

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால், வேலைக்கும் அப்பால் கலை இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்ததால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறம் அவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத் துறைகளில் முதன்மையானதாக இருந்தது.
இரண்டாண்டு காலப் படிப்பை முடித்து, நல்ல ஓவியர்களில் ஒருவராக அனைவராலும் மதிக்கப்படுவராக உயர்ந்தார். பிற ஓவிய நண்பர்களோடு இணைந்து ஓவியக் கண்காட்சிகளில் தம் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார். அதே சமயத்தில், தன் விருப்பத்துக்குரிய மற்றொரு துறையான எழுத்துத் துறையிலும் அடியெடுத்து வைத்தார். 1967-ல் ஆனந்த விகடன் இதழில் வெளியான ‘வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்’ என்னும் சிறுகதை வழியாக அவருடைய இலக்கியப் பயணமும் தொடங்கியது. எதிர்பாராத வாழ்க்கை இடர்களால் ஓவியத்தில் தொடர்ந்து ஆழ்ந்து ஈடுபட முடியாமல் விலகிய விட்டல்ராவ், இலக்கியத்தையே தன் உலகமாக மாற்றிக்கொண்டார். கடந்த 55 ஆண்டு காலமாக அப்பயணம் தொடர்ந்தபடி இருக்கிறது. 12 நாவல்களும் 4 குறுநாவல்களும் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 10 கட்டுரைத் தொகுதிகளும் இதுவரை வெளிவந்துள்ளன.
1976-ல் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த நாவலுக்கான விருதை விட்டல்ராவ் எழுதிய ‘போக்கிடம்’ பெற்றது. வாழ்வின் நிமித்தமாக மனிதர்கள் இடம்பெயர்ந்து செல்லும் புள்ளியை மையமாகக் கொண்டது இந்நாவல். ஒவ்வொருவரும் தன் போக்கிடத்தை எவ்வாறு கண்டடைகிறார்கள் என்பதை வெவ்வேறு சித்திரங்களின் தொகுப்பாகச் சொல்லும் வகையில் விட்டல்ராவின் நாவல் அமைந்துள்ளது.
1981-ல் வெளிவந்த விட்டல்ராவின் ‘நதிமூலம்’ நாவல் அவரை ஓர் ஆளுமையாக உயர்த்தியது. நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் தொடங்கி இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வரைக்குமான நாற்பதாண்டு கால இடைவெளியை இந்த நாவல் தன் களமாகக் கொண்டிருந்தது. சிதைவும் மீள்கட்டமைப்பும் மாறிமாறி நிகழும் கிட்டாவின் குடும்ப வாழ்க்கை, ஓர் இந்தியக் குடும்பத்தின் படிமமாக அமைந்துவிட்டது. பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலுக்கு இணையான ‘நதிமூலம்’ தமிழ்நாவல் வரலாற்றில் ஒரு முக்கியமான படைப்பு. விட்டல்ராவ் பன்னிரண்டு நாவல்களுக்குச் சொந்தக்காரர். ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு களங்களைப் பின்னணியாகக் கொண்டது. ஓவியர்களின் கன்னிமுயற்சிகளைச் சித்தரிக்கும் ‘காலவெளி’, நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘வண்ணமுகங்கள்’, சென்னைவாழ் ஆங்கிலோ இந்தியக் குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் அயல் மாநிலமொன்றில் சந்திக்கும் அன்பின்மையையும் சித்தரிக்கும் ‘நிலநடுக்கோடு’, தொழிற்சங்க வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘காம்ரேடுகள்’ என சொல்லிக்கொண்டே செல்லலாம்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த, வாழும் சிற்பிகள், ஓவியர்கள், கலைஞர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளைக் கொண்ட விட்டல்ராவின் ‘கலை இலக்கியச் சங்கதிகள்’ ஒரு முக்கியமான ஆவணம். ஒரு குறிப்பிட்ட கலைஞரைப் பற்றி அறிய விரும்பும் வாசகருக்கு இப்புத்தகம் நல்ல அறிமுகத்தை வழங்குகிறது. விட்டல்ராவ் எழுதிய ‘தமிழகக் கோட்டைகள்’ ஒரு பயண நூலுக்கே உரிய சுவாரசியத்தோடும் வரலாற்றுத் தகவல்களோடும் அமைந்திருக்கும் முக்கியமான ஆவணம்.
