

மத வழிபாட்டுக்காகவும் கலாச்சாரத்துக்காகவும் கோயில் சார்ந்த பகுதிகளில் பராமரிக்கப்படும் தல விருட்சங்கள் உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த இடம் கோயில் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 17,000 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 1,165 கோயில்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 112 தல விருட்ச இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சில முக்கியமான நகரங்களின் பெயர்களும் இந்த தல விருட்சப் பெயர்களுடன் அழைக்கப்படுவது உண்டு. திருவேற்காடு, புரசைவாக்கம், திருமுல்லைவாயில், மாங்குடி, திருவாலங்காடு போன்றவை எடுத்துக்காட்டுகள்.
பழங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சந்நிதி அல்லது ஆலயங்கள் சில மரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்பட்டன. இந்த மரங்கள் நாளடைவில் தல விருட்சங்களாக மக்களால் வழிபடப்பட்டன. எடுத்துக்காட்டாக, மா, கடம்பு, முல்லை, நெல்லி, பனை போன்றவை.
பல்வேறு வகையான புனித மரங்களையும் அவற்றோடு தொடர்புடைய கடவுளர்களையும் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் காடுகளை சுவாமித் தோப்பு அல்லது சுவாமி சோலை என்றும் அழைக்கிறோம். காடுகளில் அய்யனார், சாஸ்தா, முனீஸ்வரன், கருப்பசாமி, வேதப்பர், ஆண்டவர், அம்மன் போன்ற தெய்வங்கள் கிராம மக்களால் வணங்கப்பட்டுவருகின்றன. இந்தியாவில் அதிக கோயில் காடுகளைக் கொண்டுள்ள மாநிலம் இமாச்சல பிரதேசம் (5,000). தமிழ்நாடு 448-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளைக் கொண்டுள்ளது.
எண்ணற்ற மருத்துவத் தாவரங்களும் மரங்களும் பாதுகாக்கப்படுவதால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், அலோபதி ஆகியவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் கோயில் காடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
கிராமங்களில் முறையான மருத்துவ வசதி இல்லாத காலந்தொட்டே மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் கோயில் காடுகளிலிருந்து பெறப்படும் தாவரங்கள் முதலுதவி சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதனால், அழிந்துவரும் மர இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தக் காடுகளால் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் பெருகி உயிரினப் பன்மை செழிக்க வழிவகை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள 10,251 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட கோயில் காடுகளில் பெரும்பாலானவை பெரிய ஆறுகள், சிற்றோடைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், 9,621 ஹெக்டேர் காடுகள் நீரோடைகளின் பிறப்பிடமாகவும், 6,454 காடுகள் மலைப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
இக்காடுகள் சிறந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருப்பதால், கிராம மக்களின் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய உதவுகின்றன. மதுரை புளியங்குளத்தில் உள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் 500-க்கும் மேற்பட்ட வௌவால்கள் தங்கியுள்ளன.
கோயில் காடுகள் விதை ஆதாரமாக இருந்து, வௌவால்களாலும் பறவைகளாலும் விதைகள் பரப்பப்படுவதால் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புச் சாத்தியமாகிறது. மேலும், இக்காடுகள் மண்ணரிப்பு, நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிதல் போன்றவற்றைத் தடுக்கின்றன.
