

சொல்...பொருள்...தெளிவு
| சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து அறிவியலாளர் ரேச்சல் கார்சன் எழுதி பெரும் கவனத்தைப் பெற்றிருந்த ‘மௌன வசந்தம்’ நூல் வெளியாகி சில ஆண்டுகள் கடந்திருந்தன.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிந்திருந்தது. நாடுகளின் எல்லை கடந்த அமில மழை உலக நாடுகளை அச்சுறுத்திவந்தது.
இது குறித்து அச்சம் தெரிவித்த ஸ்வீடன், 1968-ல் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்நோக்கியும் ஒரு மாநாட்டை நடத்தும் முன்மொழிவை ஐ.நா. அவையில் முன்வைத்தது.
| ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1972 ஜூன் 5-ம் தேதி தொடங்கி ஜூன் 16 வரை ‘மனித சுற்றுச்சூழல்’ குறித்த மாநாடு நடைபெற்றது. முதல் முறையாக உலக அரசியல் நிரலில் சுற்றுச்சூழல் துறையும் இடம்பிடித்தது.
| பூவுலகின் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை நிர்வகிக்கப் பொதுவான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம். அந்த மாநாட்டின் மையக் கரு ‘ஒரே ஒரு பூமி’ (Only One Earth).
| மாநாட்டில் 122 நாடுகள் பங்கேற்றன. அவற்றில் 70 நாடுகள் வளரும் நாடுகள்/ ஏழை நாடுகள். இந்த நாடுகள் ‘ஸ்டாக்ஹோம் பிரகடன’த்தை ஜூன் 16-ல் வெளியிட்டன. வளர்ச்சி, வறுமை, சுற்றுச்சூழல் ஆகிய மூன்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை முதன்முதலாக ஏற்றுக்கொண்ட உலகளாவிய ஆவணம் இது. அதில் 26 அடிப்படைக் கொள்கைகளும் செயல்திட்டமும் அடங்கியிருந்தன.
| எந்த நாடும் மற்ற நாடுகளின் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கக் கூடாது என்பது கொள்கை-செயல்திட்டத்தின் முக்கியப் பகுதியாக இருந்தது. மற்றொரு நாட்டின் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் இறையாண்மையைப் பாதிப்பதாகவும் கருதப்பட்டது.
| இந்த மாநாட்டின் மூன்று பரிமாணங்கள் முக்கியமானவை: நாடுகள் தங்கள் நாட்டு எல்லைக்குள்ளும் எல்லைக்கு வெளியேயும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கக் கூடாது; புவியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை ஆராய்வதற்கு ஒரு செயல்திட்டத்தை வகுப்பது; சுற்றுச்சூழலுக்காக உலக நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ‘ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம்’ (UNEP) என்கிற பெயரில் சர்வதேச அமைப்பை உருவாக்குதல்.
| ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பங்கேற்ற ஒரே வெளிநாட்டுப் பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே. அத்துடன், இந்திய இதழியலில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ இதழுக்காகச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் அனில் அகர்வால் ஸ்டாக்ஹோம் சென்றிருந்தார்.
| “வறுமைதான் உலகின் மிகப் பெரிய மாசுபடுத்தி. வறுமை பரவலாக இருக்கும்போது சுற்றுச்சூழலை எப்படி மேம்படுத்த முடியும்?” என்று இந்த மாநாட்டில் இந்திரா காந்தி பேசினார். சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபடுத்தப்பட்டதற்குக் காரணமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் வகையில் அந்தப் பேச்சு அமைந்திருந்தது.
| ஸ்டாக்ஹோம் மாநாட்டின் தொடக்க நாளான ஜூன் 5, 1974-ம் ஆண்டு முதல் ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ ஐ.நா. அவையால் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
| ஸ்டாக்ஹோம் மாநாடு அதன் நோக்கத்தை எட்டியதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டாலும், கடந்த 50 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு அக்கறையாக வளர்ந்திருப்பதற்கு ஸ்டாக்ஹோம் மாநாடு பெரும் பங்களித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
| ஸ்டாக்ஹோம் மாநாடே சுற்றுச்சூழல் யுகத்தைத் தொடங்கி வைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 50 ஆண்டுகளில் 500 பன்னாட்டுச் சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
| 1972-க்கு முன்னர் எந்த நாட்டிலும் சுற்றுச்சூழல் துறைக்குத் தனி அமைச்சகம் இருந்திருக்கவில்லை. மாநாடு முடிந்தவுடன் நார்வேயும், அடுத்த சில வாரங்களில் ஸ்வீடனும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை உருவாக்கின. இந்தியாவில் 1985-ல் சுற்றுச்சூழல் அமைச்சம் உருவாக்கப்பட்டது.
இன்றைக்கு 176 நாடுகளில் சுற்றுச்சூழல் சட்டங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஓர் அடிப்படை உரிமை என்பதைத் தங்கள் அரசமைப்புகளில் 150 நாடுகள் இடம்பெறச் செய்துள்ளன.
| ஸ்டாக்ஹோம் மாநாட்டின் தொடர்ச்சியாகப் புவி எதிர்கொண்டுள்ள பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதற்குப் பிற்காலத்தில் ‘ஐ.நா. காலநிலை மாற்றப் பணித்திட்டப் பேரவை’ (UNFCCC), ‘பாலையாதலைக் கட்டுப்படுத்துவதற்கான பேரவை’ (UNCCD), ‘உயிர்ப் பன்மைப் பேரவை’ (CBD) உள்ளிட்டவை உருவாக்கப்பட்டன.
| ஸ்டாக்ஹோம் 20-ம் ஆண்டு நிறைவையொட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா. சுற்றுச்சூழல் – வளர்ச்சி குறித்த மாநாடு நடைபெற்றது. ரியோ புவி மாநாடு என்று அழைக்கப்படும் இந்த மாநாடு, சுற்றுச்சூழல் புரிதலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.
| கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை வளப் பயன்பாடு, உணவு உற்பத்தி, ஆற்றல் உற்பத்தி, நுகர்வு போன்ற அனைத்தும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. வர்த்தகம் 10 மடங்கு அதிகரித்துள்ளது, உலகப் பொருளாதாரம் ஐந்து மடங்கு வளர்ந்துள்ளது, மக்கள்தொகை இரட்டிப்பாகியுள்ளது. சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இவையெல்லாம் அடையாளமாக உள்ளன.
| ஸ்டாக்ஹோம் மாநாடு 50-ம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த ஜூன் 2-3 தேதிகளில் ஸ்டாக்ஹோம் 50 என்கிற மாநாடு ஸ்வீடனில் நடைபெற்றது. அடுத்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. ‘ஸ்டாக்ஹோம் 50: அனைவரும் வளம் பெறுவதற்கான ஆரோக்கியமான புவி – நமது பொறுப்பு, நமக்குள்ள வாய்ப்பு’ என்பதே இந்த மாநாட்டின் தலைப்பு.
- தொகுப்பு: ஆதி