விட்டல்ராவின் ‘வாழ்வின் சில உன்னதங்கள்’ புத்தகம் மற்றொரு சாதனைப் படைப்பு. இந்தப் புத்தக வாசிப்பு அனுபவம், கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இயங்கிய சென்னை நகரத்தின் பல்வேறு தோற்றங்களின் புகைப்படத் தொகுப்பைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்துக்கு நிகரானது. சென்னை மூர் மார்க்கெட்டிலும் பிற பகுதிகளிலும் இருந்த பழைய புத்தகக் கடைகளைப் பற்றியும், அங்கே தேடித்தேடி எடுத்துப் படித்த பழைய அரிய நூல்களைப் பற்றியும் பல தகவல்களை இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவுசெய்துள்ளார்.
விட்டல்ராவ் எழுதி, கடந்த ஆண்டில் வெளிவந்திருக்கும் ‘ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்’ புத்தகம் 70 ஆண்டுகளுக்கு முந்தைய சேலத்தைப் பற்றிய அனுபவச் சித்திரங்களைக் கொண்ட தொகுதியாக வெளிவந்து, நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல கட்டுரைகளில் ஒரு சிறுவனாகத் தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் ஒரு புனைகதை எழுத்தாளருக்கே உரிய அழகான மொழியோடு விட்டல்ராவ் சித்தரித்திருக்கிறார். அவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பக்கம், அவருடைய தன்வரலாற்றுச் சித்திரங்களாகவும், மறுபக்கம் நகரம் சார்ந்த வரலாற்றுச் சித்திரங்களாகவும் அமைந்துவிட்டன. ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ விட்டல்ராவ் எழுதிய மற்றொரு சாதனைப் படைப்பு. மெளனப் பட காலத்திலிருந்து எழுபதுகள் வரையிலான காலகட்டம் வரை திரைப்படக் கலை தமிழில் வளர்ந்த விதத்தை ஆய்வுப் பார்வையுடன் விட்டல்ராவ் இந்த நூலை எழுதியிருக்கிறார். எழுபதுகளில் தென்னிந்தியாவில் தொடங்கிய நவீன திரைப்பட எழுச்சி கன்னட மொழியில் வேரூன்றிச் செழித்து வளர்ந்த வரலாற்றின் தடத்தை அறிமுகப்படுத்தும் வகையில் விட்டல்ராவ் எழுதிய முக்கியமான புத்தகம் ‘நவீன கன்னட சினிமா’. நவீன கன்னட சினிமா வளர்ச்சிக்காகப் பங்காற்றிய இயக்குநர்கள், அவர்கள் இயக்கிய திரைப்படங்கள், நடிக நடிகையர்கள், தொழில்நுட்பம் சார்ந்து பங்காற்றியவர்கள் பற்றிய ஏராளமான தகவல்களோடு ஒரு கலைக்களஞ்சியமாக விட்டல்ராவ் அப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
எண்பது வயது நிறைவடைந்த விட்டல்ராவ் இன்றும் ஊக்கமுடன் எழுதிவருகிறார். தற்போது அவருடைய மூன்று தொடர்கள் வெவ்வேறு இதழ்களில் வெளிவருகின்றன. சிற்பங்கள் சார்ந்து ‘கலையும் காலமும்’ என்னும் தலைப்பில் ‘பேசும் புதிய சக்தி’ இதழில் ஒரு கட்டுரைத் தொடரும் அம்ருதா இதழில் ‘தொலைபேசி நாட்கள்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரும் வெளிவருகின்றன. தொலைபேசித் துறை வளர்ந்துவந்த தொடக்க காலத்தைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அவருக்கே உரிய படைப்புமொழியுடன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொடுத்துள்ளார். ‘புக்டே’ என்னும் இணையதளத்தில் இளமைக்காலத்தில் தான் கண்ட திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்திய, உலகத் திரைப்படங்களைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புரிந்துகொள்ளத் துணைசெய்யும் விதத்தில் ‘பயாஸ்கோப்காரன்’ என்னும் தலைப்பில் மற்றொரு கட்டுரைத் தொடரும் எழுதிவருகிறார். வற்றாத ஊக்கத்துக்கும் உற்சாகமான உரையாடலுக்கும் அடையாளமாக வாழ்ந்துவரும் படைப்பாளி விட்டல்ராவ்.
‘வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்’ என்பது விட்டல்ராவ் எழுதிய முதல் சிறுகதை. அர்ப்பணிப்பு மிக்க 55 ஆண்டுகால மகத்தான பங்களிப்பின் விளைவாக ‘கலைக்கு ஓர் அர்த்தம்’ என்று சொல்லத்தக்க வகையில், விட்டல்ராவின் கலை வாழ்க்கை வளர்ச்சி பெற்று ஒளிர்கிறது.
- பாவண்ணன், மூத்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: paavannan@hotmail.com