

மு.கருணாநிதி 1972-ல் உருவாக்கிய ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்’, தற்போதைய திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த அமைப்பின் நடவடிக்கைகள் வாழ்விட உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதைக் கூறி ‘கலையும் கருணாநிதியின் கனவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ்’ நாளிதழில் 27 செப். 2021 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அரசுத் தரப்பில் இக்கட்டுரை எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குடியிருந்தவர்கள், அதே இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளில் குடியேற ரூபாய் ஒன்றரை லட்சம் கேட்கும் அரசாணையை ரத்துசெய்ய வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுமே என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாப்பதுதான் அரசாங்கத்தின் கடமை என்பது உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. மக்களின் போராட்டம், அதில் பொதிந்துள்ள நியாயத்தின் காரணமாக அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் கொள்கை முடிவுகளை மாற்றுவதற்கு முன்வந்தனர்.
ரூபாய் ஒன்றரை லட்சம் என்பதற்கு மாறாக, மாதம் ரூ.250 என 20 ஆண்டுகள் செலுத்தும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதற்குக் காரணமாக ‘மக்களின் போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் பணத்தை வசூலிக்க இயலவில்லை’ என்பது அரசாணையின் ஓரிடத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடவும்பட்டுள்ளது.
அந்த வகையில், மக்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அரசாணையைத் திரும்பப் பெற்று, தனது ஜனநாயகப் பண்பை தமிழக அரசு வெளிப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை சென்னை மாநகரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்வதற்குக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, அப்பகுதியிலேயே தங்கிப் பல குடும்பங்கள் போராடிவந்தன.
அவர்களுக்கு கே.பி. பார்க் திட்டப் பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்க வேண்டியதன் நியாயங்களை எடுத்துரைத்து, ‘இந்து தமிழ்’ நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தக் கழிவையும் சுமந்து ஓடும் கூவம் ஆற்றில் இறங்கி, தங்கள் வாழ்விட உரிமைக்காக அம்மக்கள் மழை, வெயில், இயற்கைப் பேரிடர்கள் என்று எல்லா இன்னல்களையும் எதிர்கொண்டு போராடினார்கள்.
சுமார் 2,000 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து பெரும்பாக்கத்துக்குக் கடந்த ஆட்சியில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுவிட்ட பிறகு, போராடும் 178 குடும்பத்தினருக்கு மட்டும் எப்படி கே.பி. பார்க் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க முடியும் என்று அரசுத் தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது.
புளியந்தோப்பு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட 1,056 குடியிருப்புகள் கூவம், அடையாறு ஆற்றின் கரையோரம் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தியபோது மறுகுடியமர்வு செய்ததற்காகக் கட்டப்பட்டவை என அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எழுத்துபூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.
அதற்கு இணங்க கூவம் நதியோரம் நூற்றாண்டுகளாகக் குடியிருந்து நகரின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுவரும் மக்களுக்குக் குடியிருப்புகள் வழங்குவது எப்படித் தவறாகும்? அவரவர் வசிக்கும் பகுதியிலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை உருவாக்கிய கருணாநிதியின் லட்சியத் திட்டத்தை மேம்படுத்துவதுதான் தற்போதைய அரசின் கடமை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பல முறை சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
பெரும்பாக்கம் பகுதியில் மறுகுடியமர்வுக்குப் போடப்பட்ட அரசாணை ரத்துசெய்யப்பட்டு, அவர்கள் வசித்த பகுதிக்கு இரண்டு கி.மீ.க்கு உள்ளேயே கே.பி. பார்க் குடியிருப்பில் குடியிருக்கும் அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இரண்டு அரசாணைகளை ரத்துசெய்து, மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிப் புதிய அரசாணைகளை வெளியிட்டு, கண்ணியமிக்க மறுகுடியமர்வு சார்ந்த செயல்பாடுகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வாழ்விட உரிமை சார்ந்த பிரச்சினைகளில், ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் உழைக்கும் மக்களின் குடியிருப்புகள் இடித்துத் தள்ளப்படுகின்றன.
சென்னையில் 40 கி.மீ. தொலைவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுவருகின்றன. இதற்கு ஏற்றவாறு நகரின் உட்பகுதியில் பல தலைமுறைகளாகக் குடியிருந்த மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, மேற்கண்ட பகுதிகளில் புதிதாகக் குடியமர்த்தப்படுகின்றனர்.
மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் குடியிருப்பு இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தார். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கூடுதல் மனச்சுமையுடன், ஆழ்ந்த துயரத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டு, இந்த சம்பவமே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்’’ என உளபூர்வமாகத் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், தமிழக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டியுள்ளது. முதலாவதாக, கடந்த 20 ஆண்டுகளாக மறுகுடியமர்வு நடத்தப்படும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற பகுதி மக்களிடையே எத்தகைய சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே அரசின் மறுகுடியமர்வுக் கொள்கை இறுதிசெய்யப்பட வேண்டும். அதுவரை நகரத்தை விட்டுப் பல கி.மீ. தூரத்துக்கு அப்பால் மறுகுடியமர்த்தப்படும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும். புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதும் நிறுத்தப்பட வேண்டும்.
இரண்டாவதாக, ஆக்கிரமிப்புகள் என அரசாலும் நீதிமன்றங்களாலும் வகைப்படுத்தப்பட்டுள்ள குடியிருப்புகளின் பட்டியல் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். எந்தெந்தக் குடியிருப்புப் பகுதிகள் நீர்நிலைகளில் உள்ளன எனவும், மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டிய பகுதிகள் எவை எனவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்கள் பங்கேற்பும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பும் இல்லாமல் முடிவுசெய்யப்படும் திட்டங்களுக்கு மாற்றாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்கும் சூழலை உருவாக்க வேண்டியுள்ளது.
மூன்றாவதாக, தமிழகத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை உறுதிசெய்வதற்கு உகந்த இடங்களை அடையாளம் காண வேண்டும். அத்தகைய பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கான வீடுகளை உறுதிசெய்யும் கருணாநிதியின் கனவுத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
- ஜி.செல்வா, தொடர்புக்கு: selvacpim@gmail.com