Published : 23 Jun 2022 08:06 AM
Last Updated : 23 Jun 2022 08:06 AM

மொழித் தடையால் எட்டாக் கனியாகும் ஐஏஎஸ் பணி!

சா.கவியரசன்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தியக் குடிமையியல் பணித் (CSE) தேர்வு முடிவு சமீபத்தில் வெளியாகித் தமிழ்நாட்டில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 685 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட அத்தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து வெறும் 27 பேர்தான் (3.9%) தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பதே விவாதத்துக்குக் காரணம்.

2019-ல் 829 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 60 பேர் (7.2%), 2020-ல் 781 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 45 பேர் (5.7%), 2021-ல் நடத்தப்பட்டு தற்போது வெளியாகியுள்ள முடிவில் இதுவரை இல்லாத வகையில் 3.9%-தான் தேர்ச்சி.

உயர் கல்வியில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் இந்தியக் குடிமையியல் பணிக்கான தேர்ச்சி விகிதம் ஏன் இப்படி குறைகிறது என்பதை முன்னாள் குடிமையியல் பணியாளர்கள், குடிமையியல் பணி தேர்வுக்கான தனியார் பயிற்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் போன்றவர்களிடம் ஊடகங்கள் கேட்டன.

அவர்களின் பதில், 1. தமிழ்நாட்டில் தனியார் வேலைவாய்ப்பின் மீது இளைஞர்களுக்கு மோகம் அதிகமாகிவிட்டது. 2. ஒன்றிரண்டு ஆண்டு முயன்று, CSE தேர்வில் தேர்ச்சிபெற முடியாமல், பொருளாதாரச் சிக்கலால் வேறு வேலை நோக்கியும், வெவ்வேறு தேர்வு நோக்கியும் போட்டியாளர்கள் நகர்ந்துவிட்டார்கள். 3. ஆங்கிலத் திறனை மேம்படுத்தாமல் முதல் கட்டத் தேர்வில் உள்ள CSAT (Civil Service Aptitude Test) தாளில் தேர்ச்சி அடைவது சிக்கலாக இருக்கிறது.

தனியார் வேலையின் மீது மோகம் அதிகமாகிவிட்டால், அதே 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வுக்கு மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்களே, அவர்கள் யார்? அவர்களில் பாதியான இரண்டரை லட்சம் பேருக்குக்கூட CSE மீது ஆர்வம் ஏற்படாததற்கு என்ன காரணம்? CSE தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல், வேறு வேலை நோக்கியும் வேறு தேர்வு நோக்கியும் செல்கிறார்களே, அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? அவர்களின் பொருளாதார நெருக்கடி மட்டும்தான் காரணமா?

முதல் கட்டத் தேர்வில் உள்ள CSAT தாளில் ஆங்கிலத் திறன் இல்லாததால் தமிழ்நாட்டில் தேர்ச்சி குறைகிறது என்கிறார்கள். அது உண்மைதான். அண்ணாவின் இரு மொழிக் கொள்கையாக ஆங்கிலத்தைக் கொண்ட நம் மாநிலத்திலேயே இப்பிரச்சினை நிலவுகிறது.

ஆனால், வடமாநிலங்களில் இந்த ஆங்கிலப் பிரச்சினை இல்லை. காரணம், கேள்விகள் ஆங்கிலத்திலும் கூடவே இந்தியிலும் இருக்கின்றன. மேற்கூறிய மூன்று காரணங்களுக்கும் உள்ள அடிப்படையான சிக்கல், கேள்வி தமிழில் இல்லாததுதான்.

கடந்த ஆண்டு CSE (Civil Service Examination) தேர்வில் கேள்வி தமிழில் இல்லாத பிரச்சினை குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதனைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவையில் கேள்வி நேரத்தில் விவாதித்தார்.

மற்றொரு உறுப்பினரான சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் மனுவாகக் கொடுத்தார். பிறகு, கிணற்றில் போட்ட கல்லாக எந்த மாற்றமும் இல்லை. எப்போதும்போல, 2022-ம் ஆண்டுக்கான CSE முதல் கட்டத் தேர்வு கடந்த ஜூன் 5 அன்று அதே ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடைபெற்று முடிந்தது. 26% இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 50%-க்கும் மேல் ஆண்டுதோறும் CSE பணியில் அமர்கின்றனர்.

