

உங்களுக்கு ஓவிய ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
எனக்குச் சொந்த ஊர் நன்னிலம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றேன். எனது ஓவிய ஆசிரியர்கள் அல்போன்சா, வித்யாஷங்கர் ஸ்தபதி. எனது முதல்வர் சிற்பி தனபால். இவர்கள் எனக்கு அமைந்தது எனது கலைப் பாதையை நன்கு உருவாக்கம் செய்தது. என் ஊருக்கு அருகில் உள்ள மாப்பிள்ளை குப்பம் என்ற கிராமத்தில் சுடுமண் சிற்பங்கள் செய்வார்கள். அய்யனார், நாட்டார் உருவங்கள் (ஆண், பெண்) போன்றவற்றையும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகச் சிற்பமும் செய்வார்கள். இதெல்லாம் எனது சிறு வயதில் நான் பார்த்து எனது மனதில் பதிந்தவை. கிராம ஜனங்கள், கிராம வழிபாடு, அங்குள்ள கால்நடைகள், அந்த இயற்கைச் சூழல் இவற்றிலெல்லாம் மனதைப் பறிகொடுத்து ஓவியங்களாக்குவேன். கல்லூரி முடித்ததும் ‘Handicrafts and Handlooms Export Promotion Council’ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.
நீங்கள் கண்டறிந்த குத்தினி வகை ஓவியங்கள் பற்றிச் சொல்லுங்கள்..
குத்தினி என்பது நாம் இப்போது பயன்படுத்தும் வெல்வெட் துணி வகையை சாட்டின் இல்லாமல் கைத்தறி மூலம் நெய்வதுதான். பட்டுநூல்காரர்கள் என்று கூறப்படும் மஹாராஷ்டிர நெசவுக் கலைஞர்கள் தஞ்சாவூர், அய்யம்பேட்டை, பாபநாசம், மதுரை ஆகிய இடங்களில் தங்கி பட்டுநெசவுத் தொழிலில் ஈடுபட்டார்கள். தஞ்சாவூரை மராட்டியர்கள் ஆட்சி செய்தபோது, அந்தக் குடும்பங்களுக்குத் தேவையான ஆடைகள், துணி வகைகள் மற்றும் அவர்கள் வழிபடும் கிருஷ்ணர் கோயில்களுக்குத் தேவையான திண்டு, குடை போன்ற பல பொருட்கள் செய்வதற்குக் குத்தினி என்ற கைத்தறி நெசவு முறையில் பளபளப்பான துணி வகைகளைத் தயார்செய்தார்கள். அதிகம் அறியப்படாத கலைகளைத் தேடி வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பேட்டை கிராமத்தில் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். நான் அவர்களுடனே தங்கி குத்தினி நெசவு முறையை அவர்கள் தொடங்குவதற்கான வழிவகைகளைச் செய்தேன்.
இதுபோன்று வேறென்ன கலைகளை உங்கள் பயணத்தில் தேடிக் கண்டறிந்தீர்கள்?
ஆந்திரத்தில் சித்திபேட் தாலுகாவில் சேரியால் என்னும் கிராமத்தில் கண்டறியப்பட்ட ஒரு ஓவியம் உள்ளது. அப்போது அங்குள்ள சில கிராமங்களில் கதைசொல்லிகள் என்று ஒரு இனமே இருந்தது. அவர்களுக்குப் பெயர் பிச்சகாடுலு. ஊர் ஊராகச் சென்று கதை சொல்வதுதான் அவர்கள் தொழில். அவர்கள் சொல்லும் கதையெல்லாம் பெரும்பாலும் புராணக் கதைகளாக இருக்கும். காட்சியுடன் அவர்கள் சொல்லும் கதைகளை மக்கள் விரும்பினார்கள். அதுதான் அவர்களைத் தனித்துக் காட்டியது. அவர்கள் கதை சொல்லும் இடத்துக்குப் பின்னால் விளக்கொளியோடு ஓவியங்களை வைத்திருப்பார்கள். அவற்றை வரைவதற்கென்று ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இருப்பார்கள். அவர்களின் பெயர் சித்ரகார். இந்த ஓவியர்களுக்குக் கதை தெரியாது. கதைசொல்லிகள் தங்கள் கதைகளுக்குத் தேவையான ஓவியத்தைக் கேட்பார்கள். கிருஷ்ணன் வருகை, ராஜா குதிரையில் செல்வது, ஆற்றைக் கடப்பது போன்ற விஷயங்களைச் சொல்வார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல சித்ரகார் தாங்களே தயாரித்த ஒரு தூரிகையை வைத்து அவுட்லைன் வரைந்துகொள்வார்கள். பின்பு, அவர்களுக்கென்று ஒரு வகையான பாணியில் ஓவியம் வரைவார்கள். வெள்ளை மட்டியில் கோந்து கலந்து அந்த வரையும் போர்டை உருவாக்குவார்கள். அந்த ஓவியத்துக்குப் பெயர் சேரியால் ஓவியங்கள். அப்போது இந்த கலையைப் பற்றி அரசுக்கும் வெளியுலகுக்கும் தெரியாது. நான் அந்தக் கிராமத்துக்குச் சென்று அவர்களுடனே தங்கி, அந்தக் கலையை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அங்கிருந்த நகாஷ் சந்திரய்யா என்ற ஓவியரின் ஓவியங்களைக் காட்சிப்படுத்திய பிறகு, அந்தக் கலைக்குக் குடியரசுத் தலைவர் விருது கிடைத்துப் பெரிய அங்கீகாரம் பெற்றது.
