வானவில் அரங்கம் | இசைக் கிராமம்: இசைதான் இவர்களின் பெயர்!

வானவில் அரங்கம் | இசைக் கிராமம்: இசைதான் இவர்களின் பெயர்!
Updated on
2 min read

‘அரிஞ்சிகைக் காமரப் பேரையன்’ என்று சிறப்புப் பெயர் பெற்ற இசைப் பாணரைப் பற்றிய கல்வெட்டு ஆதாரம் ஒன்று உண்டு. காமரப் பண் பாடுவதில் வல்லுநராக இருந்துள்ளார் என்பது இவரது சிறப்புப் பெயரால் தெரியவருகிறது. (மருதநிலச் சிறுபண் - காமரம், இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது). இவ்வாறாக, எந்த ராகத்தில் மூழ்கி ஒருவர் முத்தெடுக்கிறாரோ அந்த ராகத்தையே பெயரோடு இணைத்துச் சொல்கிற மரபு அந்தக் காலத்திலேயே இருந்துள்ளதை அறியலாம். அடாணா ராகத்தை அசாத்தியமாகப் பாடியதால் ‘அடாணா’ அப்பய்யர், நாகசுரத்தில் தோடி வாசித்து எல்லோரையும் கசிந்துருக வைத்ததால் ‘தோடி’ ராஜரத்தினம் பிள்ளை, நாராயண கௌளை ராகம் பாடுவதில் தேர்ந்து விளங்கியதால் ‘நாராயண கௌளை’ குப்பய்யர், பேகடா இசைத்துப் புகழ்பெற்ற ‘பேகடா’ சுப்ரமணிய ஐயர் என்று பிற்காலத்திலும் ராகத்தை அடிப்படையாக வைத்துச் சிறப்புப் பெயர் பெற்ற மரபு தொடர்ந்துகொண்டே இருந்தது. (‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தின் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் கதாபாத்திரத்தை இங்கே நினைவுகூரலாம்).

பாடும் முறையை வைத்தே சிறப்புப் பெயர் பெற்ற இசை மரபும் உண்டு. நுட்பமான தாள அமைப்புகளில் திருப்புகழ் பாடி, சந்தப்பாவலப் பெருமான் எனப் பெயர் பெற்ற அருணகிரிநாதர், உடலின் மூலாதாரத்திலிருந்து கம்பீரமான ஒலியை உண்டாக்கி ஓங்காரமாகப் பாடும் முறையான கனமார்க்கத்தில் வல்லமை பெற்ற ‘கனம்’ கேசவய்யா, காவடி எடுத்து ஆடுபவர் கால்பெயர்த்து வைப்பதைப் போன்ற உணர்ச்சியில் காவடிச்சிந்து இசைத்த ‘காவடிச்சிந்து’ அண்ணாமலை ரெட்டியார் என்று பாடும் முறையிலும் சிறப்புப் பெயர் பெற்ற இசை மரபும் தொடர்ந்து இருந்துவந்தது. இப்படி, ராகத்தின் பெயரைச் சிறப்புப் பெயராக வைத்தல், பாடும் முறையைப் பெயரோடு பொருத்துதல், இசைக் கருவியின் பெயரையே பட்டப் பெயராகச் சூட்டுதல் என்பன போன்ற இசைப் பண்பாட்டை நமக்கு வழங்கியவர்கள் ஆதிப் பழங்குடியின மக்கள்தான் என்பதற்கு, அவர்களின் உயிரோட்டமுள்ள இசை வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் விசில் கிராமம் என அழைக்கப்படும் கிராமம்தான் கோங்தாங். மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளுக்குள் இருக்கும் கோங்தாங் கிராம மக்களின் பண்பாடுதான் ஜிங்க்ர்வாய் இயாவ்பே எனும் தனித்துவமான இசை மரபு. மேகாலயாவில் காசிப் பழங்குடியின மக்கள் வசிக்கும் கோங்தாங் கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தையின் தாய்ப் பெயரோடு சேர்த்து ஒரு இசைக் கோவையையும் அடையாளமாகச் சூட்டுகிறார்கள். ‘‘தாயன்பின் வெளிப்பாடாக, தாயின் இதயத்திலிருந்து எழும் தாலாட்டுதான் இந்த இசைக் கோவை’’ என்கிறார்கள் அந்தப் பழங்குடியினர். ஒவ்வொரு குழந்தைக்கும் 14 முதல் 18 விநாடிகள் வரை நீண்டு ஒலிக்கக்கூடிய இசைப் பெயரைச் சூட்டி மகிழ்கிறார்கள். ஒவ்வொரு இசைக் கோவையும் மற்றொன்றைப் போல் இல்லாமல், தனித்துவமானது என்பது குறிப்பிட வேண்டிய அம்சம். கோங்தாங் கிராமவாசிகள் ஒருவரை ஒருவர் இசைக் குறிப்புகளாலேயே அழைத்துக்கொள்கின்றனர்.

