

மனித வாழ்க்கை கடினமானது; சிக்கல்கள் நிறைந்தது. உண்மை வாழ்வின் கொடூரங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, எங்கோ கனவுகளில் ஒளிந்துகொள்ள முயன்றுகொண்டே இருக்கிறோம். 2,700 ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி ஹோமர் அப்படியான ஒரு மாயக் கனவுலகத்தை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அது – அட்லாண்டிஸ். அவருக்குப் பின் அந்த உலகை கிமு 4-ம் நூற்றாண்டில் விரிவுபடுத்தி பிளேட்டோ எழுதினார்.
கடவுள் பாதி, மனிதன் பாதியென விந்தையானவர்கள் ‘வாழ்ந்த’ பிளேட்டோ வர்ணித்த அட்லாண்டிஸ் தீவு, பல காலம் கிரேக்கர்களின் மாய உலகமாக இருந்தது. அக்காடிய மொழியில் எழுதப்பட்ட ‘கில்கமெஷ்’ காப்பியத்திலும் ஃபேன்டஸி உலகம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பிற உலக நாடுகள் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் மகாபாரதம், ராமாயணம் போன்ற ஃபேன்டஸி கதைகள் மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்டன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வாறான கதைகள் சொல்லப்பட்டே வந்துள்ளன.
வரலாறு முழுக்க நமக்குச் சொல்லப்பட்ட ஃபேன்டஸி கதைகள் நமக்குப் ‘படிப்பினை’ கற்றுத்தந்தன. ‘நல்லவனாக இரு’, ‘நேர்மை பழகு’, ‘உண்மையைச் சொல்’ என வகுப்பெடுத்தன. இன்றைய நவீன ஃபேன்டஸி உலகின் சூத்ரதாரி என கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லியைச் சொல்லலாம். 1818-ல் அவர் எழுதிய ‘ஃப்ராங்கென்ஸ்டீன்’, மாய மனிதன் ஒருவனை உலகுக்கு அறிமுகம் செய்தது.
மேரிக்குப் பிறகு பல ஃபேன்டஸி கதைசொல்லிகள் தோன்றினாலும், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வெளியான ‘ஹாரி பாட்டர்’ ஃபேன்டஸி நாவல்கள், ஃபேன்டஸி கதைகளை இவ்வுலகம் பார்த்துவந்த பார்வையை அடியோடு கலைத்துப்போட்டன! 26 ஜூன் 1997 அன்று வெளியான ‘ஹாரி பாட்டர் அண்டு தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்’ நாவல் வெளியாகி, இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
நம் தாய்மொழியில் அல்லாது, வேற்று மொழியில் வெளியான ஒரு படைப்பு குறித்துக் கால் நூற்றாண்டு கழித்தும் நாம் பேசிக்கொண்டிருப்பதே ஹாரி பாட்டர் நாவல்களின் பெருவெற்றி எனச் சொல்லலாம். வழக்கமான ‘நல்லதே வெல்லும்’ கதைக்கருதான். ஆனால், உலகமே தலையில் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு ஜே.கே.ரவுலிங் இந்த நூல்களில் செய்த செப்படி வித்தைதான் என்ன? ‘மேஜிக்’ மட்டுமே! இதுகாறும் தமிழில் வெளியான மாயக் கதைகள் வேறொரு உலகை மக்களுக்கு அறிமுகம் செய்தன; அதில் சூப்பர் ஹீரோக்கள் இருந்தனர்; அவர்கள் ஒருபோதும் தோல்வியடைந்தது இல்லை.
ஹாரி அப்படி அல்ல! ஹெர்மயனி கிரேஞ்சர் என்ற ‘மகிள்’ (muggle - மேஜிக் உலகை அறியாத சாதாரணர்கள்) உலகைச் சேர்ந்த பெண் தன் அதீத எச்சரிக்கை உணர்வு மற்றும் அறிவாற்றலால் பல இன்னல்களிலிருந்து ஹாரியைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. ஹாரி மட்டுமே சூப்பர் ஹீரோ அல்ல, குட்டியூண்டு ‘டாபி’ முதற்கொண்டு ஹாரி பாட்டரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மை கொண்டது. சில பத்து கதாபாத்திரங்களை வெவ்வேறாக வடிக்க அவர்களின் குணாதிசயங்கள், முக வடிவமைப்பு, ஆடை, அவர்களது சிறப்பு ‘விசார்டிங் ஆற்றல்’ என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரவுலிங் செதுக்கியிருப்பதுதான் ஹாரி பாட்டர் கதைகளின் பெருவெற்றிக்குக் காரணம்.
