மனச்சிதைவு: பராமரிப்பாளர்கள் பங்களிப்பு என்ன?

மனச்சிதைவு: பராமரிப்பாளர்கள் பங்களிப்பு என்ன?
Updated on
3 min read

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், மனநலரீதியில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பயம், பதற்றம், குழப்பம், விரக்தி, கோபம், மனஅழுத்தம், மனச்சோர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம். பல்வேறுபட்ட மனநோய் வகைகளில் ‘மனச்சிதைவு’ (schizophrenia - ஸ்கிசஃப்ரீனியா) என்ற தீவிரமான நோயைப் பற்றி அறிந்திருப்பவர்கள் சொற்பமே. குடும்பத்தால் கைவிடப்பட்ட மனநோயாளிகளில் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம்.

மனச்சிதைவு நோயால் உலகளவில் 2.10 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2015-16-ல் நடத்தப்பட்ட தேசிய மனநலக் கணக்கெடுப்பில், 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 10.6% நம் நாட்டில் ஏதாவது ஒருவிதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 15 கோடி பேருக்குச் சிகிச்சையும் ஆலோசனை தேவையும் இருக்கிறது என்றும் ஆனால் இவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் எந்த விதமான சிகிச்சையும் பெறவில்லை என்ற தகவலையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதற்குக் காரணம் அறியாமை, குடும்பச் சூழ்நிலை, கல்வியறிவு, பொருளாதாரச் சூழ்நிலை, போதிய விழிப்புணர்வு இல்லாதது என்று பல காரணங்கள். இந்த ஆய்வின்படி, இந்திய மக்கள்தொகையில் மனச்சிதைவு நோயின் பாதிப்பு தற்போதைய நிலையில் 0.5 சதவீதமாகவும், எதிர்காலத்தில் 1.4 சதவீதமாகவும் உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறது.

‘Schizophrenia’ என்ற சொல்லை 1910-ல் சுவிஸ் மனநல மருத்துவர் ஆய்கன் புளோலர் (Eugen Bleuler) உருவாக்கினார். இதற்கு மனதைப் பிளத்தல் என்பது அர்த்தம். மனச்சிதைவு நோய் என்பது ஒருவகையான முதிர் மனநோய் (Psychosis). முதிர் மனநோய்களுள் மிகப் பரவலாக அதிக நபர்களைப் பாதிப்பது மனச்சிதைவே.

மனநோய்களைப் பற்றிய புரிதல், விழிப்புணர்வு இல்லாததால், மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்கள், சிந்தனை, பேச்சு, அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். ஆகவே, நோயின் அறிகுறிகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை: தனக்குத் தானாகப் பேசுவது - சிரிப்பது, சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்.

எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, ஒழுங்கற்ற நடத்தை, முணுமுணுத்தல், பிரமைகள், மாயத் தோற்றங்கள், அசாதாரண உணர்வுகள், விசித்திரமான நம்பிக்கைகள், சந்தேகங்கள் போன்றவையும் தன்னை யாரோ உளவு பார்க்கிறார்கள், தன்னைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள், தன்னைக் கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், தன்னை யாரோ எப்போதும் பின்தொடர்கிறார்கள், தனக்கும் தன் குடும்ப நபர்களுக்கும் கெடுதல் செய்ய முயல்கிறார்கள் என்பது போன்ற அச்சமும் இருக்கும்.

இதனால் அதிக அச்சம் ஏற்பட்டு, பல் துலக்குவது, குளிப்பது, முகம் கழுவுவது போன்ற அன்றாட விஷயங்களைக்கூடத் தவிர்ப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு காணப்படும். அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கலாம் என்றாலும் 15-லிருந்து 30 வயதில் அதன் அறிகுறிகள் வெளிப்படும். மனித மூளையில் ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்குத் தகவல் அனுப்பும் பணியை ‘டோபமைன்’ (Dopamine) என்ற அமிலம் செய்கிறது.

ஆனால், இந்த அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போதும், சமநிலையை மீறும்போதும் மனிதர்களின் எண்ணங்கள், செயல்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்படும். ஒருசிலருக்கு மரபணுரீதியாகவும் இந்நோய் வரலாம். பெரும்பாலும் இவை இரண்டும்தான் நோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்.