துளசி, வில்வம், வேம்பு, நொச்சி, அரப்பு, குன்றிமணி, அழிஞ்சில், வாகை, கருவேல், குடைவேல், வெள்ளெருக்கு, மஞ்சள் கடம்பு, சந்தனம், வெட்பாலை, செங்கருங்காலி, சோற்றுக்கற்றாழை, ஏழிலைப்பாலை, நிலவேம்பு, வெட்டிவேர், சீமை பணிச்சை, கருங்காலி, காட்டெலுமிச்சை, அரசமரம், மகிழமரம், புன்னை, ஆவாரை, நித்தியகல்யாணி, பிரண்டை, வாதநாராயணன், ருத்திராட்சம், நாவல், கல்யாணமுருங்கை, விளா, ஆல், அத்தி, அதிமதுரம், செம்பருத்தி, செண்பகம், ஊசில், அரளி, எட்டிமரம், மறுப்பனை, ஆயமரம், புங்கமரம், வன்னிமரம் போன்ற எண்ணற்ற மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் கோயில் காடுகளில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
வில்வமரம் சிவனுடனும், வேப்பமரம் அம்மனுடனும், துளசிச்செடி கிருஷ்ணனுடனும் ஒப்பிடப்படுகின்றன. பலாசம் (Butea monosperma) பிரம்மனின் உடலிலிருந்தும், ருத்திராட்சம் (Elaeocarpus ganitrus) சிவனுடைய உடலிலிருந்தும் தோன்றியவை எனக் கருதுவதுண்டு. எனவேதான் சிவ பக்தர்கள் ருத்திராட்ச விதைகளை மாலையாகக் கழுத்தில் அணிகிறார்கள்.
புத்தருக்கும் போதிமரத்துக்கும் (அரசமரம்) இடையே உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. பல மரங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு நேரடியாக முக்கியப் பங்காற்றுகின்றன. ராஜஸ்தானில் பிஷ்னோய் சமூக மக்களின் வாழ்வாதாரமாக வன்னிமரம் இருக்கிறது. இந்த மரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அம்மாநில அரசு 1981-ல் ராஜஸ்தானின் மாநில மரமாக அதை அறிவித்தது.
பெருகிவரும் மக்கள்தொகை, நகரமயமாதல், வளர்ச்சித் திட்டங்கள், இயற்கை வளங்களைச் சுரண்டுவது போன்ற காரணிகளால் கோயில் காடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. வெளிநாட்டுத் தாவரங்களை நட ஊக்குவிப்பது, மேய்ச்சலுக்காகக் கோயில் காடுகளைப் பயன்படுத்துதல், தோட்டங்கள் அமைத்தல், கிராம சாலைகள் அமைத்தல், கல் குவாரி அமைத்தல் போன்றவை கோயில் காடுகள் அழிவதற்குக் காரணம்.
கோயில் காடுகளைச் சமய நோக்கத்தின் அடிப்படையில் அந்தந்தக் கிராம மக்கள் பாதுகாக்கிறார்கள். வேட்டையாடுதலோ மரம் வெட்டுதலோ இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தேன், விறகு போன்றவற்றைச் சேகரிக்க அனுமதியுண்டு. இந்தியாவில் சட்டப்படி கோயில் காடுகள் பாதுகாக்கப்படுவதில்லை.
அரசு சாரா அமைப்புகளுள் சில, உள்ளூர் மலைவாழ் மக்களுடன் இணைந்து காடுகளைப் பாதுகாக்கின்றன. வன உயிர்கள் பாதுகாப்புத் திருத்தச் சட்டம்-2002 இப்பகுதிவாழ் மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களைப் பாதுகாக்க வழிவகை செய்கிறது. இதில் கோயில் காடுகளும் அடங்கும்.
கோயில் காடுகள் உயிருள்ள அருங்காட்சியகத்தைப் போன்று அரிதான பல தாவர இனங்களைப் பாதுகாக்கச் சிறந்த இடம். கடவுள் பற்றுக்கொண்டோர் அதிகம் உள்ள நம் நாட்டில், அதைக் கொண்டே சுற்றுச்சூழல் மேம்பாட்டை மேற்கொள்வதற்குக் கோயில் காடுகள் ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்.
- பெ.குமார், வனவியல் உதவிப் பேராசிரியர். தொடர்புக்கு: kumarforestry@gmail.com
- கு.விஜய் அரவிந்த், ஆராய்ச்சி மாணவர்,
உழவியல் துறை. தொடர்புக்கு: johnvijaymam95@gmail.com