அஞ்சலி: தலைக்கோல் ஆசான் ஹேரம்பநாத நட்டுவனார்

அஞ்சலி: தலைக்கோல் ஆசான் ஹேரம்பநாத நட்டுவனார்
Updated on
2 min read

தஞ்சைப் பெரிய கோயிலில் கடந்த பத்தாண்டுகளாக சித்திரைப் பெருவிழாவை யொட்டி நடைபெறும் ‘சின்னமேளம்’ நாட்டிய நிகழ்ச்சி ஏனோ இம்முறை வழக்கத்தைவிடவும் கூடுதலாகக் களைகட்டியிருந்தது. பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்படாமலிருந்த அந்நிகழ்ச்சி, இம்முறை சற்று முன்னதாகவே தொடங்கி, சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியில் விருந்தினர்களையும் ரசிகர்களையும் வரவேற்றுப் பேசிய ஹேரம்பநாதனின் குரல், வழக்கம் போலன்றி சற்றே சோர்வுற்றிருந்தது. தஞ்சை நால்வர் என்றழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரின் சிறப்பு குறித்து விரிவாகப் பேச நினைத்திருந்தவர், விரைவாகவே தனது உரையை முடித்துக்கொண்டு, நாட்டிய மங்கைகளுக்கு வழிவிட்டு அமர்ந்தார். இவ்வாண்டின் ‘சின்னமேளம்’ நிகழ்ச்சி முடிந்த சில வாரங்களிலேயே (10 மே 2022) காலத்துடன் கலந்தார்.

பெருவுடையாரின் சீடர்

தஞ்சைப் பெரிய கோயிலில் நின்றுபோயிருந்த ‘சின்னமேளம்’ நிகழ்ச்சியைக் கடந்த 2010-ம் ஆண்டு (பெரிய கோயில் கட்டப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா) முதல் ஒவ்வொரு சித்திரையிலும் சீரும்சிறப்புமாக நடத்திவந்தவர் அவர். ஏறத்தாழ 20 நாட்கள் நடைபெறும் அந்நாட்டியத் திருவிழாவிற்காக அவர் எவ்வளவு பாடுபடுவார் என்பதைத் தள்ளிநின்று கவனித்திருக்கிறேன். இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும் இசை, நாட்டியக் கலைஞர்கள் வருவார்கள். பாவுப் பிள்ளை என்ற மாபெரும் இசை வித்தகருடைய மகனாகப் பிறந்து, சிறு வயது முதலே எண்ணற்ற இசை, நாட்டிய வல்லுநர்களை அருகிலிருந்து கவனிக்கவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்புப் பெற்றவர் ஹேரம்பநாதன். மிருதங்கத்தின் அடிப்படைகளைத் தந்தையிடமிருந்தும், வித்தகத்தை ராஜம் ஐயர் என்கிற ஆசானிடமிருந்தும் கற்றுக்கொண்டதாகக் கூறுவார். தனக்கு நட்டுவாங்கத்தைச் சொல்லிக் கொடுத்தது, பெரிய கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் பெருவுடையார்தான் என்பார். நட்டுவாங்கத்திலும் மிருதங்கத்திலும் ஒருசேர ஆளுமை செலுத்திய ஆசான்களின் வரிசை மிக நீளமானது. அதில் தஞ்சாவூர் கண்ணுசாமி, பைரவன், குடந்தை ராமதாசு, காஞ்சிபுரம் குப்புசாமி, முனுசாமி, ரங்கநாதன் உள்ளிட்டோரின் வரிசையில் இணைந்திருக்கிறார் ஹேரம்பநாதன்.