அதுபோல அனுப்புரம் என்ற ஊரில் லைட் வுட் எனப்படும் (puniki wood) தீக்குச்சி போன்ற மென்மையான மரங்களில் துணி வைத்து, வெள்ளை மட்டி பூசிப் பொம்மைகள் செய்யும் மக்களைக் கண்டறிந்தேன். இவர்களைப் போலவே விஜயவாடா அருகில் நிருமல் டாய்ஸ் என்று அதே போன்ற கலையைச் செய்தவர்கள் உண்டு. அதில் ஒரு தேர்ந்த கலைஞரை அழைத்துச்சென்று பொம்மைகள் செய்ய வைத்து அப்போது இந்திரா காந்தி ஆட்சியில் நெசவுத் துறை பெண் அதிகாரியான பூபுல் ஜெய்கர் மூலமாக அவரது கலைக்குத் தேசிய விருது வரையுமான அங்கீகாரம் கிடைக்க வழிசெய்தோம்.
வேறு அறியப்படாத ஓவிய வகைகள் பற்றி….
நான் நெசவுத் துறையில் துணை இயக்குநராக கர்நாடகத்தில் பணிபுரிந்தபோது ஷிமோகா மாவட்டத்தில் ஹசகோட்டா சித்ரா என்ற கிராமியக் கலையைக் கண்டறிந்தேன். ஷிமோகா மாவட்டம் மழைக் காடுகள் நிறைந்த பகுதி. அங்குள்ள தீவார் இனத்தவர்கள் கலைநயம் மிக்கவர்கள். குறிப்பாக, பெண்கள் மிகவும் நன்றாக ஓவியம் வரைவார்கள். வீட்டின் உள்ளே மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதன்மீது சில ஓவியங்கள் வரைந்து அதையே அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். அந்த ஓவியங்களில் உள்ள உருவங்கள் எல்லாம் பார்ப்பதற்கு மஹாராஷ்டிரத்தின் வார்லி ஓவியங்களைப் போன்று இருக்கும். அந்த ஓவியங்களை ‘கர்நாடகா கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்’ மூலமாக நிரந்தர விற்பனைக்கு வழிசெய்து கொடுத்தோம். இந்தக் கலையில் தேர்ச்சி பெற்ற ஈஸ்வர நாயக்குக்குத் தேசிய விருது கிடைத்தது. அதுபோல அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் உள்ள உலோகப் படைப்புகள் அங்குள்ள மக்களின் உபயோகத்துக்கும் அவர்களின் தெய்வ வழிபாட்டுக்கும் விழாக்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தமக்குத் தேவையான உருவங்களை அவர்கள் பாணியில் மண் கலவையால் தயார்செய்து காய்ந்த பிறகு, அதன்மேல் தேன்மெழுகு கொண்டு நூலிழை தயார்செய்து, அந்த மண் உருவத்தின் மேல் இன்னொரு உருவம் செய்கிறார்கள். பின்பு சில உலோகக் கலவைகள் மூலமாக உலோகச் சிற்பத்தை உருவாக்குவார்கள். இப்போது இந்தக் கலை நன்கு கவனம் பெற்றுள்ளது. அந்தக் கலைஞர்களின் பொருளாதாரமும் மேம்பாடு அடைந்துள்ளது.
இந்தத் தலைமுறை ஓவியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?
என் சமகால ஓவியர்களான விஸ்வம், சந்தானம், முனுசாமி, ஆதிமூலம் போன்றவர்கள் நமது கலாச்சாரப் பகுதிகளைக் கவனித்து அவற்றையே ஓவியங்களாக்கினார்கள். நானும் கலாச்சாரம், கிராமிய வாழ்வு, நாட்டார் வழிபாடு இவற்றையே ஓவியங்களாக்கினேன். நமக்கென்று மரபார்ந்த பின்புலங்கள் நிறைய உள்ளன. நாம் இழந்த புராதனங்களும் பொருட்களும் அதிகம். அந்தக் கலாச்சாரப் பாதைகளை ஓவியங்களாக்க வேண்டும். அதுதான் முக்கியமாகச் சொல்லத் தோன்றுகிறது.- வியாகுலன், கவிஞர், பதிப்பாளர், தொடர்புக்கு: ananya.arul@gmail.com