மனநோயும் மற்ற நோய்களைப் போல ஒரு நோய். முற்பிறவிப் பாவங்களாலோ, கடவுளின் சாபத்தாலோ, செய்வினை, மந்திரம் செய்துவைத்ததாலோ மனநலப் பிரச்சினைகள் வருவதில்லை. அது மூளையில் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் பிரச்சினை. அதை முதலில் குடும்ப நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மனநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடனேயே உடனடியாக மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், உளவியலர் போன்றவர்களிடம் நோயாளியை அழைத்துச்செல்ல வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், நோயின் அறிகுறிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால், பெரும்பாலானோர் கோயில், பூஜை, பேய்விரட்டுதல் என்று காலத்தை விரயமாக்கிவிட்டு, நோயின் அறிகுறிகள் அதிகமான பிறகு மருத்துவரிடம் அழைத்துவருபவர்கள்தான் அதிகம்.

மனச்சிதைவு நோயாளியைப் பராமரிப்பது சவாலான விஷயமே என்றாலும் பராமரிப்பாளர்கள் முதலில் நோயைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு மனச்சிதைவு இருக்கிறது என்பதை மனச்சிதைவு நோயாளி ஏற்றுக்கொள்வதில்லை. மருத்துவரிடம் போக வேண்டும் என்ற எண்ணமும் வராது.

குடும்ப நபர்கள் மாத்திரை கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். நோயாளியுடன் வாக்குவாதங்களில் ஈடுபடவோ அவர்களின் நடத்தையைச் சரிசெய்யவோ முயல்வது கூடாது. இது சரி, இது தவறு என்று புரிந்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதால், அது அவர்களை மேலும் கோபமடைய வழிவகுக்கும்.

நோயாளி மருந்துகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆகையால், பரிந்துரைக்கப்பட்டபடி மருந்துகள் உட்கொள்வதை உறுதிப்படுத்துவது பராமரிப்பாளரின் பொறுப்பு. மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் மருந்துகளை அதிகரிக்கவோ குறைக்கவோ நிறுத்தவோ கூடாது. பக்க விளைவுகள் இருந்தால் மருத்துவரிடம் தயங்காமல் சொல்ல வேண்டும்.

நோயாளியின் தற்கொலை எண்ணங்களையோ தற்கொலை முயற்சிகளையோ ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. அந்தச் சூழ்நிலையில் உங்களால் நோயாளியைக் கையாள முடியாவிட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். நோயாளி கிளர்ச்சியடையும்போது, கூர்மையான ஆயுதங்களோ ஆபத்தான பொருட்களோ அருகில் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் நோயாளியின் பிரச்சினைகள், நடத்தையைப் பற்றி விவாதிக்கக் கூடாது.

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் நோய் சரியாகிவிடும் என்று தவறாக நினைத்துக்கொண்டு, நோய் இருப்பதை மறைத்துத் திருமணம் செய்துவைக்கக் கூடாது. திருமணத்துக்குப் பிறகு துணைக்கு இது தெரியவரும்போது பெரும் ஆபத்து ஏற்படும்.

அது நோயாளியையும் குடும்பத்தாரையும் மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். ஆகவே, நோய் இருப்பதைத் தெரிவித்துச் சம்மதம் பெற்ற பின்பு திருமணம் செய்துவைப்பது நல்லது. திருமணத்தைப் பற்றி மருத்துவரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும்.

மனநல சிகிச்சையில் மறுவாழ்வு ஒரு முக்கியப் பகுதியாகும். ஒரு நபரை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவந்து யாரையும் சார்ந்திருக்காமல் இயங்க வழிவகுப்பதே மறுவாழ்வு. ஆகவே, நோயாளியின் குடும்பம், உறவுகள், சமூகம் என்று அனைவரும் சேர்ந்து ஆதரவு அளித்தால் மனச்சிதைவு நோயாளிகளாலும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

- பி.சந்திரசேகர், உதவிப் பேராசிரியர், மனநலத் துறை, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி. தொடர்புக்கு: pjcsekar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in