

தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்.
ஆட்சியர் செய்த குற்றம் என்ன? இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்! “சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர், ஒரு மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும் இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்த ‘சர்ச்சை’யை ஏற்படுத்தியுள்ள பாஜகவின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர், அந்த நூலைப் பற்றிய தனது அறியாமையைத் தமிழக முதல்வருக்கு 11.6.2022 அன்று எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் – அந்த நூலின் தலைப்பை ‘அறியப்படாத கிருஸ்தவம்’ என்று இரு இடங்களில் குறிப்பிட்டுள்ளதன் மூலம். அந்த நூலைப் படித்ததில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் - அந்த நூலின் உள்ளடக்கத்தைப் பற்றித் தான் அறிந்துகொண்டதெல்லாம் கூகுளிலிருந்துதான் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, கவிதா ராமு தனது தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில்தான் மேற்கூறிய பதிவை இட்டுள்ளாரே தவிர, ‘மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வமான’ ஃபேஸ்புக் பக்கத்தில் அல்ல. எனவே, தனிப்பட்ட முறையில் ஒரு நூலைப் பற்றியோ அதை முதல்வருக்குப் பரிசளித்தது பற்றியோ இந்தியக் குடிமக்களில் ஒருவர் என்ற முறையில் – இந்திய அரசமைப்பின் வரம்புக்கு உட்பட்டு – கருத்து சொல்வதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும். இப்படிக் குற்றம்சாட்டுகிறவர் அந்த நூலாசிரியர் எழுதியுள்ள முன்னுரையையாவது படித்திருக்க வேண்டும். தமிழகத்தில் இன்றைய முக்கியமான பெண்ணியலாளராகவும் கள ஆய்வுகள் மூலம் வரலாற்று நூல்களை எழுதியவராகவும் இருக்கிறார்.
வரலாற்றால் இருட்டடிப்பு செய்யப்பட்ட, ஆனால் கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், சமூகச் சீர்திருத்தம் போன்ற பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக இருந்த பெண்களைப் பற்றிய விவரங்களை (இவர்களில் மிகமிகப் பெரும்பாலோர் இந்துப் பெண்கள்) வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் ‘முதல் பெண்கள்’ என்ற நூலையும் நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் “நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவின் ஒரு துளி” என்று அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். மேலும், “என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால், அது என் மதம், சாதி சார்ந்த அடையாளமல்ல” என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை, “கிறிஸ்தவம் என்ற மதம் இம்மண்ணில் வெளியிலிருந்து வந்ததே என்பதை மறுப்பதற்கில்லை…
இதுதான் என் மண். இந்த நிலம் என் மூதாதையர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர் மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்… அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்… தமிழக தேவாலயங்களுக்கான ‘கைடு புக்’ அல்ல இந்நூல்.
மக்களின் நம்பிக்கை என்பதிலிருந்து விலகி நின்று, பகுத்தறிவாளராக, விமர்சனக் கண்ணோட்டத்துடன் இந்த நூலை அணுகியிருக்கிறேன். இது கிறிஸ்தவ பக்தி நூலும் அல்ல. கிறிஸ்தவம் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் இறுதி இரு அத்தியாயங்களை வாசித்துவிட்டு, முதலில் இருந்து தொடங்குதல் நலம்”.
தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகம், சைவம், வைணவம், சனாதன தர்மம் ஆகியவற்றைப் போலவே கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியனவும் வேரூன்றியுள்ளன. இவற்றுக்குப் பல நூற்றாண்டு கால வரலாறு உண்டு. தமிழகத்தின் பன்முகப் பண்பாட்டு அடையாளம், இந்த மதங்களைப் போலவே இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வேற்று மொழி பேசும் சமுதாயங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளதுதான். இவை எல்லாவற்றையும் பற்றிய வரலாற்றாய்வு நூல்கள் பல்வேறு வரலாற்றாய்வாளர்களால் – இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான்.
தமிழகத்தில் கிறிஸ்தவ மதம் பரவியதற்கான சமூக, பண்பாட்டுக் காரணங்கள், அது சந்தித்த இன்னல்கள், கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், மோதல்கள், கத்தோலிக்கத்தைத் தழுவியவர்களுக்கிடையே ஏற்பட்ட சாதி ஏற்றத்தாழ்வுகள், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகள், சச்சரவுகள், கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் அதற்கு முன்பிருந்த தமிழ்ப் பண்பாட்டு மரபுகள், சடங்குகள் ஆகியவற்றைத் தன்வயமாக்கிக்கொண்ட நிகழ்வுகள், அவர்கள் வாழ்ந்த பகுதிகள்மீது நாயக்கக் குறுநில மன்னர்கள் மட்டுமல்ல, அவர்களோடு கூட்டுசேர்ந்து இஸ்லாமியர்களும் நடத்திய தாக்குதல்கள் (அவை மதத்துக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் அல்ல; அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டவை), கிறிஸ்தவர்களிடையே வழங்கும் ஐதீகங்கள், கட்டுக்கதைகள் முதலியவை பற்றிய இனவரைவியல் (ethnology), வரலாற்றியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகியவற்றின் அறிவுக்கோவை இந்த நூல், தமிழுக்கு கிறிஸ்தவம் அளித்த முக்கிய பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, முதலில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்கள் வாழ்ந்த புன்னைக்காயலில்தான் முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டு, அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் வெளியிடப்பட்டதை வலுவான ஆதாரங்களுடன் இந்த நூல் நிறுவுகிறது. அதனால்தான் இந்த நூலுக்குத் தென்னிந்தியாவின் முக்கியமான மானுடவியலர்களில் ஒருவரான பக்தவத்சல பாரதி ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார்; அவர் ஓர் இந்து. கிறிஸ்தவம், தமிழகத்தில் பரவியதையும் அது சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் எதிர்வினையையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் வாய்ப்பும் அனுகூலமும் மற்ற ஆய்வாளர்களுக்கு இருப்பதைவிட இந்த நூலாசிரியருக்கு இயல்பாகவே இருப்பதற்குக் காரணம், அவர் பிறப்பால் கிறிஸ்தவராக இருப்பதுதான் என்பதைச் சுட்டிக்காட்டும் பக்தவத்சல பாரதி, இது தமிழுக்கு வந்துள்ள செறிவான வரவு என்று பாராட்டுகிறார். இந்த நூலுக்கு இருவர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் சேசு சபையைச் சேர்ந்தவர். மற்றவர், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மேனாள் துணைக் கண்காணிப்புத் தொல்லியலரும் ஆராய்ச்சி வல்லுநருமான முனைவர் மார்க்ஸிய காந்தி. இவரும் இந்துதான். எனவேதான், தமிழக முதல்வருக்குப் பரிசாக வழங்கப்படத் தகுதியுள்ள நூல்தான் இது என்று கவிதா ராமு தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவரும் ஓர் இந்துதான்.
எல்லா நூல்களையும்போலவே, இந்த நூலும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்படக்கூடியதுதான். ஆனால், அந்த விமர்சனம் அறிவையும் ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, இது ஒரு மதப் பரப்புரை நூல், இதை முதல்வருக்குப் பரிசாகக் கொடுப்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தூக்கிப்பிடிக்கிற செயல், அது அரசமைப்புக்கு விரோதமானது என்று பேசுவது அறியாமையாலோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ செய்யப்படுவது தவிர வேறல்ல.
- எஸ்.வி.ராஜதுரை, மூத்த மார்க்ஸிய-பெரியாரியச் சிந்தனையாளர். தொடர்புக்கு: sagumano@gmail.com