மேகேதாட்டு அணை: தமிழக அரசின் மௌனம்?

மேகேதாட்டு அணை: தமிழக அரசின் மௌனம்?
Updated on
3 min read

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமலேயே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு 2018-ல் மத்திய நீர்வளத் துறை கர்நாடக அரசுக்கு வரைவுத்திட்ட அறிக்கை தயார்செய்ய அனுமதி வழங்கியது.

இது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரைவுத்திட்ட அறிக்கை அனுமதி கொடுத்ததால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது, வரைவுத்திட்ட அறிக்கையைத் தயார்செய்யத் தடைவிதிக்க வேண்டிய தேவையும் இல்லை.

உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறியாமல், மேகேதாட்டு அணை கட்டுவதற்குச் சட்டப்படி அனுமதி இல்லை என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, புதிய முதல்வராகப் பொறுப்பேற்பவர்கள் மேகேதாட்டு அணை கட்டுவதைத்தான் தங்களின் அடிப்படை அரசியலாக முன்வைக்கிறார்கள். காங்கிரஸும் பாஜகவும் அங்கே இருக்கும் மாநிலக் கட்சிகளோடு இணைந்து, மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான ஒத்த கருத்தோடு தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கொள்கைரீதியில் உடன்பட்டிருந்தாலும் போராட்டக் களத்தில் பல பின்னடைவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மேகேதாட்டு அணைக்கு எதிரான போராட்டக் களத்தில் அன்று எதிர்க் கட்சியாக இருந்த திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விவசாயிகளோடு ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது எதிர்ப்புக் காட்டினார்கள்.

இதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கர்நாடகப் போராட்டக் களம் அமைதியாக இருந்த நிலையில், திடீரென கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு அணை கட்டுவதற்கான பாதயாத்திரை போராட்டத்தைத் தொடங்கியது.

தற்போதைய பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவியேற்ற உடனேயே அணை கட்டுவதைத் தன்னுடைய முதல் கடமையாக உறுதியேற்று, தொடர்ந்து பிரதமர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர், காவிரி மேலாண்மை ஆணையம் என்று எல்லோரையும் அணுகினார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணையைக் கட்ட இயலாது; அதற்கான அனுமதியைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறோம் என்று பிப்ரவரி 2022-ல் கர்நாடக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மறைமுகமாகச் சட்டவிரோத ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து வழங்கிவருகிறது. ஆணையத்தின் அனுமதி இல்லாமல் 2018-ல் வரைவுத்திட்ட அறிக்கை தயார்செய்ய கர்நாடகத்துக்கு மத்திய அரசின் ஜல்சக்தித் துறை அனுமதி கொடுத்தது.

இது தவறு என்று தெரிந்தும், மீண்டும் திட்ட அறிக்கையைத் தற்போது தன்னிச்சைப் போக்கோடு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, அனுமதி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. இச்செயல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரண்பாடாக உள்ளது.

கடந்த மூன்று கூட்டங்களில் காவிரி மேலாண்மை ஆணையம் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத்திட்ட அறிக்கையை விவாதிக்க மறுத்திருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம், காவிரி மேலாண்மை ஆணையம் எந்த ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டுமானாலும் ஆணையத்தில் அதிகாரமிக்க உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கும் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளின் பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையிலேயேதான் தீர்மானிக்க முடியும்.

அதன்படி, முதல் கூட்டத்தில் கேரளத்தின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். தமிழக அரசு மௌனம் காத்தது. 2021 ஆகஸ்ட் 31 அன்று நடக்கவிருந்த கூட்டத்துக்கு முதல் நாள் அன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராகக் கேரள அரசு தமிழகத்துக்குத் துணைநிற்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டோம்.

அதனை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர், எழுத்துபூர்வமாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உடனடியாகக் கடிதம் கொடுத்து, மேகேதாட்டு அணை கட்டினால், தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படும்; எனவே, கேரளம் அதை அனுமதிக்காது என்று திட்டவட்டமாக மறுத்தார். அதன்பின் பெரும்பான்மை அடிப்படையில் நடைபெற்ற மூன்று கூட்டங்களிலும் காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்துள்ளது.

இந்நிலையில், திடீரெனக் கடந்த மே 25 அன்று தமிழக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். வரும் ஜூன் 17 அன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசின் வரைவுத்திட்ட அறிக்கையானது விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காகக் கூட்டப் பொருளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கான சட்ட ஆலோசனையை மத்திய அரசின் சட்ட அமைச்சகம் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால், கடிதம் குறித்துத் தமிழக அரசு வெளிப்படையாக எதையும் தமிழக விவசாயிகளுக்குத் தெரிவிக்க முன்வரவில்லை. இதற்குப் பிறகு மே 27 அன்று பிரதமரும் தமிழக முதல்வரும் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர். அப்போதும்கூட மேகேதாட்டு குறித்து முதல்வர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

கடந்த ஜூன் 4 அன்று ‘தி இந்து’ ஆங்கில இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹர்தால், தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் குறித்துத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகுதான் தமிழகத்தில் இக்கடிதம் குறித்தான தகவல் பரவத் தொடங்கியது. இதன் பிறகுதான், அன்று மாலை நீர்வளத் துறை அமைச்சர் இக்கடிதத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இக்கடிதத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை. 2021 ஏப்ரல் 12-ல் எனது தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு மேகேதாட்டுப் பகுதியில் பார்வையிட்டு, அணை கட்டுவதற்கும் சாலை அமைப்பதற்கும் கருங்கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதையும், சாலைகள் அமைக்கப்பட்டுவருவதையும் நேரில் கண்டோம். பத்திரிகைச் செய்தியை ஆதாரத்தோடு வெளியிட்டோம்.

அச்செய்தியை ஏற்றுக்கொண்ட தென்னிந்தியப் பசுமைத் தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்குப் பதிவுசெய்து, விசாரணைக் குழு அமைத்து ஆய்வுசெய்ய உத்தரவிட்டது. இத்தீர்ப்பு குறித்து மேல் முடிவு எடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாறாக, டெல்லியில் இருக்கும் மத்திய அரசின் பசுமைத் தீர்ப்பாயமோ, தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்துசெய்து, சட்டவிரோதமாக கர்நாடகத்துக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது. இது தமிழக அரசுக்குத் தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது குறித்து இதுவரையிலும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பான போராட்டங்களுக்குத் துணைநின்றது திமுக. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் விவசாயிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது.

‘அரசியல் அணி என்ற பெயரால் காவிரி உரிமை பறிபோய்விடுமோ?’ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் ‘அரசியல் அணி’ என்கிற போர்வையில் அரசியல் கட்சிகள் மெளனம் காத்தாலும், காவிரிதான் தங்கள் வாழ்வாதாரம் என்கிற நிலையிலிருந்து துளியும் விட்டுக்கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

தமிழகத்தின் அரசியல் கட்சிகள் இதில் கவனம் செலுத்த முன்வருவார்களா? கொள்கை வேறு, ஆட்சி வேறு, தேர்தலுக்கான கூட்டணிகள் வேறு, உரிமைக்கான போராட்டங்கள் வேறு என்கிற பார்வையோடு தமிழகம் ஒன்றுபட்டால் மட்டுமே காவிரியை மீட்க முடியும். மேகேதாட்டு அணையைத் தடுக்க முடியும்.

- பி.ஆர்.பாண்டியன், பொதுச்செயலாளர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.

தொடர்புக்கு: p.r.pandi1968@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in