

உடலில் கட்டி என்றாலே கண் கலங்கும் காலம் இது. அதிலும் புற்றுக்கட்டி என்று சொல்லிவிட்டால், அலறி ஆர்ப்பரிக்காத ஆட்களே கிடையாது. அதற்கு வழங்கப்படும் அறுவைசிகிச்சை, கதிர்வீச்சுச் சிகிச்சை போன்றவற்றை நினைத்தாலே அநேகருக்குக் குடலைப் புரட்டும்.
‘இனி அந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் வேண்டாம். வெயில் காலத்தில் வரும் வேனல் கட்டிபோலத்தான் இனி புற்றுக்கட்டியும். அதை மருந்து வாயிலாக 100% கரைத்துவிடலாம்’ என்ற ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ‘டோஸ்டர்லிமாப்’ (Dostarlimab). அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மலக்குடல் புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிமிடத்தில் உலகளாவிய மருத்துவர்களிடம் இது பேசுபொருளாகியுள்ளது.
அது என்ன ‘டோஸ்டர்லிமாப்’?
மலக்குடல் புற்றுநோய் சிகிச்சையில் புகுந்துள்ள ஒரு புதிய மருந்து, டோஸ்டர்லிமாப். இது ஒற்றைப் படியாக்க எதிரணு மருந்து (Monoclonal antibody) வகையைச் சேர்ந்தது. செயல்முறையில் இதை வகை பிரித்தால், இது ஒரு ‘தணிக்கைத் தடுப்பான்’ (Checkpoint inhibitor) வகை மருந்து.
கருப்பையில் புற்றுநோய் (Endometrial cancer) உள்ளவர்களுக்கு இதை வழங்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (FDA) ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளது. நம்மை அதிகம் தாக்கும் புற்றுநோய் வரிசையில் குடல் புற்றுநோய் நான்காமிடத்தில் இருக்கிறது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, 2020-ல் மட்டும் உலகளவில் 20 லட்சம் பேருக்கு மலக்குடலில் புற்றுநோய் வந்திருக்கிறது. இவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் ஒளியாக வந்திருக்கும் டோஸ்டர்லிமாப் குறித்த அமெரிக்க ஆய்வு என்ன சொல்கிறது?
புற்றுநோய் சிகிச்சையில் புதுமை
நியூயார்க்கில் இருக்கும் ‘மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மைய’த்தில் (Memorial Sloan Kettering Cancer Center) மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு என்று மொத்தம் ஆறு மாதங்களுக்கு ஒரு சோதனை முயற்சியாக டோஸ்டர்லிமாப் மருந்து வழங்கப்பட்டது. சிகிச்சையின் முடிவில் அவர்களைப் பரிசோதித்தபோது, அவர்களின் மலக்குடலில் புற்றுநோய் இருந்த அடையாளம் துளியும் இல்லை.
திசு ஆய்வு, கொலனோஸ்கோப்பி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ‘பெட்’ ஸ்கேன் (PET scan) உள்ளிட்ட எல்லாவித நவீனப் பரிசோதனைகளிலும் முடிவுகள் அவர்களுக்கு இயல்பாக இருந்தன. இது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த 12 பேரும் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள். மேலும், அவர்களுக்குக் குடலில் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் நெரிகட்டிகளுக்கும் புற்று பரவியிருந்தது.
ஆனால், அந்தப் புற்றுப் பரவலும் காலியாகியிருந்தது என்பது கூடுதல் ஆச்சரியம். பொதுவாக, புற்றுநோய்க்கு வழங்கப்படும் அறுவைசிகிச்சை மற்றும் கதிர்வீச்சுச் சிகிச்சையைத் தொடர்ந்து குடலியக்கத்தில் பிரச்சினை வரும்; மலத்தை அடக்க முடியாது; அது தானாகவே கழிந்துவிடும்; சிறுநீர்ப் பையில் பிரச்சினை வரும்; மலட்டுத்தன்மை ஏற்படும். ஆனால், இந்த மருந்தால் இம்மாதிரி எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது வியப்புக்குரிய ஒரு அம்சம்.
இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?
நம் தடுப்பாற்றல் மண்டலத்தில் ‘டி’ செல்கள் (T cells) இருக்கின்றன. இவைதான் புற்று செல்களைத் தாக்கி அழிக்கின்றன. இந்த இடத்தில் சில ‘தணிக்கைப் புரதங்க’ளைத் (Checkpoint proteins) தெரிந்துகொள்ள வேண்டும். புற்று செல்களில் இருப்பது ‘பி.டி-எல்.1’ (PD-L1) புரதம். ‘டி’ செல்களில் இருப்பது ‘பி.டி-ஒன்.’ (PD-1) புரதம்.
இந்த இரண்டும் இணைந்துவிட்டால் ‘டி’ செல்களால் புற்று செல்களை அழிக்க முடியாது. இந்தப் புரதங்களை இணைய விடாமல் தடுப்பவை சில மரபணுக்கள். இவற்றின் பலனால் புற்றுசெல்கள் திட்டமிட்டபடி இறந்துவிடுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. இதற்குத் ‘திட்டமிட்ட இறப்பு’ (Programmed death-PD) என்பது மருத்துவ மொழி.
