கபீர் ஏன் இன்றைய இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார்?

கபீர் ஏன் இன்றைய இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார்?
Updated on
3 min read

நவீன இந்தியாவின் உயிர்நாடியான ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தை வலுவாக விதைத்தவர்களுள் மிக முக்கியமானவர் கவிஞரும் ஆன்மிக ஞானியுமான கபீர். கபீரின் சமாதி, கோயிலாகவும் தர்காவாகவும் அருகருகே அமைந்துள்ள அற்புதத்தை உத்தர பிரதேச மாநிலத்தின் மகர் நகரில் பார்க்கலாம்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் லட்சக்கணக்கான சாமானிய இந்தியர்கள் வரை சாதி மத வேறுபாடின்றி கபீரின் நினைவிடத்தில் இன்றும் வழிபாடு செய்கின்றனர். கபீர், இந்துக்களால் துறவியாகவும் முஸ்லிம்களால் பக்கிரியாகவும் போற்றப்படுகிறார்.

15-ம் நூற்றாண்டில் காசி நகரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த அனாதைக் குழந்தையான அவரை இஸ்லாமிய நெசவாளர் குடும்பம் வளர்த்தது. இராமானுஜாச்சாரியாரின் வழிவந்த ராமானந்தாச்சாரியார் காசி நகரில் சமத்துவ பக்திக் கொள்கையை அக்காலத்தில் பரவிட வழிசெய்துவந்தார்.

அவரது சீடர்களுள் தாழ்த்தப்பட்டவர்களும் செருப்பு தைப்பவர்களும் நாவிதர்களும் பிராமணர்களும் சிற்றரசர்களும் இருந்தனர். கபீருக்கு அவர் ராம மந்திரத்தை உபதேசித்தார். கபீரது ‘ராம்’ இப்பிரபஞ்ச நாயகன், மதங்களை, தேசங்களை, இனங்களைக் கடந்தவன். கடவுளுக்கு மதமோ சாதியோ நாடோ இனமோ கிடையாது என்ற எளிய ஆனால், அடிப்படையான உண்மையை கபீர் எடுத்துரைத்தபோது, அவரது பின்னால் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.

சமயங்கள் பல இருந்த காசி நகரில், சமயங்களைக் கடந்த ஆன்மிக மொழியில் கபீர் பேசினார். அக்காலத்தில் காசி நகரம் பல நம்பிக்கைகளும் கூடி வாழும் இடமாயிருந்தது. சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சூஃபியிஸம் எனப் பல்வேறு சமயத்தவர்களும் வாழ்ந்த இடம் காசி. புத்தர் காசி அருகிலுள்ள சாரநாத்தில்தான் தனது முதல் உபதேசத்தைத் தொடங்கினார்.

புரோகிதர்கள், சடங்குகள், மூடப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கலவையாக காசி இருந்தது. அந்த நகரில் பிராமணராகவும் இஸ்லாமியராகவும் ராம பக்தராகவும் ரகீமைத் தொழுபவராகவும் நெசவாளராகவும் ஞானியாகவும் இருந்தார் கபீர். ஞானியாக இருந்தபோதும் நெசவுத் தொழிலை அவர் விடவில்லை.

எழுத்தறிவில்லாத கபீர் ஆன்மிகப் பாடல்களை வாய்மொழியில் வழங்கினார். கபீரின் பாடல்கள் மக்கள் மொழிகளான பிரஜா, போஜ்பூரி, அவதி ஆகியவற்றால் தெருப் பாடகர்களால், கிராமியக் கவிஞர்களால், ஞானக் கிறுக்கர்களால் கங்கைச் சமவெளிக்கு அப்பாலும் குஜராத் வரை பரவின. கபீரின் சிறந்த பாடல்களை ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னர் உலகமெங்கும் கபீரின் கருத்துக்கள் பரவின.

ராமானந்தரின் மற்றொரு சீடரான ரவிதாசர் செருப்பு தைக்கும் தொழிலாளி. சீக்கிய மதத்தின் நிறுவனரான குருநானக், ராமானந்தர், கபீர், ரவிதாசர் ஆகியோரின் ஞானப் பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்தத்தில் தொகுக்கப்பட்ட பின் வடஇந்தியா முழுமையும் சமூக சமத்துவத்துக்கான குரல் சமயத்தின் வழியாக ஒலித்தது.

கபீர், ரவிதாசர், குருநானக் போன்றவர்கள் சமூக விடுதலைக்காகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், எளியவர்களின் உரிமைக்காகவும் சமயத்தையே ஆயுதமாக எடுத்தனர். கபீரின் பக்திக் கவிதைகள் புரட்சிக் கருத்துக்களைக் கூறின.

