

அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 18 வயதை அடைந்த பின் சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோரைக் காவல் துறை கைதுசெய்யக் கூடாது என்றும் அவர்கள் மீது எந்தவொரு குற்ற நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறது.
குறிப்பாக, அவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்தாமல், அவர்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளது. அத்துடன் தன்னார்வத்தில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல; அதுவே பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதம் என்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது என்று கூறியதுடன் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பாலியல் தொழிலாளிகளுக்கு மருத்துவ, சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளிகள் கைது, மீட்பு, ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகும்போது எக்காரணம் கொண்டும் அவர்களின் அடையாளத்தை வெளியிடாமல் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேவேளையில், பாலியல் தொழில் என்பதை ஒரு தொழிலாக அங்கீகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் எதையும் கூறவில்லை.
கூடவே, பெண்களைக் கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது குற்றம் என்றே கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் கருத்துகளும் ஒருங்கே வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளன.
பாலியல் தொழிலின் கொடுமைகளையும் அதன் அவலங்களையும் சில திரைப்படங்கள் நமக்குக் காட்டியிருக்கின்றன. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘நாயகன்’ படத்தில், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் எப்படிக் குடும்பம் நடத்த ஆயத்தமாகிறாள் என்று சொன்ன அதேவேளையில், ‘மகாநதி’ படத்தில் கடத்தப்பட்ட சிறுமி எப்படிப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள் என்பது அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
‘குணா’ படத்திலும் பாலியல் தொழிலாளிகளின் உலகம் வருகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், பாலியல் திரைப்படங்களில் நடிப்பவராக வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இறுதியாக தனது மகனிடத்தில் ‘ ‘அந்த’ப் படத்தைப் பார்க்க லட்சம் பேர் இருக்கும்போது, நடிக்க நாலு பேர் இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் பார்ப்பவர்களை விட்டுவிட்டு, நடிப்பவர்களை மட்டும் தப்பா பேசும் உலகம்’ என்பார்.
தமிழ்ச் சிறுகதைகள் பலவும் பாலியல் தொழிலின் கொடுமைகள் பற்றிப் பேசியிருக்கின்றன. அதிலும் ‘பொன்னகரம்’ கதையில் புதுமைப்பித்தன் ‘அடிபட்டுக் கிடக்கும் தன் கணவனுக்குப் பால், கஞ்சி வாங்குவதற்காக அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ரூபாய் சம்பாதித்தாள்’ என்று அவளின் வறுமையை ஒற்றை வரியில் கோடிட்டுக் காட்டியிருப்பார். ஜெயகாந்தனின் கதைகளில் பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய கண்ணியமான சித்தரிப்புகள் உண்டு. ‘யாருக்காக அழுதான்’, ‘எங்கோ, யாரோ, யாருக்காகவோ’, ‘ஒரு பிடி சோறு’ போன்ற படைப்புகள் முக்கியமானவை.
பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒருவரின் நிலையை ஆராய்ந்தால் முதலில் அவரின் சூழ்நிலையே முழுமுதற் காரணமாய் அமையும். அந்தச் சூழ்நிலை என்பது வறுமை, ஏமாற்றப்பட்ட உறவு, நிர்ப்பந்திக்கப்பட்ட தருணம், கைவிடப்பட்ட குடும்பம், சாதி என எத்தனையையோ உள்ளடக்கிய ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு சாதி என்று குறிப்பிடும்போது மருத்துவர் முத்துலட்சுமி பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தேவதாசி முறையில் குறிப்பிட்ட சாதிப் பெண்களை மட்டும் ஈடுபடவைக்கும் செயலைக் கண்டித்துச் சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு முறைக்காக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும். முக்கியமாக, கோயில்களில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசாரத் தடுப்புச் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் சட்டம் போன்றவற்றை உருவாக்கியதில் அவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.
இப்படி அவரின் வழியில் பலரும் இந்தியாவில் இருக்கும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகளின் அவலத்தைப் போக்குவதற்குப் பல வழிகளிலும் உதவிபுரிந்துள்ளனர்.
இறுதியாக, பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் மனம் திறந்த பாலியல் தொழிலாளி ஒருவரின் கேள்வியை உள்வாங்கிக்கொண்டால் நமக்கு நிச்சயம் புரிதல் வரும். “பாலியல் தொழில் பற்றிப் பேசும்போது ‘கை கால் நன்றாக இருக்கிறபோது எதற்காக இந்தத் தொழில் செய்ய வேண்டும்? மாறாகப் பிச்சை எடுக்கலாம்’ என்பார்கள் சிலர். அப்படிப்பட்டவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
எத்தனை வீடுகளில் கணவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு மனைவிகள் ஆளாகிறார்கள்? எத்தனை அலுவலகங்களில் கடுமையான பாலியல் தாக்குதலுக்குப் பெண்கள் ஆளாகிறார்கள்? இதுபோன்று நடைபெறும் பல பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும், அவர்களுக்கு நீதி வாங்கித் தருவதற்கும், இவ்வாறான பாலியல் தாக்குதல்கள் நடக்காது என்ற நாள் எப்போது வருமோ அன்று பாலியல் தொழிலை இந்தச் சமூகம் தடைசெய்யட்டும்” என்கிறார்.
மத்திய - மாநில அரசுகள் பாலியல் தொழில் தொடர்பான சட்டங்களை இயற்றினால், அப்போது பாலியல் தொழிலாளிகளின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். அதற்கு இந்தப் பாலியல் தொழிலாளியின் மேற்சொன்ன கூற்றே முழுமுதற் கருத்தாகும். பாலியல் தொழிலாளிகளின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு தீர்ப்பை உரக்கச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
- செ.சரத், எழுத்தாளர். தொடர்புக்கு: saraths1995@gmail.com