தஞ்சை பாணிக்கு இந்திய முகம்

தொழில்ரீதியாகப் பள்ளி ஆசிரியராக, தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் மொழியில் புலமை மிகுந்தவர். பின்னாட்களில் தஞ்சை நால்வருக்குப் பின்னர் – கிட்டப்பா பிள்ளைக்குப் பின்னர் – டி.எம்.அருணாசலம் பிள்ளைக்குப் பின்னர் – தஞ்சாவூர் பாணி பரதத்தின் அடையாளமாகவே அவர் மாறியது காலத்தின் ஆசீர்வாதம். மகத்தான ஆளுமைகளான மீனாட்சி சுந்தரம்பிள்ளை நட்டுவனார் (பந்தனைநல்லூர் பாணி), குப்பையா பிள்ளை நட்டுவனார் (திருவிடைமருதூர் பாணி), ராமையா பிள்ளை நட்டுவனார் (வழுவூர் பாணி) ஆகியோருக்கு இணையான உயரத்தைத் தொட்டவர் அவர்.

நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய மூன்று வகை ஆடல் முறைகளிலும், சதிராட்டம் என்கிற கோயில் கலையின் வடிவத்திலும் கரைகண்டவர். ‘ஒரு பரதநாட்டியக் கச்சேரியிலே நிருத்தமும் நிருத்தியமும் சமமான அளவிலே இடம்பெற வேண்டுமென்பது முன்னோர் வாக்கு’ என்பார் ஹேரம்பநாதன். தஞ்சாவூர் பாணியைச் சர்வதேச அளவில் மேடைகளில் கோலோச்சச் செய்தவர். வெளிநாட்டு மாணவிகள் பலருக்கும் பயிற்சியளித்து, வெளிநாடுகளில் பிரபலப்படுத்திய வகையில், தஞ்சாவூர் பாணிக்கு ‘இந்திய முகம்’ கொடுத்தவர் அவர் என்று சொல்லலாம். அவரிடம் தஞ்சாவூர் பாணி மட்டுமல்லாது, பந்தனைநல்லூர் பாணி, திருவிடைமருதூர் பாணி, வழுவூர் பாணி குறித்தும் மணிக்கணக்கில் உரையாட முடியும்.

மீளுருவாக்கப் பங்களிப்பு

மெலட்டூர் பாகவத மேளா என்னும் கலையை மீளுருவாக்கம் செய்ததில் மகத்தான பங்காற்றினார். ‘பாகவத மேளா’வை நடத்துபவர்கள், நடிப்பவர்கள், பாடுபவர்கள் என அனைவருமே பாகவத சிரோன்மணிகள். இந்நாடக் கதைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து எடுத்தாளப்படுபவை. இக்கலையின் பிதாமகரான வெங்கட்டராம சாஸ்திரிக்குப் பின்னர் – பரதம் நடேசய்யருக்குப் பின்னர் – ஹேரம்பநாதனே இக்கலையை மீட்டுருவாக்கம் செய்து, அடுத்த தலைமுறை பாகவத சிரோன்மணிகளுக்குக் கையளித்திருக்கிறார். அத்துடன், பேராசிரியர் இராமானுஜத்துடன் இணைந்து திருக்குறுங்குடி கைசிக நாடகத்தை மீட்டெடுத்தார். நாட்டிய மேதை அனிதா ரத்னத்துடன் இணைந்து கைசிக நாடகத்தைப் பலமுறை மேடையேற்றினார். குறவஞ்சி வடிவங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனிக் கவனம் செலுத்தினார். அவர் மேடையேற்றியதில் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, காங்கேயன் சிவகுறவஞ்சி போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

விருதுகளைப் பொறுத்தவரை அவருக்கு ஒரு பிரத்யேக கருத்து இருந்தது. “தகுதியான அமைப்புகளால், தகுதியான நபர்களின் கையால் நான் விருது பெற்றிருக்கிறேன்” என்று சொல்வார். சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றைவிடவும் ஏராளமான மாணவர்களை உருவாக்கி உலகம் முழுக்க மேடையேற்றியதையே அவர் பெருமையாகச் சொல்வார். அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த அவருடைய தட்டுப்பலகை மெளனித்துவிட்டது. இனி, ஹேரம்பத்தின் கீர்த்திதனை சீடர்களின் கால்களே சொல்ல வேண்டும்.

- ப.கலாநிதி, எழுத்தாளர், தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in