

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க போலீஸாரால் தெருவில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு. ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்ற அவரது இறுதி முனகல், சித்ரவதையின் உச்சபட்சக் கொடூர சத்தம்.
இது போன்ற சத்தங்கள் உலக அளவில், ஏன் இந்தியாவிலும் பலவிதங்களில் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சித்ரவதை என்பது மனித உரிமை மீறல்களின் கொடூரமான வடிவம். இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனிதத் தன்மையற்ற செயல்களுக்குப் பின்னர் 1948-ல் ஐ.நா.
உலகளாவிய பிரகடனம் ஒன்றை உருவாக்கியது. ‘யாரும் சித்ரவதைக்கு உள்ளாக்கவோ அல்லது குரூரமான, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான முறையில் நடத்தப்படுவதோ அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதோ கூடாது’ என்று அப்பிரகடனத்தின் 5-வது பிரிவு கூறியது.
அதன் பின், ‘ஐ.நா.வின் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை - 1984’, சித்ரவதை என்பது ஒருவர் இன்னொரு நபரின்மீது உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ கடுமையான வலியையோ கஷ்டத்தையோ உள்நோக்கத்துடன் ஏற்படுத்துவதாகும் என்றது.
ஏதாவது பாகுபாட்டின் அடிப்படையில், பொது அதிகாரி அல்லது அதிகாரத்தில் உள்ள ஒருவரின் தூண்டுதல் மற்றும் சம்மதத்தின் பேரில் ஒரு தகவலையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெறுவதற்காக ஒருவரை மிரட்டியோ நிர்ப்பந்தப்படுத்தியோ அவர் மீது வலியோ சிரமமோ திணிக்கப்படுவது சித்ரவதை என்றது அந்த உடன்படிக்கை.
தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் இறந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. இன்றைய ஆளும் கட்சி அப்போது அதற்கு எதிராகக் குரல்கொடுத்தது. மனித உரிமை அமைப்புகளுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அப்போதைய அரசைத் தீவிரமாக எதிர்த்தது.
இது போன்ற எதிர்ப்புகளும் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருந்தன. ஆனால், இப்போதைய ஆட்சியிலும் காவல் நிலைய மரணங்களும் சித்ரவதைகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் போன்றவர்களின் காவல் நிலைய மரணங்களுக்கும் சித்ரவதைகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தபோதிலும் சென்னை கொடுங்கையூரில் இந்த மாதத்தில் ஒரு காவல் நிலைய மரணம் நிகழ்ந்திருப்பது ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
காவல் வன்முறையை எல்லா அரசுகளும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றனவோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஒருவரை அச்சுறுத்தி, அவமானப்படுத்தி சித்ரவதை செய்வதும் சுட்டுக் கொல்வதும், அதை நண்பர்களையோ உறவினர்களையோ கட்டாயப்படுத்திப் பார்க்க வைப்பது போன்ற சம்பவங்களெல்லாம் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அமைக்கப்பட்ட கூட்டு அதிரடிப்படைகள் தமிழகத்திலும் கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் நடத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
1996-ல் ‘டி.கே.பாசு எதிர் மேற்கு வங்கம்’ வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்படுதல், காவலில் வைக்கப்படுதல் போன்ற அனைத்துச் சூழல்களிலும் காவல் துறை பின்பற்ற வேண்டிய 11 வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தப்பட்டன. அதனை எந்தக் காவல் நிலையமும் கடைப்பிடிப்பது இல்லை என்பதுதான் உண்மை.
இந்தியாவில் சாதியப் படுகொலைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்தியாவில் சித்ரவதையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்கள். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மீனவர்கள், மதச் சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள் ஆகியவர்களாகவே உள்ளனர். சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தின் காரணமாகச் சட்ட நடவடிக்கையில் எடுக்காமல், மௌனம் காப்பதைச் சித்ரவதையில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சித்ரவதை செய்வது காவல் துறை மட்டும்தானா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் சித்ரவதையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களில் குறிப்பாகக் குழந்தைகள், பெண்கள் முன்னணியில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரனுக்கு மூன்று குழந்தைகள்.
அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியையும் பிள்ளைகளையும் அடித்துச் சித்ரவதை செய்வாராம். சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வந்து, குழந்தைகளைத் தாக்க முயன்றபோது, தப்பியோடிய குழந்தைகள் ரப்பர் தோட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அப்போது 4 வயதுச் சிறுமியைப் பாம்பு கடித்துவிட்டது. அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்குள் அந்தச் சிறுமி இறந்துவிட்டாள். இப்படிக் குடும்ப வன்முறை என்ற பெயரில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று பலரும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இந்திய அரசு சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனத்தை ஏற்புறுதி செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். சித்ரவதை என்பது நாகரிக உலகுக்கு இழுக்கான ஒன்று.
சித்ரவதையை இழைப்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்து தப்பித்துவரும் நிலை தொடர்வதற்கு மத்திய - மாநில அரசுகள் இனியும் அனுமதிக்கலாகாது.
காவல் நிலைய சித்ரவதை என்பது இந்தியாவில் மோசமான மனித உரிமை மீறலாக இருக்கிறது. கீழ்வரும் சித்ரவதைகளைப் படித்துப்பார்க்கும்போதே நமக்கு நடுக்கம் ஏற்படும் என்றால், அவற்றை அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும்! அடிப்பது, நிர்வாணப்படுத்துவது, காலின் உள்பாகத்தில் அடிப்பதற்காக ‘லாடம் கட்டுவது’, தொங்க விடுவது, கழிவுகள் கலக்கப்பட்ட நீரில் தலையை மூழ்க வைத்து, மூச்சைத் திணற வைப்பது, மிளகாய்த் தூளைப் பயன்படுத்துவது, சிகரெட், இரும்புக் கம்பிகளால் சூடு வைப்பது, அந்தரங்க உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது, நீண்ட நேரம் நிற்க வைப்பது, ஒற்றைக் காலில் நிற்க வைப்பது, காற்று புகாத சிறிய அறையில் அடைத்து வைப்பது, வன்புணர்வு செய்வது, பெண்களை இழிவான முறையில் தாக்குவது, அந்தரங்க உறுப்பில் காயங்களை ஏற்படுத்துவது, பல்லைப் பிடுங்குவது, நகக்கண்களில் ஊசியைச் செலுத்தி வலியை ஏற்படுத்துவது, தூங்க விடாமல் செய்வது, நீண்ட நேரம் கண்ணைக் கட்டிவைத்திருப்பது, கண்ணுக்கு எதிரே மிகப் பிரகாசமான மின்விளக்கை வைப்பது, குடிக்கத் தண்ணீர் தர மறுப்பது, முடியைப் பிடித்துத் தூக்குவது, சூடான எண்ணெயைக் குடிக்கக் கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட சித்ரவதைகள் எல்லாம் அரங்கேற்றப்படுகின்றன என்று குற்றம்சாட்டப்படுகிறது.
பொதுமக்களைச் சித்ரவதை செய்ததாகத் தண்டனைக்கு உள்ளாகும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம். பாகுபாட்டுக்கும் சித்ரவதைக்கும் எதிரான கல்வியை மாணவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவிக்க வேண்டும். சித்ரவதையையும் சாதி ஆணவக் கொலையையும் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
மதுப் பழக்கத்தால் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அடக்குமுறைச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். சிறையில் நீண்ட நாள் வாடும் அரசியல் கைதிகளை மனித நேயத்துடன் விடுதலை செய்ய வேண்டும்.
சித்ரவதையால் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்க மனித உரிமை ஆணையங்கள், சட்ட உதவி மையங்கள் களமிறங்கி, மக்களிடம் ஆழமான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் சித்ரவதை என்பது ஒரு சமூகக் குற்றம் என்று கருதி, அதைத் தடுக்க முன்வர வேண்டும். சித்ரவதைக்கு எதிரான அகில உலக ஐ.நா. பிரகடனத்தை அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால், எந்தச் சூழ்நிலையிலும் சித்ரவதையை இந்தியாவில் நியாயப்படுத்த முடியாது.
- சி.சே.இராசன், வழக்கறிஞர். தொடர்புக்கு: samaulagam@gmail.com
ஜூன்-26: சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா.வின் ஆதரவு தினம்