

மூத்த படைப்பாளி கு.சின்னப்பபாரதி, கடந்த13.06.2022 அன்று நாமக்கல்லில் காலமானார். 1935-ல் அன்றைய சேலம் மாவட்டம் பொன்னேரிப்பட்டி கிராமத்தில் பிறந்த சின்னப்பபாரதி, இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’, ‘தலைமுறை மாற்றம்’, ‘சுரங்கம்’, ‘பாலைநில ரோஜா’ ஆகிய நாவல்களை எழுதினார். 13 மொழிகளில் அவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் தாண்டி அவரை நினைவுகூர இன்னொரு முக்கியமான முகம் அவருக்கு உண்டு. அது நாட்டுப்புறவியல் சார்ந்த அவரது ஆர்வமும் பங்களிப்பும். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து, முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்ட அந்தோனியோ கிராம்ஷி நாட்டுப்புற வழக்காறுகளின்மீது மார்க்ஸியர்களின் கவனத்தைத் திருப்பினார். உழைக்கும் மக்களின் ‘வாழ்க்கைக் கண்ணோட்டம்’ நாட்டார் வழக்காறுகளில் பொதிந்திருப்பதாகவும் முற்போக்கு மற்றும் பிற்போக்குக் கருத்துகளின் அருங்காட்சியகமாக அவை இருப்பதாகவும் கிராம்ஷி குறிப்பிட்டார். 1961-ல் ஜீவாவின் முன்முயற்சியில் கோவையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றபோது, நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக நா.வானமாமலையும் அதன் உறுப்பினர்களாக கு.சின்னப்பபாரதி, ‘டேப்’ சடையப்பன், வாழப்பாடி சந்திரன், எஸ்.எஸ்.போத்தையா, சிவகிரி எஸ்.எம்.கார்க்கி, டி.மங்கை ஆகியோர் இருந்தனர்.
இப்படி நாட்டுப்புற வழக்காறுகள் சேகரிப்பில் ஈடுபட்ட கு.சின்னப்பபாரதியின் படைப்புகளில் அதன் தாக்கம் வெளிப்பட்டது. மக்களின் வாழ்க்கை, வட்டாரச் சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றைத் தன் நாவல்களில் தவறாமல் இடம்பெறச் செய்தார். ‘சுரங்கம்’ நாவலை எழுதுவதற்காக அவர் மேற்கு வங்கம் சென்று, அங்கு சுரங்கத் தொழிலாளர்களுடன் தங்கியிருந்த நாட்களில், மக்களின் வாழ்க்கைச் சடங்குகளை உற்றுநோக்கித் தன் நாவலில் பதிவுசெய்து கதைக்கு உயிர்ப்பூட்டினார். ‘சங்கம்’ நாவலில் கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை மிக விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
சின்னப்பபாரதியின் சொந்த வாழ்க்கை நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சமாகும். அடிமைப்பட்ட இந்தியாவில் பிறந்து, விடுதலை நெருங்கிக்கொண்டிருந்த காலத்து வெக்கையையும் வீச்சையும் அனுபவித்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். காந்திய யுகத்தில் இளைஞனாக வாழ்ந்து, 1947-க்குப் பின் நேரு யுகத்தில் காங்கிரஸின் 1956 ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் ஏமாற்றமடைந்து, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். 16-17 வயதில் தொடங்கிய அவரது பொதுவாழ்வு 70 ஆண்டு காலம் நீடித்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கிய காலத்திலும் கட்சியுடன் உறுதியாக நின்று பணியாற்றியவர். மேஜை எழுத்தாளராக அல்லாமல், நேரடியாகக் கட்சிப் போராட்டங்களில் பங்கேற்றும் தலைமை தாங்கியும் இயங்கிய ஆளுமையாக வாழ்ந்தவர். 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டவர். சோவியத் ஒன்றியம், சீனா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்குப் பயணித்து, எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடியவர். 1930-40-களின் லட்சியவாத கம்யூனிஸ்ட்டாக இறுதிக் காலம் வரை கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர். இது அவரது முக்கிய அடையாளங்களில் ஒன்று. ஸ்டாலின் காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்மீது சோவியத் படையெடுத்தபோது, உலகெங்கிலும் பல எழுத்தாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு விலகினார்கள். 90-களில் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதும், தியானென்மென் சதுக்க நிகழ்வின்போதும் பலர் கட்சியை விட்டு விலகினார்கள். எந்த சுனாமிக்கும் அசையாமல், முதலாளித்துவ ஊடகங்களின் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பரப்புரைகளுக்குச் செவிசாய்க்காமல், கம்யூனிஸ்ட் கட்சியுடன் இறுதிநாள் வரையிலும் உறுதியுடன் நின்றவர் சின்னப்பபாரதி.