இதுபோன்று எத்தனை புள்ளிவிவரங்களைத்தான் எடுத்துக்காட்டுவது? ஆண்டுதோறும் கண்ணுக்கு முன் நிகழும் அநீதி இது. இந்தியில் இருக்கும் கேள்விகளை 22 அட்டவணை மொழிகளிலும் தயாரிப்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் சிக்கல்தான் என்ன? இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு வலுவான எதிர்ப்புக் குரல் கொடுத்து உரிமையைக் கேட்டுப் பெறுவதில் தமிழ்நாடு முதல்வருக்கும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கும் சிக்கல்தான் என்ன? நீட் தேர்வுகளிலெல்லாம் தமிழில் கேள்விகள் இருக்கும்போது, இதில் கொண்டுவருவதில் மட்டும் அப்படி என்ன சிக்கல்?!

CSE தேர்வில் ஆங்கிலத் திறனைச் சோதிப்பதும் ஒரு அங்கமென்றால், ஆங்கிலத்தில் மட்டும் கேள்வி இருக்க வேண்டியதுதானே, அத்துடன் ஏன் இந்தியில் மட்டும் இருக்கிறது? இப்படிப் பாரபட்சமான முறைக்கு யாராவது அலுவல்மொழிச் சட்டத்தைக் காரணம் காட்டினால், அச்சட்டம் திருத்தப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பத்தில் ஆங்கிலேயர் மட்டுமே குடிமையியல் பணிக்குத் தேர்வாக முடியும் என்ற பாகுபாடு இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு இந்தியர்களும் பங்குபெறலாம் என்று கொண்டுவரப்பட்டது. இருந்தும், தேர்வு லண்டனில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தது.

அதனால் லண்டன் சென்றுவரும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் பாகுபாடாக இருந்தது. காங்கிரஸின் பல போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவில் அலகாபாதிலும் எழுதிக்கொள்ளலாம் என்று கொண்டுவரப்பட்டது. இப்போது அதேபோல்தான் இந்தியில் கேள்விகள் வைத்து, ஏனைய இந்திய மொழி மக்களுக்குப் பாகுபாடு காட்டப்படுகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஆங்கில ஆட்சிக்கு நிகரான பாகுபாட்டை மத்திய அரசு நிகழ்த்தப்போகிறது? எத்தனை ஆண்டுகளுக்கு மாநில அரசும் கண்டுகொள்ளாமல் தமிழ், திராவிடம் என்று வெறும் பேச்சுடனேயே கடக்கப்போகிறது? போட்டியில் கலந்துகொண்டு தோல்வி அடைவது வேறு. போட்டியில் கலந்துகொள்ளவே பயப்பட வைப்பது வேறு. மொழிப் பிரச்சினை பயப்பட வைக்கிறது.

புரியாத மொழியில் கேள்வி கேட்டுவிட்டு, பாரபட்சமான முறையில் அறிவைச் சோதிப்பது முற்றிலும் தர்க்கமற்ற ஒன்று. மாநில அளவில் நிகழும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளோடு முடித்துக்கொள்வோம் என்றிருக்கும் போட்டியாளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள கடிவாளம் தகர்க்கப்பட வேண்டும்.

தனியார் பயிற்சி நிறுவனங்கள், போட்டியாளர்களுக்கு ஆங்கிலத் திறன் போதவில்லையென்று காரணம் கூறி CSAT தாளுக்குச் சிறப்பு வகுப்பு என்று அதைப் பணமாக்கப் பார்க்காமல், போட்டியாளர்களின் உரிமையைக் கேட்டுப்பெற அரசிடம் வலுவாகக் கோரிக்கை விடுக்க வேண்டும். இல்லையேல் குறைந்துவிட்ட தேர்ச்சிக்கு, அற்ப காரணங்களைக் கூறி பிரச்சினையின் தீவிரத்தைத் திசைதிருப்பாமலாவது இருக்கலாம்.

தனியார் வேலைக்குச் சென்றுவிட்டார்கள் என்பதும் அபத்தமான ஒரு காரணமே. தமிழ்நாட்டில் குடிமைப் பணிக்கான தேர்வுக்கு எவ்வளவு மாணவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்று சென்னை அண்ணா நகரில் ஒரு முறை வலம்வந்தால் தெரிந்துவிடும்.

இல்லையேல், தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். தவறான காரணங்களுக்கு சப்பைக்கட்டு கட்டி, இப்போதைக்கு வேண்டுமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம்.

ஆனால், இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசின் முக்கிய துறைகளின் செயலர்களாகவோ நிர்வாக ஆளுமைகளாகவோ தமிழ்நாட்டில் இருந்து குறைந்த அளவு ஆட்களே இருக்கும் நிலை ஏற்படும். அப்போது வருத்தப்பட்டு எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. எப்போதோ விழித்துக்கொண்டிருக்க வேண்டும். இப்போதாவது விழித்துக்கொள்வோம்.

- சா.கவியரசன், சுயாதீனப் பத்திரிகையாளர். தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com

To Read this in English: How language barrier shatters IAS dreams of countless Tamilians

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x