‘ஏழைகளை ஒடுக்காதே, யாருமற்றவர்கள் என நினைக்காதே

ஏழையின் பெருமூச்சு இரும்பையும் பொசுக்கும்’

என்ற கபீரின் பாடல், ஏழைகளின் விடுதலைக்கான குரலாக எழுந்தது.

‘ஜபமாலை உருட்டும்போது, மனச்சாட்சியை உருட்டிப்பார், உனதுள்ளே நான் உள்ளேன்’ என்ற கபீரின் கருத்து, அக்காலத்தில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.

‘ஆலயத்தில் தேடாதே, மசூதியில் தேடாதே,

கைலாயத்தில் தேடாதே, காபாவில் தேடாதே,

உள்மனத்தில் தேடு, உன்னிடத்தில் நான் உள்ளேன்’.

‘மண்ணுக்குள் புதையுண்டு புல் முளைக்கும் முன் நீ

செல்வமும் புகழும் தரும் செருக்கை விட்டுவிடு’

தனது இறுதிக் காலத்தில் காசியை விடுத்து கங்கைச் சமவெளி முழுவதும் கால்நடையாக நடந்து சமய சமத்துவ கருத்துக்களை கபீர் பரவச் செய்தார். காசியில் இறந்தால் முக்தி என்ற நம்பிக்கையை மாற்ற, அகிலமெங்கும் ஆண்டவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையை வலுப்படுத்த, மகர் நகரில் தனது இறுதிக் காலத்தைக் கழித்தார். கபீர் இறந்த பின்னர் அவரது நினைவிடத்தில் இந்துக்கள் கோயிலையும் முஸ்லிம்கள் தர்காவையும் கட்டி வழிபடுகின்றனர்.

சமயப் பிரிவுகளைத் தாண்டி, ஆன்மிகத் தளத்துக்கு மக்களை அவர் எடுத்துச்செல்ல முயன்றார் என்பதே அவரது கவிதைகள் சொல்லும் செய்தி. சமயம் என்பது இருமுனைகளைக் கொண்ட வாள்; அதனைச் சமூக அநீதிகளுக்கு எதிராக, சமூக விடுதலைக்காக கபீர் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

மக்களுக்குப் பல்வேறு காரணங்களுக்காகச் சமயம் தேவைப்படுகிறது என்றார் அம்பேத்கர். சமயமற்ற இந்தியா, நடைமுறையில் சாத்தியமற்றது. சமய வெறிக்கும் சமய நம்பிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. கபீர் இச்சிக்கலை மிக நுட்பமாகக் கையாண்டார். வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் சமய நம்பிக்கைகளைக் கொண்டே சமயத்தின் அநீதிகளை அறுக்க கபீர் முயன்றார்.

சித்தர்களும் ராமலிங்க அடிகளாரும் தமிழ் மண்ணில் இத்தகைய பணிகளைச் செய்தனர். உண்மையான சமயமும் ஆன்மிகமும் அமைதியையும் அன்பையும் ஒற்றுமையை வளர்க்கும். போலி சமயமும் மோசடி ஆன்மிகமும் வன்முறையையும் வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டும் என்ற செய்தியை கபீரின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது.

ஆன்மிகத்தில் சமூக நீதி என்ற விடுதலைச் செய்தியை கபீர், குருநானக், ரவிதாசர் போன்ற ஞானிகள் இந்தியாவுக்குத் தந்தனர். மத துவேஷங்களைக் கடந்த நவீன இந்தியா

வை, சமூக நீதி நிறைந்த புதிய இந்தியாவை உருவாக்கிட அவர்கள் பாடுபட்டனர். சமீப காலத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயண குரு, காந்தி உள்ளிட்டோர் சமத்துவமும் அமைதியும் அன்பும் நிறைந்த புதிய இந்தியாவை உருவாக்குவதற்குப் பெரும்பாடுபட்டனர். சமயமும் ஆன்மிகமும் மானுடத்தை மேம்படுத்த வந்தவை என்ற கபீரின் செய்தி இன்றைய இந்தியாவின் மேம்பாட்டுக்கான வழிகளுள் ஒன்றாகும்.

- வ.ரகுபதி, பேராசிரியர், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: ragugri@rediffmail.com

வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் சமய நம்பிக்கைகளைக் கொண்டே கபீர் சமயத்தின் அநீதிகளை அறுக்க முயன்றார். சித்தர்களும் ராமலிங்க அடிகளாரும் தமிழ் மண்ணில் இத்தகைய பணிகளைச் செய்தனர்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in