

புலம்பெயர்ந்து அயலகத்தில் வாழும் தமிழர்களைப் பற்றியும், அவர்களின் தமிழ்ப் படைப்புகளையும் பங்களிப்புகளைப் பற்றியும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் விரிவான அறிமுகம் இல்லை. 1980-களுக்குப் பிறகு, உள்நாட்டுப் போராட்டம் காரணமாக இலங்கைத் தமிழர்களும், கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். தமிழர்கள் வாழும் அந்தந்த நாடுகளில் ஆட்சி அதிகாரத்திலும் கல்வியிலும் மேம்பட்டு நிற்கின்றனர். தாயகத்துக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டால், தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிய வேண்டும் என்ற கவலையில், தமிழைப் பயிற்றுவிக்க அங்கு தொடங்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகள், இன்று புதிய வேகத்துடன் புதுப்புதுப் பாடத்திட்டங்களுடன் நடத்தப்படுகின்றன.
அமெரிக்கத் தமிழ் அகாடமி (ATA), கலிஃபோர்னியா தமிழ் அகாடமி, ஸ்காண்டினேவிய நாடுகளில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை, அனைத்துலகத் தமிழ்க் கல்வி, பண்பாடு, அறிவியல் மேம்பாட்டு இணையம் (ஜெர்மனி), ஜெர்மன் தமிழாலயங்கள், ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளிகள், மொரீஷியஸ் மகாத்மா காந்தி தேசியக் கழகம், சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், மலேசிய அரசின் தமிழ்க் கல்விப் பிரிவு போன்றவை குறித்து நம் தமிழகத்து ஆசிரியர்கள், மாணவர்கள் யாதொன்றும் அறிவதற்கு வாய்ப்பில்லை. லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவிப்பதை இங்குள்ள கல்வி வல்லுநர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இலங்கைத் தமிழ்க் கல்வி குறித்து நமக்கு அதிகம் தெரியாது. கனடாவில் வெளிவரும் தமிழ் இதழ்கள், நூல்கள், தமிழ்க் கல்வி குறித்தோ நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இல்லை.
சுவிட்சர்லாந்தில் தமிழ்க் கல்விச் சேவை அமைப்பு சிறப்பாகச் செயல்படுகின்றது. சுவிட்சர்லாந்து அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அந்நாட்டுக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் இது செயல்படுகின்றது. இவ்வமைப்பு வழியாக சுவிட்சர்லாந்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மழலையர் வகுப்பு முதல் 12 வரையிலான வகுப்புகளில் தமிழ் படிக்கிறார்கள். இப்பள்ளிகளில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக கந்தசாமி பார்த்திபன் செயல்படுகிறார். இப்பள்ளி களுக்கெனப் பாடத்திட்டம், பாடநூல்கள், வகுப்புகள், தேர்வுகள், மதிப்பீடு, பட்டமளிப்பு போன்றவை உலகத் தரத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதற்காக சனி, ஞாயிறுகளில் ஊதியம் இல்லாமல் பயிற்றுவிக்கும் பெரும் பணியைச் செய்துவருகிறார்கள். பள்ளிகளில் பெறும் மதிப்பெண்களை அந்தந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரும்போது ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு விதிகளை உருவாக்கித் தாய்மொழிக் கல்விக்குப் பிற நாடுகளில் செல்வாக்கு சேர்க்கிறார்கள்.
அயல்நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற தமிழர்கள், அந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொண்டு, அவற்றின் இலக்கியங்களை மொழிபெயர்த்தும் வருகின்றனர். தருமன் தர்மகுலசிங்கம் டென்மார்க்கின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆண்டர்சனின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டென்மார்க்கில் வாழும் ஜீவகுமாரன் டேனிஸ், ஆங்கிலம் – தமிழ் மருத்துவ அகராதியை உருவாக்கியுள்ளார். இரண்டு மாதக் குழந்தையாக ஜெர்மனியில் அகதியாக நுழைந்த செந்தூரன் படிப்படியே பள்ளிப்படிப்பு, பல்கலைக்கழகப் படிப்பு முடித்து, ஜெர்மன் மொழியில் எழுதிய ‘Vor der Zunahme der Zeichen’ நாவல் உலக அளவில் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.
வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் அ.முத்துலிங்கம், சேரன், இ.பத்மநாப ஐயர், ஷோபாசக்தி, முருகபூபதி, கி.செ.துரை, ஜீவகுமாரன், பாலேந்திரா, சந்திரிகா சுப்பிரமணியன், முருகர் குணசிங்கம், இந்திரபாலா, மாத்தளை சோமு, நோயல் நடேசன், உமாபாலன், பாலசுந்தரம் இளையதம்பி, அரவிந்த் அப்பாதுரை, நாகரத்தினம் கிருஷ்ணா, மு.க.சு.இளங்குமரன் (வெற்றிமணி), ஆழியாள், சந்திரலேகா வாமதேவா, ஊடகவியலர் த.இரவிச்சந்திரன், வ.ந.கிரிதரன், குரு.அரவிந்தன், ஜெயபாரதன், அகிலேஸ்வரன் உள்ளிட்ட படைப்பாளிகள், தமிழ் இலக்கியச் செழுமைக்கு வெவ்வேறு வகையில் பங்களித்துவருகின்றனர். இவர்களின் பங்களிப்புகள் கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அயலகத்தில் அச்சு ஊடகங்களும் இணையதள ஊடகங்களும் பெரும்பங்காற்றுகின்றன. கனடாவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் செந்தியின் ‘தமிழன் வழிகாட்டி’ என்னும் கையேடு, கனடாவில் உள்ள அனைத்துப் பிரமுகர்களின் பணிகளையும் அறிமுகப்படுத்துகிறது. தொடர்பாடலுக்கு உரிய வகையிலும் பேருதவி புரிகிறது. ‘தாய்வீடு’ (கனடா), ‘அக்கினி குஞ்சு’ (ஆஸ்திரேலியா), ‘அகரம்’ (ஜெர்மனி), ‘தமிழ் முரசு’ (சிங்கப்பூர்), ‘மக்கள் ஓசை’ (மலேசியா), ‘செம்மொழி’ (சிங்கப்பூர்), ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ (சிங்கப்பூர்), ‘உதயன்’ (கனடா), ‘வீரகேசரி’, ‘ஞானம்’ (இலங்கை) உள்ளிட்ட இதழ்களின் பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.லண்டனில் ஒளிபரப்பாகும் ஐ.பி.சி. தொலைக்காட்சி, ஐ.எல்.சி. வானொலி, ஐரோப்பியத் தமிழ் வானொலி (ETR FM), ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலி, ஆஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். வானொலி (இது அரசு வானொலி), கனடியத் தமிழ் வானொலி (CTR) என்று தொலைக்காட்சி நிறுவனங்களும் வானொலி நிறுவனங்களும் தமிழ்ச் சேவை வழங்குகின்றன. இணையதளங்கள் வழியாக உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழ் நிகழ்வுகளைக் கேட்கவும்/ பார்க்கவும் முடியும்.
தமிழ் அனைத்துலக மொழியாக வளர்ந்துள்ளது. தமிழ் படித்தவர்களுக்கு அயல் நாடுகளில் பணிபுரிய நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழும் ஆங்கிலமும் நன்கு கற்றவர்கள் இந்த முயற்சியில் இறங்கலாம். சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணிக்கு அவ்வப்போது தேவையானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சீனா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிய இயலும். போலந்தின் வார்சா பல்கலைக்கழகம், சுவீடன் உப்சலா பல்கலைக்கழகம், சீனப் பல்கலைக்கழகம் போன்றவை தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன. தமிழின் பரப்பு விரிவானது, உலகெலாம் விரிந்தது. அதை தமிழ்நாட்டுக்குள் முடக்கிவிட வேண்டாம்!
- மு.இளங்கோவன், தமிழ்ப் பேராசிரியர். தொடர்புக்கு: muelangovan@gmail.com