‘விசார்டிங் உலகம்’, அதன் இயங்கியல் குறித்து எதுவுமே அறியாத ‘மகிள்ஸ் உலகம்’ என இரண்டையும் ஒரே சம தட்டில், சம காலத்தில் படைத்து, இரு உலகங்களுக்குள்ளும் மந்திரவாதிகள் சஞ்சரிப்பதை ரவுலிங் அருமையாகக் காட்சிப்படுத்தி எழுதியிருப்பார். இதுவரை எழுதப்பட்ட ஃபேன்டஸி கதைகளில் இந்தச் சமன்பாடு இல்லை. லூயி கரோல் எழுதிய ‘ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்’ கதையில் ஆலிஸ் விசித்திர உலகைப் பற்றி கனவு காண்கிறாள். ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஷெஹர்சாதி, கணவருக்குக் கதை சொல்ல விசித்திர உலகை அறிமுகம் செய்கிறாள். பிரபல குழந்தைகள் எழுத்தாளரும் ரவுலிங்கின் முன்னோடியுமான ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் எழுதிய ‘தி ஹாபிட்’ (1937) மற்றும் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ (1968) போன்றவற்றில் வரும் ‘மிடில் எர்த்’ இதே போன்ற மாய உலகம்தான். அங்கு நடக்கும் கதைகளுக்கும் நிஜ உலகுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதை உடைத்து, நிஜ உலகையும் கனவுலகையும் ஒன்றாக்கியது ஹாரி பாட்டர் தொடர்.
குழந்தைகளுக்கான நூல்கள் குறைந்த எழுத்துகளுடன், நிறையப் படங்களுடன் வண்ணமயமாக இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது இங்கு காலம்காலமாக ‘நிறுவப்பட்ட’ நியதி. இதையும் ஹாரி பாட்டர் உடைத்தது. ஒவ்வொரு ஹாரி பாட்டர் நாவலிலும் 200-300 சொச்சப் பக்கங்கள் முழுக்க வெறும் எழுத்து மட்டுமே உண்டு. ஆனால், வெள்ளைத் தாளில் இந்தக் கறுப்பு எழுத்துகள் பல வர்ண மாயாஜாலங்களை நிகழ்த்தின. படங்கள் காட்ட வேண்டியதை, ரவுலிங்கின் எழுத்துகளே சித்தரித்தன. குழந்தைகளின் ‘கல்ட் நாவல்’ நிலையை 2000-களில் ஹாரி பாட்டர் எட்டியது. சிறார் மட்டுமே வாசித்த நூலா அது? இல்லவே இல்லை. பதின் பருவத்தினர், மணமான பெண்கள், நடுவயது ஆண்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் எனப் பலர் ஹாரி பாட்டர் வாசிக்கக் கண்டிருக்கிறோம். நான் ஹாரி பாட்டர் முழு செட்டையும் வாசித்து முடித்தபோது எனக்கு வயது 30. சினிமா ஹாரி பாட்டரை உள்வாங்கிக்கொண்டது. ஹாரி பாட்டர் சீரிஸ் படங்கள் வசூலை வாரிக்குவித்தன. அவற்றின் வெற்றி, ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘கிரானிக்கிள்ஸ் ஆஃப் நார்னியா’ என மாயாஜாலப் படங்கள் மளமளவென வெளிவரக் காரணமானது.
ஹாரி பாட்டர் வாசித்து வளர்ந்த பெண் குழந்தைகள் தங்கள் முப்பதுகளில் பவ்லா ஹாக்கின்ஸின் ‘தி கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்’ நூலை விழுந்துவிழுந்து வாசிக்கின்றனர். ‘ஹாரி பாட்டர் ஜெனரேஷன்’ என உலகம் கொண்டாடும் இந்தப் பெண்களும் ஆண்களும் ஃபேன்டஸி வாசிப்பை விட்டுவிடவில்லை. இன்றும் தங்களை ‘கிரிஃபிண்டார்’களாகக் கற்பனை செய்துகொண்டு வாசிக்கின்றனர். தீவிர இலக்கியம் மட்டுமே கொண்டாடப்பட வேண்டியதா என்ன? நல்ல வாசிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் எதுவும் கொண்டாடப்பட வேண்டியதே!
ஃபேன்டஸி கதைகள் சாமானியர்களால் எழுதப்படுபவை; சாமானியர்களுக்காக எழுதப்படுபவை. அவற்றைக் கொண்டாடத் தயங்க வேண்டியதில்லை. கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தின் 9¾ நடைமேடையிலிருந்து விசார்ட்ரி பள்ளிக்குச் செல்ல ரயிலேறலாம், நிகழ்கால உலகின் துன்பத்தை மறக்கலாம் என்றால் யாருக்குத்தான் ஃபேன்டஸி பிடிக்காது? ஹாரியின் கைகளில் இருந்த (கடைசி நூலில் உடைந்துபோன) ‘மேஜிக் வாண்ட்’ உண்மையில் ரவுலிங் கையில்தான் இருக்கிறது. நம்மை வாசிக்கத் தூண்டும் அந்த மேஜிக் வாண்ட், ரவுலிங்கின் பேனா.
- நிவேதிதா லூயிஸ், ‘அறியப்படத கிறிஸ்தவம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: niveditalouis@gmail.com