மலக்குடல் புற்றுநோயாளிகளில் ஒரு சிறப்புப் பிரிவினர் இருக்கின்றனர். இவர்களுக்கு மேற்படி மரபணுக்களில் குறைபாடு இருக்கும் அல்லது பொருத்தமில்லாத மரபணுக்கள் இருக்கும். இது சரிப்படுத்த முடியாத ஒரு குறைபாடு என்பதால், இந்த நோயைப் ‘பொருத்தமின்மையைச் செப்பனிட முடியாத குறைபாடு’ (Mismatch Repair–Deficient) என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்தக் குறைபாடு இருக்கிற காரணத்தால், இவர்களுக்கு ‘பி.டி-எல்.1’ புரதமும் ‘பி.டி-ஒன்.’ புரதமும் எளிதில் இணைந்துவிடுகின்றன. அப்போது புற்று செல்கள் உருமாறி நம் தடுப்பாற்றல் மண்டலத்தின் பார்வையிலிருந்து தப்பித்துவிடுகின்றன. இதனால், ‘டி’ செல்களால் புற்று செல்களை அழிக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது; திட்டமிட்ட இறப்பும் நிகழ்வதில்லை; தொடர்ந்து புற்று செல்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இதைச் சரிசெய்கிறது, டோஸ்டர்லிமாப். எப்படி?
மருத்துவ அதிசயம்
முதலில், இது ‘பி.டி-எல்.1’ புரதமும் ‘பி.டி-ஒன்.’ புரதமும் இணைவதைத் தடுத்துவிடுகிறது. அடுத்து, புற்று செல்களின் உருமறைப்பைத் தோலுரித்துக் காட்டுகிறது. அப்போது நம் தடுப்பாற்றல் மண்டலம் அந்தப் புற்று செல்களைக் கவனிக்கிறது. அவை நம் உடலுக்கு ஆகாதவை என்று அது கணிக்கிறது; அவற்றை அழிக்க ‘டி’ செல்களைத் துரிதப்படுத்தி அனுப்புகிறது. அதன் பலனால், ‘டி’ செல்கள் புற்று செல்களைத் தாக்கி அழித்துவிடுகின்றன.
அதாவது, டோஸ்டர்லிமாப் மருந்து நேரடியாகப் புற்று செல்களை அழிக்கவில்லை என்றாலும், சீரான மரபணுக்கள் செய்ய வேண்டிய வேலையை அது செய்ய வைக்கிறது. அதன் மூலம் புற்று செல்களை இறக்க வைக்கிறது. புற்றுநோய் இருந்த இடம் தெரியாமல் காலியாகிறது. இதுதான் டோஸ்டர்லிமாப் செய்துள்ள ஒரு மருத்துவ அதிசயம். இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் லூயிஸ் ஆல்பெர்ட்டோ டையஸ் (Dr Luis Alberto Diaz) தலைமையிலான அமெரிக்க மருத்துவர்கள், இந்த வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடும் வேளையில், பிரபல இந்தியப் புற்றுநோய் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சாமானியருக்கும் எட்டுமா?
‘புற்றுநோய் இல்லாத புதிய உலகம் படைப்பதற்கு இந்த ஆய்வு வழி செய்திருக்கிறது. பெரும்பாலான நோயாளிகள் புற்றுநோயின் முற்றிய நிலையில்தான் முறையான சிகிச்சைக்கு வருவதால், இதை முழுவதுமாகக் குணப்படுத்துவது என்பது இன்றளவும் எட்டாத தொலைவாகவே இருக்கிறது.
இப்போது இதை எட்டும் தொலைவாக மாற்றியுள்ளது, டோஸ்டர்லிமாப்’ என்று பாராட்டும் அதே வேளையில், ‘இது புதியதோர் ஆய்வின் ஆரம்பக் கட்டம்தான்; இதை வைத்து வழக்கமாகப் புற்றுநோய் சிகிச்சையில் பின்பற்றப்படும் நெறிமுறைகளில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
இனியும் நிறைய பேரிடம் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு புற்றுநோய்ப் பிரிவுகளில் இந்த ஆய்வை விரிவுபடுத்த வேண்டும். அடுத்த சில வருடங்களில் இப்போது குணமாகியுள்ள புற்றுநோயாளிகளுக்கு மறுபடியும் புற்றுநோய் வருகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதன் பிறகே அதிகாரபூர்வமாக இதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். மேலும், இப்போதைக்கு ஒரு தவணை மருந்துக்கு 8.55 லட்சம் ரூபாய் செலவாகிறது என்கின்றனர். இது சாமானியர் கைக்கும் எட்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும்’ என்று இந்த ஆய்வில் அறியப்பட வேண்டிய எதிர்காலத் தீர்வுகளையும் அவர்கள் முன்வைக்கிறனர்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com