அவருடைய கோபம் இயக்கம் அறிந்த ஒன்று. யார் மீதும் தயவு தாட்சண்யமின்றி உரத்த குரலில் விமர்சனத்தை முன்வைப்பார். அதே சமயம், தன் கருத்து தவறென உணரும்போது, மனம் திறந்து அவர் தன்னைவிட வயது குறைந்தவரிடத்தும் மனத்தடையின்றி மன்னிப்புக் கேட்பதைப் பல முறை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இது அவரது அபூர்வமான குணங்களில் ஒன்று. மேடையில் இருப்பதைவிடக் கூட்டத்தில் ஒருவராக இருப்பதையே அதிகம் விரும்பினார். சாகித்ய அகாடமி விருதுக்கான சிறு ஏக்கம் அவரிடம் இருந்தது எனக்கு வியப்புதான். அவரே ஓர் அறக்கட்டளை அமைத்துப் பலருக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிவந்தாலும், அந்த ஏக்கம் அவரிடம் இருந்ததை அறிவேன். சாகித்ய அகாடமி தமிழ்நாட்டுப் பிரிவைத் தொடங்கி மூத்த படைப்பாளிகளையெல்லாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கௌரவித்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம்.
பி.சீனிவாச ராவ், சங்கரய்யா, ஆர்.கே.கண்ணன் போன்ற முன்னோடி கம்யூனிஸ்ட்டுகளுடன் நெருங்கிப் பழகும் பெருவாய்ப்பைப் பெற்றவர் சின்னப்பபாரதி. தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவல் முன்வைத்த சோஷலிஸ யதார்த்தவாதக் கோட்பாட்டைத் தன் படைப்புகள் வழியே இன்னும் வளர்த்தெடுத்தவர் அவர். பிற்காலத்தில் ரகுநாதனே சோஷலிஸ யதார்த்தவாதத்தைக் கைவிட்டபோதும் சின்னப்பபாரதி கைவிடாமல் உயர்த்திப் பிடித்திருந்தார். இலக்கியத்துக்குப் பயன்பாட்டு முக்கியத்துவம் அளிப்பதைத் தூய இலக்கியவாதிகள் ஏற்பதில்லை. ஆனால் சின்னப்பபாரதி “என்னைப் பொறுத்தமட்டில் எழுத்து என்பது பணம் சேர்க்கும், புகழ் ஈட்டும் சாதனம் எனக் கருதவில்லை... சகல ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றும் போராட்டத்தில் எனது எழுத்தும் ஒரு தலையீடாக இருக்க விரும்புகிறேன்… வறுமை என்பது மனித குலம் இதுவரை உருவாக்கிய அனைத்து மேன்மைகளையும் களங்கப்படுத்தும் அவமானம் ஆகும். அறிவுலகம் நாண வேண்டிய அசிங்கமும் ஆகும்” என்று உரக்கப் பிரகடனம் செய்து, அப்படியே எழுதி வாழ்ந்தவர் சின்னப்பபாரதி.
- ச.தமிழ்ச்செல்வன், மூத்த எழுத்தாளர். தொடர்புக்கு: tamizh53@gmail.com