்தார்கள். பாணர்களைத் தொடர்ந்த மரபுதான் தேவாரம் பாடுவோர். இதன்மூலம், ஒரு தொடர்ச்சி தமிழிசையாக வளர்ந்துவந்திருப்பதைக் காண முடியும்.

தமிழிசைக்கே உரிய இசைக் கருவிகளைப் பற்றிக் கூறுங்களேன்...

விஷ்ணு நாராயண பாத்கண்டே, பி.சைதன்ய தேவா போன்ற அறிஞர்கள் இசைக் கருவிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு எழுதியிருக்கிறார்கள். இவர்கள் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 500 இசைக் கருவிகள் இருந்தன. இவற்றில் பல மறைந்துபோயின. சில இசைக் கருவிகள் இன்றும் உள்ளன. சில அரிய வாத்தியங்கள் இன்று கோயில்களில் மட்டும் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் இலக்கியங்கள், பொதுமக்கள் புழக்கம் என்றெல்லாம் நான் ஆராய்ந்ததில் தமிழகத்தில் 465 இசைக் கருவிகள் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றில் நம்மிடம் தற்போது புழக்கத்தில் இருப்பவை சுமார் 50 மட்டுமே. இவற்றிலும் சில அழிவை எதிர் நோக்கியுள்ளன. திரையிசையில் இவற்றின் பயன்பாடு குறைந்து, மேற்கத்திய இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவதும் முக்கியக் காரணம். இந்தக் கலப்பைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், இதன் அளவு அதிகரித்தால் நம் அடிப்படையான தமிழிசையே அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள தமிழிசைக் கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளேன்.

தமிழ் என்றால் ‘இயல்-இசை-நாடகம்’ என்றிருக்க, நாம் இயலில் மட்டும் கவனம் செலுத்துகிறோமா?

ஆம்! இயல் என்பதை நூல்களின் மூலம் எழுத்துகளாகவும் படிக்கலாம். ஆனால், இசையைப் பொறுத்தவரை மிகவும் சிரத்தையுடன் பயிற்சி பெற வேண்டும். நாடகத்தில் மட்டுமே இயல், இசை, நாடகம் என மூன்றும் இருக்கும். இதனால் நாடகத்தில் நடிப்பது என்பது மற்ற இரண்டைவிடவும் மிகச் சிரமமானது. எனவே, கடைசி இரண்டு பிரிவுகளில் சிரமம் காரணமாகப் பலரும் ஈடுபடுவதில்லை. இதனால், அவை தொடர்பான ஆய்வுகளும் நூல்களும் குறைவு.

அப்படியெனில், நாடகத் தமிழும் ஆபத்தில் உள்ளதா?

நிச்சயமாக! நாடகத் தமிழ் அழிவின் விளிம்பில் உள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய ஏராளமான நாடகங்களில் 10 நாடகங்கள் மட்டுமே தற்போது நடத்தப்பட்டுவருகின்றன. சுவாமிகளின் பெரும்பாலான நாடகங்களை நடித்து, நடத்தக் கூடியவர் எனது நண்பர் ‘ராஜபார்ட் ராஜா’ என்ற ஷாகுல் ஹமீது. இவருக்குத் தற்போது ‘வள்ளித் திருமணம்’ நடத்த மட்டுமே அழைப்பு வருகிறது. இந்த நிலை கடந்த 50 ஆண்டுகளில் நாடகக் கலையையும் தமிழகத்தில் நாம் இழந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இசையையும் நாடகத் தமிழையும் எழுதி வைத்துப் பாதுகாக்க முடியாதா?

தமிழிசை என்பது அசைவுகளையும் கமகங்களையும் கொண்டது. இவற்றைப் பதிவுசெய்ய முடியாது. உதாரணமாக, சுசீலாம்மா பாடிய, ‘சொன்னது நீதானா? சொல்’ என்ற பாடலில் எத்தனை ‘ல்லண்ணா’ போட்டார் என்பதைப் பதிவுசெய்ய முடியாது. இவற்றை வீடியோ பதிவாக்கினால் காக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை அரசு அல்லது தனியார் பெருநிறுவனங்கள் செய்ய முன்வர வேண்டும். இசைத் தமிழின் ஒரு கூறான கர்னாடக இசையைக் காக்கும் பணியில் தற்போது பிராமணர் சமூகம் தனது சபாக்கள் உள்ளிட்டவற்றால் அதிக ஆர்வம் காட்டுகிறது. இவர்களுடன் மோதிக்கொண்டிருக்காமல் இதர சமூகங்கள், பிராமணர்களைப் போல் தமக்கான சபாக்களை உருவாக்கி நடத்தினால், நாடகத்தையும் இசைத் தமிழையும் காக்கலாம். தற்போது இசைத் தமிழை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள தமிழக அரசுக்குப் பாடத்திட்டங்களைத் தயாரித்து அளித்துள்ளேன். இசைத் தமிழானது இனி மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இடம்பெறவுள்ளது. தமிழ் நாடகங்களையும் பாடங்களில் சேர்க்க அரசு ஆலோசித்துவருகிறது.

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து தமிழிசை ஆய்வாளராக நீங்கள் ஆகியிருப்பது பற்றி…

இஸ்லாத்தில் இசைக்கு இடமில்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. இதற்கு இறைத்தூதர் நபிகள் நாயகத்துக்கு முற்பட்ட காலத்தின் நிலைதான் காரணம். அந்தக் காலத்தில் அடிமைப் பெண்கள் சூதாட்ட விடுதிகளில் மது ஊற்றிக் கொடுப்பதுடன், ஆடிப் பாடி மகிழ்வித்துவந்துள்ளனர். இதற்காக அப்பெண்கள் இசைக் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதனால், அரேபியச் சமூகம் சூதாட்டத்தில் மூழ்கித் தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருந்தது. இவர்களைத் திருத்தி மீட்டெடுக்கும் பொருட்டு நபிகளார் காலத்தில் மதுவுக்கும் சூதாட்டத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது. இத்துடன் அறிவிப்பில்லாமலே இசைக்கும் தடை உண்டு என்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. பிறகு வந்த அறிஞரான இமாம் கஸாலி காலத்தில் இசை குறித்த தெளிவு உருவாக்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் கேட்கும்படி விரசம் இல்லாத பாடல்களை இசையுடன் பாடலாம் என்று அறிவிக்கப்பட்டது. மசூதிகளில் தொழுகைக்காக ஒலிக்கப்படும் பாங்கு முழக்கமே வகுளாபரணம், சிந்து பைரவி உள்ளிட்ட பல ராகங்களில் இனிமையாகத்தான் பாடப்படுகிறது. இன்னின்ன ராகங்கள் என்பதை அறியாமல்தான் மவுலானாக்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய நாடுகளில் அரேபிய இசை இருக்கிறது. கவ்வாலி, கஸல் போன்ற பிரபலமான இஸ்லாமிய இசை வடிவங்களைக் குறிப்பிடலாம். எனவே, ஒரு இஸ்லாமியராக இசையில் மூழ்க எந்தத் தடையையும் நான் உணரவில்லை.

- ஆர்.ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in