இன்று நம்முடைய பெயர்களை வெறும் அதிகாரத் தேவைகளுக்கு மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், காசிப் பழங்குடியின மக்கள் இசைக் குறிப்பையே தங்கள் அடையாளமாக்கிக்கொள்கின்றனர். வாழ்வு முழுமைக்கும் அந்த இசை மரபு தொடர்கிறது. அவர்களில் யாராவது ஒரு மனிதர் இறந்துபோனால் அந்த இசைக் குறிப்பும் அழிந்துவிடுகிறது. மறுபடியும் அந்த இசைக் கோவையை வேறு யாருக்கும் பெயராகச் சூட்டவே மாட்டார்களாம்.

இசையையே பெயராகச் சூட்டும் மரபுதான் ஜிங்க்ர்வாய் இயாவ்பே என்னும் மரபு. ஒரு சமூகத்தின் ஆதித் தாயின் நினைவாக, அவளைக் கெளரவப்படுத்தும் விதமாகப் பாடப்படும் இசைக் கோவைதான் காசிப் பழங்குடியின மக்களின் இசைப் பண்பாடு. இவர்களின் இசை மரபு குறித்து ‘என் பெயர் இயூவ்’ (My Name Is Eeoow) எனும் தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார் ஓய்னெம் டோரென். உலகச் சுற்றுலா அமைப்பின் மூலம் சிறந்த சுற்றுலா கிராமம் எனவும் கோங்தாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெயர்களால் அல்லாமல் இசைக் கோவையாலேயே அறியப்படுகிற காசிப் பழங்குடியினரின் கோங்தாங் கிராமம், இந்தியாவின் பாடும் கிராமம் என்றும் போற்றப்படுகிறது.

நம் தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதிகளில் வாழ்கிற ‘பளியர்’ எனும் மலைவாழ் பழங்குடியின மக்கள், தங்கள் இசையால் வன தேவதைகளையே தங்களின் வாழ்விடத்துக்கு வரவைத்துப் பேச முடியும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு பழங்குடியினரும், அவர்களுக்கென்று ஒரு தனித்த இசை அடையாளம் கொண்டுள்ளனர். அந்த அடையாளம்தான் அவர்களின் ஆதி மரபை நமக்குச் சுட்டுகிறது. அந்த இசையைப் பழங்குடியினரிடத்தில் இன்றும் நாம் காணலாம்.

துக்கமோ மகிழ்ச்சியோ எதுவானாலும் ஊர் கூடித் தங்களின் இசை மரபை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்களாகத்தான் ஒருகாலத்தில் நாமும் இருந்தோம். இன்று திரைப்பாடல்களே ஏகாதிபத்தியம் செய்கின்றன. ஆதிப் பழங்குடியின மக்கள் நமக்குக் கொடுத்த இசைப் பண்பாட்டை மீட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இசையால் உலகை ஆக்க வேண்டிய தேவையும் உள்ளது.

கவிஞர் பிரளயனின் வரிகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன.

பாடுவோமே நாம் பாடுவோமே நாம்

தாளம் தட்டிப் பாடுவோமே நாம்

பாடல் ஒலிக்காத காரிருள் காலத்தில்

இருளைக் கிழிக்கப் பாடுவோமே நாம்.

- ‘இராஜபாளையம்' உமாசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி சேர்ந்திசைக் குழுவின் பயிற்றுநர், அரசுப் பள்ளி இசையாசிரியர். தொடர்புக்கு: umas12340@gmail.com

ஜூன் 21 - உலக இசை நாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in